பதிவு செய்த நாள்
12
அக்
2013
09:10
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், விதவை பெண்கள் விளக்கேற்றி வைத்து, துர்கா பூஜை துவங்கப்பட்டது. கோல்கட்டா அருகில் உள்ள பாதேஷ்வரில், அப்பகுதி வாசிகளால், ஆண்டு தோறும், துர்கா பூஜை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டும், துர்கா பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் விளக்கேற்றி வைத்து பூஜையை துவங்குவது வழக்கம். விழா குழுவின், 75ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இம்முறை, துர்கையின் சொரூபமாகக் கருதப்படும், பெண்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இரு விதவை பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் விதவை பெண்கள் இருவர், விளக்கேற்றி துர்கா பூஜையை துவங்கி வைத்தனர். விழாவில், கவுரவிக்கப்பட்டதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக, இருவரும் தெரிவித்துள்ளனர். தாய்மையை கவுரவிக்கவே, விதவை பெண்களை அழைத்து விளக்கேற்ற வைத்ததாக, விழா குழுவின் தலைவர் கூறியுள்ளார்.