பதிவு செய்த நாள்
16
அக்
2013
10:10
திருநெல்வேலி: நெல்லை டவுனில் 24 சப்பரங்களும், பாளை., யில் 12 சப்பரங்களும் தசரா விழாவை முன்னிட்டு 36 சப்பரங்களின் அணிவகுப்பு நடந்தது. மைசூருக்கு அடுத்த படியாக நெல்லை, பாளை., யில் தசரா திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. தசரா திருவிழா கடந்த 5ம் தேதி அம்மன் கோயில்களில் துவங்கியது. தினந்தோறும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் தசரா திருவிழா நடந்தது. அம்மன் கோயில்களில் பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர். பால் அபிஷேகம் மற்றும் சகலவிதமான அபிஷேகங்களும் நடத்தப்பட்டது. இரவில் அம்மன் கோயில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பவனி நடந்தது. வண்ணார்பேட்டை பேராத்துச் செல்வி அம்மன், ஆயிரத்தம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு உச்சினிமாகாளி அம்மன், கிழக்கு உச்சினிமாகாளி அம்மன், புதுப்பேட்டை உலகம்மன், விஸ்வகர்மா உச்சினி மாகாளி அம்மன் உள்ளிட்ட 12 சப்பரங்கள் அணிவகுத்து சென்றன. சப்பரங்களுக்கு மின் விளக்குகளால் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பாளை., ராமசாமி கோயில் திடலில் காலையில் சப்பரங்கள் அணிவகுத்தன. மாலையில் கோபால சுவாமி கோயில் திடலிலும், இரவில் மார்க்கெட் திடலிலும் சப்பரங்கள் அணிவகுத்து நின்றன. நள்ளிரவு சமாதானபுரம் மைதானத்தில் சூரசம்ஹாரம் நடந்தது. தசரா திருவிழாவை முன்னிட்டு பாளை., மார்க்கெட் மைதானத்தில் தற்காலிக கடைகள், ராட்டினங்கள், மினி பொருட்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள், குழந்தைகள் கண்டு மகிழ்ந்தனர். தசரா திருவிழாவை காண வெளியூர்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்ததாலும், வெளியூரில் உள்ள பாளை., மக்கள் வந்திருந்ததாலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்ட நெரிசலால் இரவு நேரத்தில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
நெல்லை டவுன்: நெல்லை டவுன் அம்மன் கோயில்களில் தசரா திருவிழா கடந்த 5ம் தேதி துவங்கியது. தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நெல்லை கல்சுரல் அகடமி சார்பில் சப்பர அணிவகுப்பு நடந்தது. பகவத்சிங் தெரு துர்க்கை அம்மன், தடிவீரன் கோயில் தெரு தேவி ஸ்ரீ மாரியம்மன், திருப்பணி முக்கு மாரியம்மன், தடிவீரன் கோயில் மேலத்தெரு தேவி ஸ்ரீ சுந்தராட்சி அம்மன், சிவா தெரு முத்தராம்மன், மாதா கோயில் தெரு உச்சினிமாகாளி அம்மன், காவல்பிறை தெரு உச்சினிமாகாளி அம்மன், குற்றாலம் ரோடு முப்பிடாதி அம்மன், தெப்பக்குளத் தெரு வலம்புரி அம்மன், வாகையடி முப்பிடாரி அம்மன், புகழேந்தி தெரு முப்பிடாதி அம்மன், அக்கசாலை கோயில் தெரு உச்சினி மாகாளி அம்மன், மகிழ்வண்ணபுரம் தங்கம்மன், மேட்டுத்தெரு அறம் வளர்த்த நாயகி அம்மன், சாலியர் தெரு மாரியம்மன், பிட்டாபுரத்தி அம்மன், வெ.தாங்கி பிள்ளையார் தெரு திரிபுரசுந்தரி அம்மன், அரசரடி பாலத்தெரு ராஜராஜேஸ்வரி அம்மன், சந்தி விநாயகர் தெரு துர்க்கை அம்மன், தண்டியல் சாவடி உச்சினி மாகாளி அம்மன், சுந்தரர் தெரு உச்சினி மாகாளி அம்மன், அம்மன் சன்னதி தெரு உச்சினி மாகாளி அம்மன், தொட்டி பாலத்தெரு தங்கம்மன், முப்பிடாதி அம்மன் ஆகிய 24 சப்பரங்கள் நேற்றிரவு அந்தந்த கோயில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்டு, தேரடி திடலில் அதிகாலை 2 மணிக்கு அணிவகுத்து நின்றன. சப்பரங்கள் மின்னொளியில் ஜொலித்தன. அனைத்து சப்பரங்களும் காலை 4.15 மணிக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை நெல்லை கல்சுரல் அகடமி மற்றும் தென் மாவட்ட அனைத்து சமுதாய பூஜாரிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.