பதிவு செய்த நாள்
16
அக்
2013
10:10
இப்ராஹிம் நபி (ஸல்) அவர்களிடம் காணப்பட்ட, சிறந்த குணங்களை, நாமும் பின்பற்றினால், நம்முடைய இந்த உலக வாழ்க்கையும், மறு உலக வாழ்க்கையும் வெற்றியடையும்.
*இப்ராஹி நபி (ஸல்) அவர்கள், இறைவனுக்கு இணை வைக்கும் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை, அந்த நாட்டின் தலைமைப் பூசாரியாக இருந்தார். அப்படியிருந்தும், இப்ராஹிம் நபி, இணை வைப்புக் கொள்கையில், மூழ்கி விடாமல், தம்மைப் காத்துக் கொண்டார். இணை வைப்பின் எந்தச் சாயலும் இன்றி, தூய்மையாக வாழ்ந்தார்.
*நீர் அடிபணிவீராக என்றான் இறைவன். இதோ, அகிலங்களின் அதிபதிக்கு அடி பணிந்து விட்டேன் என்று, உடனே மறுமொழி கூறினார், இப்ராஹிம் நபி (பார்க்க குர் ஆன்2 131). வாயளவில் மட்டுமல்ல, செயலளவிலும், அவர் அப்படித் தான் வாழ்ந்தார் என்பதற்கு, குர்-ஆனிலேயே, பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இறைவனிடம் தம்மை முழுமையாக ஒப்படைத்தல் எனும் உயர்பண்பு, இப்ராஹிம் நபியிடத்தில், மேலோங்கி இருந்தது.
*அதிகம் பாவமன்னிப்புக் கோருபவராக இருந்தார். தம் தந்தை இணைவைப்பில் மூழ்கியிருக்கிறாரே என்று வருந்தி, அவருக்கும் கூட பாவமன்னிப்பு கோரினார். ஆயினும், அவர் அல்லாஹ்வின் பகைவன். ஆகவே, அவருக்காகப் பாவமன்னிப்பு கோரவேண்டாம் என்று, இறைவனே அறிவுறுத்திய பின், அதை அவர் விட்டு விட்டார்.
*இப்ராஹிம் நபி, இறைவனுக்கு நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார். வாழ்வில், எத்தகையச் சூழல் நிலவிய போதும், இறைவனையே சார்ந்து, அவனுக்கு நன்றி செலுத்தும் பண்பு, அவரிடம் மேலோங்கி இருந்தது.
*எந்த ஒரு கட்டத்திலும், எந்த ஒரு செயலின் போதும், நபி இப்ராஹிம் அவர்கள், இறைவனிடம் பிரார்த்தனை புரிபவராக இருந்தார். கஅபாவைக் கட்டி எழுப்பிய போதும், தம் குடும்பத்தினரை
ஆள் அரவமற்ற ஒரு பள்ளத்தாக்கில், விட்டு வந்த போதும், அவர் செய்த பிரார்த்தனைகள், நெஞ்சை நெகிழ வைக்கக் கூடியவை.
*இறைவனை வழிபடவேண்டும் என்பதில், அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு, ஈடு இணையே இல்லை. ஏக இறைவனை ஏற்றுக்கொண்டவர்
களுக்கு, ஒரு வழிபாட்டு இல்லம் தேவை என்பதற்காகத் தான், அவர், கஅபா எனும் புனித ஆலயத்தையே, கட்டி எழுப்பினார்.அந்த ஆலயத்தை தரிசித்து வருவதை (ஹஜ்), இறைவனுக்கு ஐந்து கடமைகளில் ஒன்றாக ஆக்கி விட்டான். பெற்றோர் ஓர் அருட்கொடை என்பதை, இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும். இப்ராஹிம் நபியவர்கள், தம் பெற்றோருக்கு, மிகுந்த மதிப்பு அளிப்பவராக இருந்தார்.உன்னைக் கல்லெறிந்து கொன்று விடுவேன் என, தந்தை மிரட்டிய போதும், அவரிடம் வெறுப்பு காட்டாமல், உங்கள் மீது சாந்தி நிலவட்டும். உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்திப்பேன் என்று, நல்லவிதமாகப் பதில் கூறி, மென்மையுடன் நடந்து கொண்டார்.
*நம் இல்லத்திற்கு, வானவர்கள், மனித உருவில் விருந்தாளிகளாய் வந்த போது, அவர்களுக்கு, ஒரு கன்று குட்டி இறைச்சியை பொரித்து, நன்கு உபசரித்தார். அவர்கள் எதுவும் சாப்பிடாததை கண்டபோது தான், அவர்கள் வானவர்கள் என்பதை உணர்ந்தார்.
*இப்ராஹிம் நபியவர்கள், எப்படிப்பட்ட பகுத்தறிவாளராக, உயர் சிந்தனையாளராக இருந்தார் என்பதை, அவருடைய அழைப்பு பணியிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம். அறிவை ஊட்டினார் என்பதை, குர் - ஆன் பல இடங்களில் அழகாக
கூறுகிறது.
*எந்த ஒரு சூழ்நிலையிலும், அவர் உண்மையாளராகத் திகழ்ந்தார். எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்த போதிலும், உண்மையிலிருந்து அவர் சற்றும் பின் வாங்கவில்லை. உண்மையாளராக வாழ்ந்து காட்டினார்.
குர்பானியின் சிறப்புகள்: இஸ்லாம், இரண்டு பெருநாட்களை, இந்த உலகிற்கு அளித்தது. ஒன்று, ரமலான் பண்டிகை; இன்னொன்று, தியாகத் திருநாளான பக்ரீத். இஸ்லாமிய சரித்திர ஆண்டு துவக்கமான, முஹர்ரம் மாதமும், கடைசி மாதம் துல் ஹஜ் இரண்டு, மாபெரும் தியாகங்களை உள்ளடக்கிய மாதங்கள்.கருணையே உருவான அல்லாஹ், ஒரு முறை, நபி இப்ராஹிம் (அலை) கனவில் தோன்றி, உம் மகன் இஸ்மாயிலை, என் பெயரால் அறுத்து பலி இடு என்று சொன்ன போது, தன்னை படைத்தவனின் கட்டளையை நிறைவேற்ற முடிவு செய்தார். ஏனென்றால், இறை தூதர்களுக்கு கனவுகள் என்றால், கடவுளின் கடிதங்கள் என்று தான் அர்த்தம்.தன் கனவை பற்றி, தன் அன்பு மகன் நபி இஸ்மாயிலிடம் (அலை) கூற, உங்களுக்கு அல்லாஹ் என்ன கட்டளையிட்டாரோ, அதை நிறைவேற்றுங்கள். நான், நிச்சயமாக பொறுமையோடு இருப்பேன் என்று, அவர் பதில் அளித்தார்.பின் இப்ராஹிம் (அலை), தன் மகன் இஸ்மாயிலை அழைத்து கொண்டு, மனா எனும் மலையடிவாரத்திற்கு சென்றார். பிள்ளைப் பாசம் தடுக்காமலிருக்க, தன் கண்களை துணியால் கட்டி, மகனுடைய கழுத்தில் கூரிய கத்தியை வைத்து, அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூறியதும், மகனிருந்த இடத்தில் ஒரு கொழுத்த ஆடும், மகன் விலகியிருந்த காட்சியையும் கண்டார்.எல்லாப்புகழும் இறைவனுக்கே; அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவன் அவனே; அவனைத் தவிர, வணக்கத்துக்குரியவர் வேறில்லை. நீயே என் அதிபதி என, தன்னை சோதித்த இறைவனுக்கு, நன்றி செலுத்தினார்.இதன் நினைவாக, எங்கள் நபிகள் முஹம்மத் (ஸல்), இந்நாளில், நீங்கள் அனைவரும், அந்த தியாகத்தை நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர்கள், ஓர் ஆட்டை குர்பானி கொடுத்து, அதன் கறியை, ஏழை எளியவர்களுக்கு கொடுத்து கொண்டாடுங்கள் என்றார்.நீங்கள் அறுத்த ஆட்டின் ரத்தமோ, இறைச்சியோ, என்னை அடைவதில்லை. ஆனால், உங்கள் உள்ளங்களின் எண்ணங்களை, நான் நன்கு அறிந்தவனாக உள்ளேன் என,
அளவற்ற அருளாளன் கூறுகிறான்.
குர்பானி கொடுப்பது, ஓர் உன்னதமான வணக்க வழிபாடு. குர்பானி கொடுக்கும் நாளில், குர்பானி கொடுப்பதை விட, அல்லாஹ் இடத்தில் வேறு சிறந்த வணக்கம், எதுவும் கிடையாது. குர்பானிக்காக, பிராணியை அறுக்கும் போது, அதன் ரத்தம் சொட்டும், பூமியில் விழுவதற்கு முன்பே, அல்லாஹ் இடத்தில், அது ஒப்புக் கொள்ளப்பட்டதாகி விடுகிறது.எனவே, மனம் திறந்து குர்பானி கொடுங்கள் என, நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார். ஒரு தடவை நாயகத்திடம், தோழர்கள், குர்பானி என்றால் என்ன? என்று வினாவியதற்கு, அது உங்களின் தந்தையாகிய நபி இப்ராஹிம் (அலை) உடைய வழிமுறை என, நாயகம் (ஸல்) பதிலளித்தார்.அதற்கு அந்த தோழர்கள், அதனால், நமக்கு என்ன நன்மை இருக்கிறது? என கேட்டனர்.குர்பானிக்காக அறுக்கப்படும் பிராணியின், ஒவ்வொரு ரோமத்திற்கும் நன்மை இருக்கிறது என, நாயகம் (ஸல்) பதில் அளித்தார்.குர்பானி, குறிப்பாக, மூன்று நாட்களில் மட்டுமே கொடுக்க வேண்டும். அவை, துல்ஹஜ் மாதத்தின், 10, 11 மற்றும் 12 தேதிகளில் எப்போது நாடுகிறோமோ, அப்பொழுது கொடுக்கலாம். ஆனால், துல்ஹஜ் மாதத்தின், 10வது நாளில், குர்பானி கொடுப்பது. மிகச் சிறந்தது.
குர்பானிக்காக அறுக்கப்படும் பிராணியின் கறியை, மூன்று பங்காக பிரிக்க வேண்டும். ஒரு பங்கை தன் குடும்பத்திற்காக வைத்துக் கொள்ள வேண்டும். இன்னொரு பங்கை நண்பர்கள், உறவினர்களுக்கு பங்கிட்டு தரவேண்டும். மூன்றாவது பங்கை, ஏழை, எளியவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு தர வேண்டும்.இத்தியாக திருநாளில், எல்லாரும் இறைவனிடம் கையேந்துவோம், இவ்வுலகை படைத்து பராமரிப்பவனே, அளவற்ற அருள் பொழிபவனே, நிகரற்ற அன்புடையவனே, தீர்ப்பு நாளின் அதிபதியே, உலக மக்கள் அனைவருக்கும், நேர்வழி காட்டுவாயாக...அன்பு, பாசம், பரிவு சகோதரத்துவம் ஓங்கச் செய்து, நம் நாட்டில் சுபிட்சம், அமைதி, சமாதானம், மனித நேயம், மதநல்லிணக்கம் ஏற்படுத்துவாயாக... ஆமீன்.நோய் நொடியற்ற வாழ்வு, இல்லாமை, கல்லாமை இல்லை என்ற நிலை ஏற்படுத்தி, எல்லோருக்கும், இந்த நன் நாளில் மட்டுமின்றி, இனிவரும் நாட்களிலும், சிறப்பான வாழ்வளிக்க உன்னையே வேண்டுகிறோம். வல்ல நாயகனே... ஆமீன்.
உலகம் எங்கும் அமைதியும், அன்பும் பரவட்டும்... ஆமீன். நன்றியும், கருணையும், நட்பும் சுரக்கட்டும்... ஆமீன். நிறம், மொழி, மதம், ஜாதி, இனம் தேசவெறி கொண்டு, மனிதன், தன் சக மனிதனை, துவேஷத்துடன் பார்க்கும் நிலை அகலட்டும்... ஆமீன்.
நீயா அழைத்தது: இஸ்லாமிய மார்க்கத்தில், ஐந்து கடமைகள் உண்டு. கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்.கலிமா என்றால், லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுரசூலில்லாஹ் என்பதாகும். இதன் அர்த்தம், இல்லை இறைவன் அல்லாஹ்வைத் தவிர, முஹம்மத் அல்லாஹ்வின் தூதர். இந்த கலிமாவை, ஒவ்வொரு முஸ்லிமும், மனப்பூர்வமாக சொல்ல வேண்டும்.தினசரி ஐந்து வேளை தொழுவது, முஸ்லிம்கள் கடமை. ப்ஜர் (காலை), லுஹர் (பகல்) அஸர் (மாலை) மரிப் (அந்திநேரம்) இஷா (இரவு) ஆகிய
தொழுகைகள்...: ஆண்டுக்கு ஒரு முறை பிறை பார்த்து, ரமலான் மாதத்தில், ஒரு மாதம் முழுக்க, 29 அல்லது 30 நாட்கள் நோன்பு வைப்பது மூன்றாவது கடமை.வசதியுள்ளவர்கள், தங்களிடம் உள்ள செல்வத்திலிருந்து, 2.5 சதவீதம், ஆண்டுதோறும், ஏழைகளுக்கு உதவி செய்வது ஜகாத்.வசதியுள்ளவர்கள், வாழ்க்கையில், ஒருமுறை ஹஜ் எனும் புனிதப்பயணம் செல்வது, அவர்களது ஐந்தாவது கடமை.மக்கா மாநகரில் உள்ள மஸ்ஜிதே. ஹரம் எனும் பள்ளிவாசல். முஸ்லிம்களின் முதல் பள்ளிவாசல். இதை கட்டியவர், இப்ராஹிம் (அலை) புதுப்பித்தவர் முகம்மது நபி (ஸல்) ஆண்டுதோறும், ஜில் ஹஜ் மாதத்தில், மக்காவிற்கு புனிதப்பயணம் செல்வது ஹஜ்.மற்ற காலங்களில் சென்றால், அது உம்ரா. ஒவ்வொரு ஆண்டும், ஹஜ் காலங்களில், 5 லட்சம் ஹாஜிகள் காபத்துல்லாஹ்வில் கூடுகின்றனர்.இனம், நிறம், மொழி, தேசம் என்ற பாகுபாடின்றி, அத்தனை மக்கள் அங்கே கூடுவது, பார்க்க பரவசமான காட்சி. லப்பைக் அல்லாஹீம்மா லப்பைக். லப்பைக் லாஷரீகலகலப்பைக் இன்னல் ஹம்த வல் நியமத...இதோ வந்து விட்டோம் இறைவா உன் அழைப்பை ஏற்று; உன் இடத்திற்கு, இதோ வந்துவிட்டோம் இறைவா, உன் அருட்கொடைகளுக்கு நன்றி கூற...: அங்கே சென்றிருக்கும் ஹாஜிகளின் புனிதப் பயணத்தை, இறைவன் ஏற்றுக் கொள்ளட்டும். ஆமீன். அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறட்டும். ஆமீன் இதுவரை ஹஜ் செய்யாதவர்களுக்கு, அந்த பாக்கியம் கிடைக்கட்டும். ஆமீன். உலகம் எங்கும் அமைதியும், அன்பும் பரவட்டும். ஆமீன்.நிறம், மொழி, மதம், இனம், தேச, வெறி கொண்டு, மனிதன் மனிதனை, துவேஷத்துடன் பார்க்கும் நிலை அகலட்டும். ஆமீன். தேச எல்லைகள் கடந்து, நாம் எல்லாரும் மனிதர்கள் தான், என்ற பரந்த எண்ணம் உருவாகட்டும். ஆமீன்.