பதிவு செய்த நாள்
16
அக்
2013
11:10
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் நேற்று முதல் துவங்கின. பக்தர்கள், ஏழுமலையானை தரிசிக்க, அதிகாலை முதல், நள்ளிரவு வரை பல்வேறு ஆர்ஜித சேவைகள் உள்ளன. ஆண்டுதோறும், பிரம்மோற்சவ விழாவின் போது ஆர்ஜித சேவைகள் நிறுத்தப்படும். அதன்படி, கடந்த, 5ம் தேதி முதல், 13ம் தேதி வரை பிரம்மோற்சவமும், நேற்று முன்தினம், எதிர் திசை வழியாக, நந்தவனத்திற்கு சென்று, அனந்தாழ்வாருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தற்போது, அனைத்து விழாக்களும் முடிந்த நிலையில், நேற்று முதல், அனைத்து ஆர்ஜித சேவைகளுக்கும், பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. வயோதிகர், கைக்குழந்தை உள்ள தாய்மார், மாற்றுத் திறனாளிகளுக்கு, கோவிலின் முன் வாசல் வழியாக நேரடியாக, கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வந்தது. பிரம்மோற்சவத்தின் போது, இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்காக கோவிலுக்கு முன்புறம் போடப்பட்டிருந்த, "ஷெட் நீக்கப்பட்டது.அந்த, சூஷெட்டை மீண்டும் அமைக்கும் பணி நடந்து வருகிறது. எனவே, நாளை (17ம் தேதி) முதல் அவர்கள் கோவில் முன்வாசல் வழியாக அனுமதிக்கப்படுவர் என,தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.