பதிவு செய்த நாள்
16
அக்
2013
03:10
எவ்வேலை யான் செய்ய எத்தனங்கள் செய்திடினும்
அவ்வேலை நன்றாய் அமையவே-செவ்வேலைச்
சித்தத்தினில் இருத்திச் செவ்வேள் பதமலரை
நித்தம் துதிப்பேன் நினைத்து
தமிழ்த் தாத்தா என்று போற்றப்பெறும் மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாதய்யர்(1942 ஆம் ஆண்டில்) நோயுற்று இருந்தபோது, அவரது இல்லத்துக்குச் சென்றார் 60 வயதுடைய ஒரு தமிழ்ப் பேரறிஞர். இவரைக் கண்டதும் ஐயரவர்கள் மகிழ்ச்சியோடு திருப்புகழ் ஆராய்ச்சி செய்த கையாயிற்றே என்று இவருடைய இரு கைகளையும் தம் கண்ணில் ஒத்திக் கொண்டாராம். உடனே இவர், ஐயரவர்களின் அடிகளைப் பற்றி சங்கத் தமிழ் நூல் ஏடுகளைத் தேடிச் சென்ற கால்களாயிற்றே! என்று கூறி வணங்கினாராம். என்ன அற்புதமான சந்திப்பு. பாருங்கள்!
பழநியில் 1943 ஆம் ஆண்டில், திருப்புகழ் மகாநாடு சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் அந்தத் தமிழ்ப் பேரறிஞருக்கு சூரியனார்கோயில் ஆதீனத் தலைவர் தவத்திரு மீனாட்சி சுந்தரதேசிகர் தணிகைமணி எனும் பட்டத்தை அளித்துப் பாராட்டினார். அத்தகைய பேறும் புகழும் பெற்றவர் டாக்டர் வ.சு. செங்கல்வராயப் பிள்ளை எனும் பேரறிஞர் இவர் திருத்தணிகேசன் திருவருளால் திருப்புகழைத் தேடி உலகுக்கு ஈந்த உத்தமரான வடக்குப்பட்டு த.சுப்ரமணிய பிள்ளை. தாயாரம்மாள் தம்பதிக்கு 1883-ல் மகனாகப் பிறந்தார். தமது தொடக்கக் கல்வியை நாமக்கல் மற்றும் கும்பகோணத்தில் கற்று, உயர்நிலைக் கல்வியைப் பல ஊர்களிலும் கற்க வேண்டியிருந்தது. திருவாரூரில் தமது வீட்டுக்கு அருகிலுள்ள குமரன் கோயிலுக்குத் தினமும் சென்று, ஆரூர் தேவாரப் பாக்களை ஓதி வழிபட்டு வருவார். தமது 16-வது வயதில் வெண்பா, கட்டளைக் கலித்துறை போன்ற பாவகைகளின் இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். அப்படிப்பட்ட நிலையில், அவர் எழுதிய முதல் பாடல்
கண்ணனும் வேதனும் போற்று முருகா கவின்மணியே
விண்ணவர் கோன்தன் பதம்பெறச் செய்த செவ்வேலவனே
பெண்ணொரு பாகன் அளித்த குமரா பெருநிதியே
தண்ணருளே பொழிதேவே தணிகை தயாநிதியே
திருவாரூர் தியாகராசமாலை என்ற நூலைப் போல தணிகைநாயகர்மாலை எனும் பாமாலையை அப்போது பாடிப் பரவினார் செங்கல்வராயர். தத்துவத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு பி.ஏ படித்தபோது, பல்கலைக்கழகத் தேர்வில் தமிழில் முதல் வகுப்பில் முதலாவதாகத் தேறி தங்கப் பதக்கமும் மன்னர் சேதுபதி பதக்கமும் பெற்றார். மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வில் முதலாவதாகத் தேறி எம்.ஏ தமிழ்ப் பாடத்தைப் படித்தபோது, ராமநாதபுரம் ராணியின் புலமை உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) இவருக்குக் கிடைத்தது. எம்.ஏ வகுப்பில் இவரது ஆசிரியராக இருந்தவர்கள் பரிதிமாற் கலைஞர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார். கோபாலாச்சாரியார். மறைமலை அடிகளார் முதலான பேரறிஞர்கள் ஆவர். கல்லூரியில் படிக்கும்போது பல பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்ற செங்கல்வராயர் தமது 22-வது வயதில் பத்திரப்பதிவுத் துறையில் வேலைக்கு அமர்ந்தார். தினமும் காலையில் திருப்புகழில் சில பாடல்களையும், இரவில் தலபுராணப் பாடல்களையும் படிப்பதை வழக்கமாகக் கொண்டு தமது தமிழறிவை வளர்த்துக்கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில முதல் தேதியன்று தணிகைவேலனைச் சென்று தரிசிப்பது இவரது வழக்கம். ஆலயத்துக்குச் செல்லும்போது தேங்காய் முதலான அர்ச்சனைக்கு எடுத்துச் செல்ல வேண்டியவற்றை மறவாதிருக்க, குக தேவா பூபா காவே என்ற அடியை நினைவுபடுத்திக் கொள்வாராம். இதில் கு-குங்குமம், க-கற்பூரம், தே-தேங்காய், வா-வாழைப்பழம், பூ-மலர், பா-பாக்கு; கா-தட்சணைக் காசு, வே-வெற்றிலை என்பதைக் குறிக்கும்.
அருணகிரிநாதர் அருளிய கந்தரநுபூதி, கந்தரலங்காரம் முதலியவற்றின் ஆராய்ச்சிகளை எழுதி விவேக போதினியில் வெளியிட்டார். தமது 38-வது வயதில் காமாலை நோயால் வருந்தியபோது இறைவனைத் தியானித்து, தணிகை நவரத்னமாலை எனும் பனுவலைப் பாடி, நோய் நீங்கப்பெற்றார். மாநில தலைமைப் பதிவாளரின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றி இரவு-பகல் பாராமல் உழைத்த இவருக்கு 1935 ஆம் ஆண்டில் ராவ்பகதூர் என்ற அரசாங்கப் பட்டம் கிடைத்தது.
அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின், சைவ சமய நூல்களை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற தீவிரமான எண்ணத்துடன் உழைத்தார். தமது 72-வது வயதில் அருணகிரியார் திருப்புகழ்ப் பாடல்கள் அனைத்துக்கும் அற்புதமாக எழுதினார். கந்தரலங்காரம், கந்தரந்தாதி, சுந்தரநுபூதி, திருவகுப்புகள், வேல் மயில் சேவல் விருத்தங்கள் என அனைத்து நூல்களிலும் உரை எழுதி அவற்றை ஆராய்ச்சியுடன் வெளியிட்டது இவர் வாழ்வில் செய்த மிகப் பெரிய சாதனை சைவத் திருமுறை பன்னிரண்டினைப் போல முருகவேள் பன்னிரு திருமுறை என வகுத்து முறைப்படுத்தியது. இவர் உள்ளத்தில் தோன்றியதாகும். தேனூர் வரகவி சொக்கலிங்கம் பிள்ளையவர்களைக் கொண்டு பன்னிரண்டாம் திருமுறையாக சேய்த்தொண்டர் புராணத்தை இயற்றச் செய்தார். முருகவேள் பன்னிரு திருமுறை
சேய்த்தொண்டர் புராணத்தை இயற்றச் செய்தார். முருகவேள் பன்னிரு திருமுறை எனப் பெயரிட்டு தம் நண்பர் கல்யாண சுந்தரம் ஐயர் என்பவரைப் பதிப்பாளராகக் கொண்டு அதை வெளியிட்டுச் சாதனைபுரிந்தார். இவர் எழுதியுள்ள அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும் என்ற ஒப்பற்ற ஆய்வு நூல், அனைவரும் படித்து இன்புற வேண்டிய அருமையான நூல்.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரது தேவாரப் பாடல்கள், மணிவாசகரது திருவாசகம், திருக்கோவையார் மற்றும் திருவிசைப்பா ஆகியவற்றை ஆய்வுசெய்து ஒளிநெறி என்ற பெயரில் சொல் தொகுதி விளக்கப்பட்டியல் எழுதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு பல்கலைக்கழகம் செய்யவேண்டிய பணியை, இவர் தமது வயதான முதுமைக் காலத்தில் ஒரு தனி மனிதராகவே செய்து சாதித்தது வரலாற்றில் பதிவுசெய்ய வேண்டிய ஒன்று.
இப்படிப் புகழ்பெற்ற தணிகைமணி செங்கல்வராயருக்கு, அவரது 87-வது வயதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (1969 ஆம் ஆண்டு)டி,லிட் என்னும் டாக்டர் பட்டமளித்துப் பாராட்டி கவுரவித்தது. செங்கல்வராயரின் ஆராய்ச்சி நூல்களும் இன்னும் பல நூல்களும் (எழுதிய நூல்கள் 25, ஆராய்ச்சிக் கட்டுரைகள் 15) இன்றளவும் ஆராய்ச்சியாளர்களுக்கும், சைவ நெறியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படுகின்றன. வாழ்வு எவ்வாறு அமைந்தாலும், அதனைத் தம் முயற்சியால் சிறப்பாக மாற்றிக்கொண்ட பெருமை இவரைச் சாரும். பாராட்டையும் புகழையும் இவர் தேடிச் சென்றதே இல்லை. இவரைப் பாராட்ட பலர் அழைத்தபோதெல்லாம் நான் என்ன செய்துவிட்டேன்! எனக்கெதற்குப் பாராட்டு? என வினவி வேண்டேன் புகழ் என்ற திருவாசகத்திலுள்ள வரியினைக் கோடிட்டுக் காண்பித்துத் தடுத்துவிட்டாராம்.
காலத்தின் ஒரு துளியையும் விரயம் செய்யாது, அதன் அருமை தெரிந்து உழைத்தவர் செங்கல்வராயர் கூனிக்குறுகி பிறர் உதவியோடு வாழவேண்டிய நிலையில் ஒன்பதாவது திருமுறையான திருவிசைப்பா ஆய்வை இவர் முடித்தது வியப்புக்குரிய செயல். தம் மனைவியின் பெயரை சிவா என்று மாற்றி அதன் மூலம் சிவநாமத்தை உச்சரிக்கும் பேற்றைப் பெற வழி செய்துகொண்டவர் இவர் யாருடனும் அன்பாகவும் நகைச்சுவையுடனும் பேசி அகம் மகிழ்வார். மிகவும் இசைஞானம் உடைய இவர், தம்மைத் தேடி வந்த அடியார்களை திருப்புகழ், தேவாரப்பாக்களை இசையுடன் பாடச்சொல்லிக் கேட்டு மனமகிழ்ந்தார். திருப்புகழ், தேவாரப் பாக்களின் முதலடி சொன்னால் போதும்; உடனே அது எங்கு, எப்பொருளில் வருகிறது என்பதைக் கூறும் திறமை பெற்றவர் செங்கல்வராயர்.
திருப்புகழில் ஆய்ந்து தோய்ந்திருந்த இவருடைய மனம் எந்நேரமும் எளிதாகப் பாடல் இயற்றிக்கொண்டே இருக்குமாம். தணிகை முருகன் மீது இவர் இயற்றியுள்ள நூல்கள் 16. இவரது தேவார ஆராய்ச்சி நூல்களைக் காணுகையில் இத்தகைய நூல்கள் எழுதுவதற்கு உரிய இலக்கண நூல்கள், இலக்கிய நூல்கள், சமய நூல்கள் புராணங்கள் ஆகியவற்றில் இவருக்கு இருந்த ஆழ்ந்த, தெளிந்த நினைவாற்றலை நாம் உணர முடிகிறது. ஒன்பது திருமுறைகளுக்கும் தாம் ஒருவராகவே ஆராய்ச்சி செய்து எழுதி முடித்துள்ளதை நினைக்கும்போது, இவரது அயரா உழைப்பையும் மனோ திடத்தையும் எண்ணி வியக்காமல் இருக்கமுடியவில்லை, அல்லவா?
காலம் தாழ்ந்து எதையும் செய்ய செங்கல்வராயருக்குப் பிடிக்காது. சிறிய விஷயமே என்றாலும், தாம் கொடுத்த வாக்கை மீறக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தார். 1971 ஆம் ஆண்டு தமது 88-வது வயதில் தணிகை முருகன் திருவடிகளில் கலந்தார்.
கந்தனது சந்நிதியில் அந்தாதி கழறுகையில்
சிந்தனையில் வரமறந்த சீர்கவியைக் கூறுநன்போல
வந்தவனைத் தொடமுயன்ற (வ.சு) செங்கல்வராயரது
செந்தகைய சிந்தையவர் செவ்வேள் பொற்பதம் போற்றி