பதிவு செய்த நாள்
22
அக்
2013
10:10
உடுமலை: உடுமலை அருகே, 3500 ஆண்டு பழமை வாய்ந்த கல்லறை உட்பட பல வரலாற்று சின்னங்கள், ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம், கொங்கல்நகரத்தில், கோவை, பி.எஸ்.ஜி., கல்லூரி கல்வெட்டியல் படிப்பு மாணவர்கள், பேராசிரியர் ரவி தலைமையில், ஆய்வு நடத்தினர். இதில், பழமை வாய்ந்த, கல்லறைகள் கண்டறியப்பட்டன. விவசாயி செல்வராஜ் தோட்டத்திலும், கோவில் தோட்டம் எனப்படும் பகுதியிலும், விவசாயி தம்பியின் தோட்டத்து கிணற்றின் பக்கவாட்டு சுவரிலும், இவை கண்டுபிடிக்கப்பட்டன. இதே கிராமத்து விளைநிலத்தில், 20 அடி உயர நடுகல்லையும் மாணவர்கள் ஆராய்ச்சி செய்தனர். பழங்கால மக்கள் இரும்பை உருக்கி, ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் தயார் செய்ததற்கான, இரும்புக் கசடுகள் மேற்பரப்பு ஆய்வில் கிடைத்தன. சாம்பல் மேடு பகுதியில், அக்கால மக்கள் பயன்படுத்திய, சிறிய மண்கலம், கருப்பு, சிவப்பு வண்ணப்பூச்சு உடைய மண்பாண்ட ஓடுகள் கண்டறியப்பட்டன; மசராயன் கோவில் பின்பகுதியில், மனித எலும்புகளும், முழுமை பெற்ற மண்கலங்களும் இருந்துள்ளன.
இது குறித்து, கல்வெட்டியல் பேராசிரியர் ரவி கூறியதாவது: கொங்கல்நகரம் கிராமத்தில், இனக்குழு காலகட்ட நாடோடி வாழ்க்கை முதல், வாழ்விடத்தை அமைத்து, பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இதில் கண்டறியப்பட்டுள்ள கல்பதுக்கை எனப்படுவது, இறந்தவர் நினைவாக மூன்று கற்களை கொண்டு, கல்லறை எழுப்பி, அதை வணங்கும் முறை. இவை, 3500 ஆண்டு பழமை வாய்ந்ததாக இருக்கலாம். ஒரே கிராமத்தில், இத்தகைய பல கட்ட வரலாற்று சான்றுகள் கிடைப்பது அரிது. உப்பாறுபடுகை எனப்படும் பகுதியில், மண்பாண்டம் மற்றும் இரும்பு பயன்பாட்டு காலத்திற்கான பல்வேறு சான்றுகள், கண்டறியப்பட்டுள்ளன. 300 ஏக்கர் பரப்பில், கொங்கல்நகரம் கிராமத்தில், இத்தகைய வரலாற்றுச் சான்றுகள் அதிகளவு உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.