பதிவு செய்த நாள்
26
அக்
2013
10:10
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சூலக்கல் அம்மன் கோவிலில், கும்பாபிஷேக திருப்பணி மந்தமாக நடப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். பொள்ளாச்சி அருகே உள்ளது சூலக்கல் அம்மன் கோவில். 300 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவில், கருவறையில் வடக்கு திசை பார்த்த சூலாயுத வடிவிலான அம்மன் காட்சியளிக்கிறார். மேலும், பிரதிஷ்டி தெய்வமாக சிலைக்கு பின் மேலும் ஒரு அம்மன் வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி விநாயகரும், வடக்கு மூலஸ்தானத்தில் உற்சவமூர்த்தியும் காட்சியளிக்கின்றனர். அம்மனுக்கு நேர்த்திக்கடனாக சுமார் 10 அடி உயரத்தில் ஐந்து குதிரை சிலை கட்டப்பட்டுள்ளன.கடந்த 1994ம் ஆண்டு இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் உள்கட்டமைப்பு, மண்டபம், சுற்றுச்சுவர் அனைத்தும் சிதிலமடைந்தது. இதனால், கடந்த 20 ஆண்டுகளாக கோவிலின் கும்பாபிஷேகம் நடக்கவில்லை. ஆண்டுதோறும் வைகாசி மாதம், தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். திருக்கல்யாணத்துடன் துவங்கும் இவ்விழா மூன்று நாட்கள் களைகட்டும். சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். அம்மன் தேரும், விநாயகர் தேரும் வீதிகளில் உலா வருவது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். ஆனால், கோவில் தேர் கரையான் அரித்து பழுதானதால் தேர்த்திருவிழாவும் நடத்தப்பட வில்லை.கடந்த ஓராண்டுக்கு முன் கோவில் மண்டபம் மற்றும் தேர் பராமரிக்க பல லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டும்; பணிகள் மிக மந்தமாக நடக்கின்றன. இதனால் பக்தர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர். விரைவில் தேர்த்திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து அறநிலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"சூலக்கல் அம்மன் கோவிலுக்கு மண்டப பணிகளுக்கு ரூ.15 லட்சமும், தேரை புதிதாக மாற்றியமைக்க ரூ.27 லட்சமும் கோவில் நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் துவங்கிய நிலையில், வரும் பிப்., மாதத்துக்குள் விழாக்கள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.