பதிவு செய்த நாள்
26
அக்
2013
11:10
மேட்டூர்: மேட்டூர் கால்வாயில் மீனவர் வலையில் சிக்கிய கோபுர கலசத்தை போலீஸார் மீட்டு விசாரிக்கின்றனர். மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில், 45,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நடப்பாண்டு மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில், ஆக.,2 முதல் பாசனத்துக்கு நீர்திறக்கப்பட்டது. சில நாட்களாக பாசன பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் வினாடிக்கு, 1,000 கனஅடியாக இருந்த நீர்திறப்பு கடந்த, 17ம் தேதி வினாடிக்கு, 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசன பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்ததால் நேற்று கால்வாய் பாசன நீர் நிறுத்தப்பட்டது. மேட்டூரில் உள்ள கிழக்கு மேற்கு கால்வாயில் தண்ணீர் வறண்டதால் மீனவர்கள் வலைவீசி மீன்பிடித்தனர். மீன்துறை அலுவலகம் அருகிலுள்ள கால்வாயில் நேற்று மதியம் மீனவர் ஒருவர் வலையில், ஒரு அடி உயரம் கொண்ட கோபுர கலசம் சிக்கியது. போலீஸார் மீனவர்களிம் இருந்து கலசத்தை மீட்டனர். கோபுரத்தில் உள்ள கலசத்தை கால்வாயில் வீசிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.