பதிவு செய்த நாள்
26
அக்
2013
11:10
சேலம்: சேலம் ராஜகணபதி கோவில் உண்டியல் மூலம், 11.54 லட்ச ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. சேலத்தில், 500 ஆண்டுகள் பழமையான ராஜகணபதி கோவில் உள்ளது. முதுநிலை தகுதிப்பெற்ற இக்கோவில், அதிக வருவாய் ஈட்டும் கோவில்களில் ஒன்று. கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மூன்று நிரந்தர உண்டியல்கள், இரு மாதத்துக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். செப்டம்பர், 9ல், விநாயகர் சதுர்த்தியையொட்டி, பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, கோவில் வளாகத்தில் கூடுதலாக இரு தற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டது. இந்த ஐந்து உண்டியல்களும், நேற்று திறந்து எண்ணப்பட்டது. கோவில் உதவி ஆணையர் மாரிமுத்து தலைமையில், சேலம் தலைமையிட உதவி ஆணையர் ராமு மேற்பார்வையில், ஆய்வாளர் உமா முன்னிலையில், பக்தர்கள் உள்பட, 25க்கும் மேற்பட்ட ஊழியர்கள், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காலை, 10 மணிக்கு துவங்கி, மாலை, 4 மணி வரை உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், காணிக்கையாக, 11.54 லட்சத்து, 453 ரூபாய் கிடைத்தது. தவிர, 9.800 கிராம் தங்கம், 172 கிராம் வெள்ளி மற்றும் பாரின் கரன்ஸி நோட்டுகள், 72 இருந்தது. தற்காலிக உண்டியல் மூலம், 22 ஆயிரத்து, 48 ரூபாய் கிடைத்தது. இதற்கு முன், ஆகஸ்ட், 13ல், நிரந்தர உண்டியல் மூலம், 7.72 லட்சத்து, 399 ரூபாய் கிடைத்தது. தற்போது, மூன்று லட்சத்து, 82 ஆயிரத்து, 54 ரூபாய் கூடுதல் காணிக்கையாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.