ராமேசுவரம் கடலில் கழிவுநீர் கலக்கும் அவலத்தை தடுக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2013 11:10
உலக புகழ் பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் சிறப்பு பூஜைகள் செய்து அக்னி தீர்த்தக் கடலில் நீராடுகிறார்கள். இந்த நிலையில் அக்னி தீர்த்தக் கடற்கரை பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் மனிதக் கழிவுகள், குப்பைகள் மற்றும் கழிவுநீர் ஆகியவை நேரடியாக கடலில் கலக்கின்றன. இதன் காரணமாக கடல்நீர் மாசடைந்து அதில் புனித நீராடும் பக்தர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து பக்தர்கள் கூறும் போது, பாவத்தை நீக்க கடலில் நீராட வருகிறோம்.ஆனால் கழிவுநீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நீராடுவதற்கு தயக்கமாக உள்ளது. பல வருடங்களாக கடலில் கழிவுநீர் கலக்கிறது. இதை நகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. ஆனால் அது தற்போது செயல்படாமல் உள்ளது. இனிமேலாவது தீவிர நடவடிக்கை எடுத்து புனித தீர்த்தமான அக்னி தீர்த்தக் கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நகராட்சி முன்வரவேண்டும்.