*நம்பிக்கை என்பது புயல்காற்றில் துவண்டு விழும் மெல்லிய மலர் அல்ல. அசையாமல் நிலையாக நிற்கும் இமயமலை போன்றது. *இதயத்தில் கடவுள் இருந்து நம்மை வழிநடத்துகிறார் என்ற உறுதி ஒருவனுக்கு இருக்குமானால், அவனால் அடைய முடியாத விஷயம் என்றும் ஏதுமிருக்காது. *யானைக்கு பலம் தும்பிக்கை. மனிதனுக்கு பலம் நம்பிக்கை. நம்பிக்கையின்மையே பலவீனம். என்ன துன்பம் நேர்ந்தாலும் தளராத நம்பிக்கையுடன் நாம் இருக்க வேண்டும். *உண்மை என்னும் கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் தோல்வி ஏற்பட்டாலும் கூட மனஅமைதி சிறிதும் குறையாது. *நம்பிக்கையின்மையே சந்தேகத்திற்கும் எல்லாம் தாய். அதே சமயத்தில், மூடநம்பிக்கையும், மூடத்தனமான உற்சாகமும் நிரந்தரமான நன்மையை உண்டாக்குவதில்லை. *பிறரிடமிருந்து நம்பிக்கையை இரவலாகப் பெற முடியாது. அது நம் உள்ளத்திலேயே உற்பத்தியாக வேண்டும். *உணர்ச்சி மூலம் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளலாமே அன்றி, அறிவு மூலமாக அதைப் பெற முடியாது. சொல்லப்போனால் அறிவு, நம்பிக்கைக்கு தடையாகவே இருக்கும். *வாழ்வில் தடுமாற்றம், மயக்கம் ஏற்படும் போதெல்லம் அறிவு பயன்படுவதில்லை. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்றும். *நம்பிக்கை இருப்பது போல நடிப்பதால் பயன் உண்டாகாது. பிறர் கூறும் வதந்தியான தீயசெய்திகளுக்கு, செவி சாய்ப்பதும் நம்பிக்கையின்மையின் அறிகுறியே. *நன்மையே விளையும் என்ற நம்பிக்கையுடன் லட்சியத்தை நோக்கி செயல்பட்டால் வெற்றி கிடைப்பது உறுதி. ஆனால், சிறிதும் ஆணவம் இருப்பது கூடாது. *குறைபாடு இல்லாத மனிதனே இல்லை. அதனால் அடுத்தவர்களின் குறைபாடுகளை மட்டும் கண்டிக்கும் அதிகாரம் நமக்கு இல்லை. *சந்தேகப்படாமல் முழுமையாக நம்புவதே நல்ல நட்பு. நண்பனின் குறைபாடுகளை அறிந்து நல்வழிப்படுத்தாதவன் நல்ல நண்பனாக மாட்டான். *ஆடம்பர பொருட்களை ஒருவருக்கொருவர் அளித்துக் கொள்வது நட்புக்கு விரோதமான செயல். அன்புடன் உதவி செய்து கொள்வது தான் நட்பின் அடையாளம். *பல விஷயங்களில் ஒற்றுமை வேண்டும் என்பது கூட நட்புக்கு அவசியமில்லை. அதற்காக, கருத்து வேற்றுமையால் மனக் கசப்பை உண்டாக்குவது கூடாது. *ஒவ்வொரு காலடியையும் நம்பிக்கையோடு எடுத்து வையுங்கள். உங்களின் பாதைக்கான ஒளியை காட்டி கடவுள் வழிகாட்டுவார். *நேர்மையாக வியாபாரம் செய்வது என்பது கடினம். ஆனால் அது ஒன்றும் முடியாத செயல் இல்லை.