பதிவு செய்த நாள்
30
அக்
2013
10:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி திருவிழா நவ., 3 காலை 9 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. கோயிலில் அன்று காலை அனுக்ஞை, யாகசாலை பூஜைகள் முடிந்து, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி முடிந்து, திருவிழா சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டப்படும். இதைதொடர்ந்து, காலை 10.30 மணிக்கு விரதமிருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும். திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் எழுந்தருளி திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் வருவர். காலை மாலையில் யாகசாலை பூஜைகளும், காலை 11 மணிக்கு சண்முகார்ச்சனையும் நடக்கும். முக்கிய நிகழ்ச்சியாக நவ., 7ல் வேல் வாங்குதல், நவ., 8ல் சூரசம்ஹாரம், நவ., 9ல் தேரோட்டம், மாலை 3 மணிக்கு பாவாடை நைவேதன தரிசனம், நவ., 10ல் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.திருநகர் சித்தி விநாயகர் கோயிலிலும் நவ., 3ல் சஷ்டி திருவிழா தொடங்குகிறது. நவ., 9 அன்று மாலையில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.