பதிவு செய்த நாள்
01
நவ
2013
09:11
திருவண்ணாமலை: "திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவின் போது, அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் ஞானசேகரன் எச்சரித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா வரும், 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும், 17ம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது. விழாவில், 15 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வரவாய்ப்புள்ளதால் , நகரத்தினையும், மலை சுற்றும் கிரிவல பாதையையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக மலை சுற்றும் பாதையில் அன்னதானம் செய்ய விரும்பும் தனி நபர்கள் ம்றறும் நிறுவனங்கள் நவ.,1 முதல் வரும், 9ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலக இரண்டாவது மாடியில் உள்ள ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (பஞ்.,), அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று உரிய விபரங்களை சமர்பித்து முன் அனுமதி பெற வேண்டும். அன்னதானம் வழங்க விண்ணப்பிக்க வரும் போது ஐந்து ஃபோட்டோ, முகவரியை தெரிவிக்கும் ஏதேனும் ஒரு சான்று நகல் மற்றும் எத்தனை நபர்களுக்கு அன்னதானம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது, என்ற விபரங்களை சமர்பிக்க வேண்டும். மலை சுற்றும் பாதையில் எந்தெந்த இடங்களில் அன்னதானம் மேற்கொள்ளலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளதோ அந்த இடத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. பிளாஸ்டிக் பாக்கெட் மூலம் குடிநீர் வினியோகிக்ககூடாது, அன்னதானம் வழங்கும் அந்த இடத்தில் பக்தர்கள் உணவு சாப்பிட்டு விட்டு இலைகள் போட குப்பை தொட்டிகள் அமைக்க வேண்டும். அன்னதானம் சமைக்கும் சமையலர் சுத்தமானவராகவும், தூய்மையை கடைபிடிப்பவராகவும், இருக்க வேண்டும். அன்னதானம் முடிந்தவுடன் அவ்விடத்தினை சுத்தம் செய்த பின்னரே செல்ல வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்குவோர் மீது காவல்துறையினர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.