பதிவு செய்த நாள்
01
நவ
2013
09:11
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கான பந்தல்கால் நடும் விழா, வரும், 14ம் தேதி மாலை நடக்கிறது. உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா மிக பிரபலம். இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பில் பங்கேற்பர். வைகுண்ட ஏகாதசி விழாவுக்காக, ஸ்தம்ப ஸ்தாபனம் எனும் பந்தல் கால் நடும் விழா, வரும், 14ம் தேதி, மாலை, 5.15 மணி முதல், ஆறு மணிக்குள் நடக்கிறது என, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை கமிஷனர் கல்யாணி தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர், 31ம் தேதி, திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கும் வைகுண்ட ஏகாதசி விழாவில், ஜனவரி ஒன்றாம் தேதி, பகல் பத்து துவங்குகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு, ஜன., 11ல் நடக்கிறது.