பதிவு செய்த நாள்
05
நவ
2013
10:11
திருப்பதி: திருமலைக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, தினமும் இலவச லட்டு வழங்குவது குறித்து, அடுத்த மாதம் நடைபெறும், அறங்காவலர் குழுக் கூட்டத்தில், முடிவு எடுக்கப்படும் என, திருமலை - திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருமலையில், கடந்த மாதம் பிரம்மோற்சவம் நடந்த போது, ஒன்பது நாட்களுக்கு, திருமலைக்கு பாதயாத்திரை வந்த பக்தர்களுக்கு, இலவச லட்டு வழங்கப்பட்டது. இதை, தினமும் அமல்படுத்த, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, அடுத்த மாதம், 11ம் தேதி நடைபெற உள்ள, அறங்காவலர் குழுக் கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்படும் என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். தினமும், திருமலைக்கு பாதயாத்திரையாக, 20 ஆயிரம் பக்தர்கள் வரை வருகின்றனர். அவர்களுக்கு, இலவசமாக லட்டு வழங்கினால், ஆண்டுக்கு 6 கோடி ரூபாய் வரை, கூடுதல் செலவாகும். திருமலை மடப்பள்ளியில், தினமும், 2.5 லட்சம் லட்டுகள் மட்டுமே, தயார் செய்யப்படுகின்றன. இதனால், பக்தர் ஒருவருக்கு, நான்கு லட்டுக்கு மேல் வழங்கப்படுவதில்லை. இலவச லட்டு வழங்கினால், இதுவும் குறைய வாய்ப்புள்ளது. எனவே, பக்தர்கள் இலவச லட்டுக்கு பதில், தேவையான லட்டு வழங்க, தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவஸ்தானம், தான் அளிக்கும் வாக்குறுதிகளை, சிறிது காலத்திற்கு பிறகு, ரத்து செய்து விடுகிறது. அவ்வாறு இல்லாமல், செயல்படுத்தக் கூடிய திட்டங்களை அறிவித்து, அறிவித்தபடி நடப்பது, தேவஸ்தானத்திற்கு மதிப்பு சேர்க்கும் என, பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
நாளை திருப்பதி செல்ல முடியாது: ஆந்திரா பிரிவினையை எதிர்த்து, நாளையும், நாளை மறுதினமும், திருப்பதி வரும் தேசிய நெடுஞ்சாலைகளில், மறியல் போராட்டம் நடத்த, ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். நாளை காலை, 6:00 மணியில் இருந்து, 48 மணி நேரம், தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து, போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். சென்னை ஆந்திரா, பெங்களூரு திருப்பதி, காளஹஸ்தி சாலைகளில், போராட்டம் நடத்த உள்ளதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.