காஞ்சிபுரம்: குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவில் வெள்ளைச் சாற்றுமுறையில் நேற்று ஆறுமுக சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. முதல் நாளான நேற்று, லட்சார்ச்சனை துவங்கியது. தினமும் காலையில் மூன்று முறையும், மதியம் ஒரு முறையும், ஆறு நாட்கள் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் ஆறுமுக சுவாமிக்கு வெவ்வேறு வகையான சாற்று முறை நடக்கும். முதல் நாளான நேற்று முன்தினம் மஞ்சள் சாற்றுமுறையில் மஞ்சள் வஸ்திரம் அணிந்து, மஞ்சள் மலர்களுடன் காட்சியளித்தார். இரண்டாம் நாளான நேற்று, வெள்ளை சாற்று முறையில் வெள்ளை வஸ்திரம் அணிந்து, வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு ஆறுமுக சுவாமி அருள்பாலித்தார். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கோவில் பிரகாரத்தை 108 முறை சுற்றி வழிபட்டனர். இன்று காலையில் முத்துகுமார சுவாமி பல்லக்கு வாகனத்திலும், மாலையில் அன்ன வாகனத்திலும் ராஜவீதி சுற்றி வருவார்.