பதிவு செய்த நாள்
06
நவ
2013
11:11
சேலம்: சேலம், கோட்டையில் உள்ள அழகிரிநாத ஸ்வாமி பெருமாள் கோவிலில், நேற்று காலை, பவித்ர உற்சவ விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை அங்குரார்ப்பணம், பவித்ராதி வாசம், ஹோமம், பூர்ணாகுதி நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 8 மணி முதல் மதியம், 1 மணி வரை சுதர்சன யந்திர கும்பாராதனம், மகா சாந்தி கும்பஸ்தாபனம், பவித்ர சமர்ப்பணை, சமுத்ர திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6 மணி முதல் இரவு, 10 மணி வரை நித்ய ஹோமம், மூர்த்தி ஹோமம் நடந்தது. ஆண்டுக்கு, ஒருமுறை கொண்டாடப்படும் பவித்ர உற்சவத்தை முன்னிட்டு, ஆயுள், ஆரோக்கியம் கிடைக்கவும், அமைதி வேண்டியும் ஹோமங்கள் நடத்தப்பட்டன. ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமானும், சுந்தரவல்லி தாயாருக்கும் மலர் அலங்காரம் செய்யப்பட்டும், பவித்ர மாலை அணிவிக்கப்பட்டும், பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பவித்ர உற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.