பதிவு செய்த நாள்
07
நவ
2013
10:11
விருதுநகர்: சபரிமலைக்கு அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில், பக்தர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுக்க, போக்குவரத்துத்துறை ஆணையர் பிரபாகர் ராவ், உத்தரவிட்டுள்ளார். நவ.,17ல், கார்த்திகை மாதம் பிறக்கிறது. அன்று முதல் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலையணிவர். மண்டல பூஜை, மகரஜோதியையொட்டி, சபரிமலை சென்று, சுவாமியை தரிசிப்பர். இதற்காக, தமிழகத்தில் இருந்தும், பிறமாநிலங்களில் இருந்தும், தமிழகம் வழியாக, தினமும் அதிகளவில் வாகனங்கள் செல்லும். விபத்தில் சிக்கும் நிலையும் ஆண்டுதோறும் தொடர்கிறது. இதை தொடர்ந்து கேரள அரசு, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில், ""ஐயப்ப பக்தர்கள் பலியாவதை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப் படவேண்டும், என, வலியுத்தப்பட்டுள்ளது. இப்பிரச்னை தொடர்பாக, அடிக்கடி வாகன சோதனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக போக்குவரத்துத்துறை ஆணையர் பிரபாகர் ராவ், அனைத்து மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி,"" ஆணையர் உத்தரவுப்படி, சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்களை சோதனையிட உள்ளோம். நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் பயணித்தால், சம்பந்தப்பட்ட வாகனம் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிப்பதா அல்லது பறிமுதல் செய்வதா என்பது தொடர்பாக, ஆணையரின் அறிவுரை பெற்று, முடிவு செய்யப்படும். அனைத்து வாகனங்களிலும், முறையான ஆவணங்கள் இருக்க வேண்டியது அவசியம். சபரிமலைக்கு, பக்தர்கள் சரக்கு வாகனங்களில் பயணம் செய்ய அனுமதியில்லை. அவ்வாறு செல்வோரின் வாகனங்கள், பறிமுதல் செய்யப்படும். விபத்து, உயிர்பலியை தவிர்க்கவே, இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மகரஜோதி பூஜை முடியும் வரை, இது தொடரும்,என்றார்.