பதிவு செய்த நாள்
07
நவ
2013
10:11
திருப்பூர் : திருப்பூர், கொங்கணகிரி கந்த பெருமான் கோவிலில் இந்தாண்டு கந்தர் சஷ்டி விழா நடத்தப்படுகிறது.திருப்பூர், கொங்கணகிரியில், வள்ளி, தேவசேனா சமேத கந்த சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. பல ஆயிரம் ஆண்டு பழமை யானதும், அருணகிரி நாதரால் பாடல் பெற்று ஸ்தலமாகவும், திருமண தடை நீங்கும் பரிகார தலமாகவும், திருசதை சத்ரு சம்ஹரா பூஜை நடக்கும் கோவிலாகவும், திருப்பூர் நகரில் குன்று மேல் அமைந்துள்ள முருகன் கோவிலாகவும் உள்ளது. சிதிலம் அடைந்து காணப்பட்ட இக்கோவில், மூன்று ஆண்டுகளுக்கு முன் புதுப் பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, பழமையான இக்கோவிலில், முருகன், சூரபத்மனை வதம் செய்யும் கந்தர் சஷ்டி விழா நடத்தப்படாமல் இருந்தது. முருகன் கோவில்களுக்கே சிறப்பான இவ்விழா, முதல்முறையாக இந்தாண்டு கொங்கணகிரி கோவிலில் நடைபெற உள்ளது. ஆண்டிபாளையம், பூச்சக்காடு, அணைப்பாளையம், கொங்கணகிரி ஆகிய பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள், பொதுமக்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.ஏற்கனவே உற்சவர் சிலை உள்ள நிலையில், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சிக்காக, சூரபத்மன் சிலை மற்றும் சூரசம்ஹாரத் தின்போது, சூரபத்மன் உருவம் மாறும் கஜமுகன், பானுகோபன், சிங்க முகன், மகா சூரன் தலைகள் போன்றும், காகிதம், அட்டைகளால் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கந்தர் சஷ்டி விழா, சூரபத்மன் வதம் செய்யும் விழா நாளை நடக்கிறது. காலை 8.00 மணி மற்றும் மாலை 4.00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 முதல் இரவு 7.30 மணி வரை, கந்த பெருமான் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி காலை திருக்கல்யாணம், அன்னதானம் நடக்கிறது.