பதிவு செய்த நாள்
09
நவ
2013
01:11
கொடிக்கவி என்னும் இந் நூல் மெய்க்கண்ட சாத்திரங்களுள் பதினொன்றாவதாக வைத்து எண்ணப்படுவது. இது மொத்தம் நான்கு பாடல்கள் மட்டிலுமே கொண்டது. இதன் முதற் பாடல் கட்டளைக் கலித்துறை யாப்பிலும், மற்றைய மூன்று பாடல்களும் வெண்பா யாப்பிலும் அமைந்தவை. அளவில் மிகச் சிறியதான இந்த நூல் தனிச் சாத்திர நூலாகவே கருதப்படுகிறது. இதனை இயற்றி அருளியவர் உமாபதி சிவம்
இந்நூல் எழுந்தது பற்றி ஒரு வரலாறு கூறப்படுகிறது. ஆசிரியர் உமாபதி சிவம் தில்லை வாழ் அந்தணருள் ஒருவர். அருள் நூல்களிலும் வேதத்திலும் தேர்ந்த பயிற்சியுடையவர். இவருடைய எல்லையற்ற கல்வியினாலும் ஒழுக்கத்தினாலும் பல்லக்கில் செல்லவும், பகல் விளக்கு எடுக்கவும், சின்னங்கள் பணிமாறவும் உரிமை பெற்றிருந்தார். ஒருநாள் அவ்வாறு அவர் பல்லக்கில் செல்லும் போது சந்தான குரவருள் மூன்றாமவராகிய மறைஞானசம்பந்தர் உமாபதி சிவத்தை நோக்கி பட்ட கட்டையில் பகற் மரத்தால் அமைக்கப் பட்டது என்பதையும், பகலிலும் பணியாளர்கள் விளக்கேந்தி முன் செல்வதால் இவரைப் பகற்குருடு எனவும் எள்ளலாகக் குறிப்பிட்டார்.
இச்சொற்களைக் கேட்டவுடன் ஞானம் கைவரப் பெற்றவராய்ப் பல்லக்கிலிருந்து இறங்கி மறைஞானசம்பந்தரைச் சென்று வணங்கி அவரைத் தனது ஞான ஆசிரியராக ஏற்றுக் கொண்டார் உமாபதி சிவனார். ஒரு முறை மறைஞானசம்பந்தர் தில்லை நகரின் தெருவில் நெசவுக்காகப் பாவாற்றிக் கொண்டிருந்தவர்களிடம், அவர்கள் வைத்திருந்த உப்பில்லாத கஞ்சியைத் தம் கைகளில் வாங்கி ஏந்திக் குடித்தார். அப்போது அவர் புறங்கை வழியே ஒழுகிய மிச்சிலை ஆசிரியர் உமாபதிசிவம் ஞான ஆசிரியருடைய திருவருட்பிரசாதம் என்று ஏற்று அருந்தினார்.
இதனைப் பொறாத தில்லை வாழ் அந்தணர்கள் தாழ்ந்த குலத்தவர் தந்த கஞ்சியை உண்டதனால் ஆசிரியர் உமாபதி சிவம் சாதி ஆசாரத்தினின்றும் வழுவினார் என்று குற்றம் சாட்டி அவரைத் தம் சாதியினின்றும் நீக்கி வைத்தனர் அதன் பின் ஆசிரியர் உமாபதி சிவம் தில்லையை அடுத்த கொற்றவன்குடியிலே மடம் அமைத்து வாழ்ந்திருந்தார்.
அப்போது தில்லைத் திருக்கோவிலில் திருவிழாத் தொடங்கிற்று. அந்தணர்கள் கொடியேற்ற முனைந்தனர். எவ்வளவு முயன்றும் கொடி ஏறவில்லை. அந்நிலையில் அம்பலவாணப் பெருமான் திருவருளால் உமாபதிசிவம் வந்தால் கொடி ஏறும் என்று விண்ணிலே ஒரு திருவாக்கு எழுந்தது. அதனைக் கேட்டு அஞ்சிய அந்தணர்கள் ஆசிரியர் உமாபதி சிவத்தை அணுகித் தங்கள் செயலுக்கு வருத்தி மன்னிப்புக் கேட்டு அவரைத் தக்க சிறப்புக்களுடன் தில்லைக்கு அழைத்து வந்தனர்.
திருக்கோவிலின் முன்பு வந்து கொடி மரத்தின் அருகே நின்று இக்கொடிக் கவியின் முதலாவது பாடலை உமாபதி சிவம் அருளிச் செய்த அளவிலே தடை ஏதுமின்றிக் கொடி தானாக மேல் ஏறிற்று. அதன் பின்னர் அடுத்த மூன்று பாடல்களையும் அருளிச் செய்து உமாபதி சிவம் நூலை நிறைவு செய்தார். எனவே இந்நூல் கொடிக் கவி அல்லது கொடிப் பாட்டு என்று வழங்கலாயிற்று.
ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் ஒன்று மேலிடில் ஒன்று
ஒளிக்கும் எனினும் இருள் அடராது உள் உயிருக்கு உயிராய்த்
தெளிக்கும் அறிவு திகழ்ந்து உளதேனும் திரிமலத்தே
குளிக்கும் உயிர் அருள் கூடும் படி கொடி கட்டினனே.
சிவஞானப் பேரொளிக்கும் ஆணவமாகிய காரிருளுக்கும் இடம் கொடுத்து நிற்பது உயிர் ஒன்றே. இவ்வுயிரில் பதிஞானம் மேலிட்டு நின்றால் ஆணவம் ஒளித்து நிற்கும். ஆணவ மலம் மேலிட்டு நின்றால் ஞானப் பேரொளி விலகி நிற்கும். ஆயினும் இருள், ஒளியை அடர்த்து எழுகின்ற ஆற்றலை உடையதன்று. உயிர்களுக்கு இறைவன் திருவருளால் சற்றே அறிவு விளங்கித் தோன்றுமாயினும் உயிர்களின் ஆணவ மலச் சார்பால் அவை மும்மலங்களுக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. அவற்றிலிருந்து உயிர்கள் தம்மைத் தாமே விடுவித்துக் கொள்ளும் வலிமையற்றன. இவ் வுயிர்களை மும்மலங்களிலிருந்து விடுவித்துத் தீக்கை முறைகளின்படி செலுத்தித் திருவருட் பேரொளியிலே கூட்டும் படிக்குக் கொடி உயர்த்தினேன்.
அரசன் ஒருவன் கொடி கட்டி ஆளுகிறான் என்றால், அவனுடைய ஆணை அந்த நாட்டில் வாழும் உயிர்களைக் காப்பதற்காகத் தடையற்று நிகழ்ந்தேறுகிறது என்று பொருள். இவ்வாறு கொடி உயர்த்திய மன்னவன் குடிமக்கள் தன்னால், தன் பரிசனத்தால், கள்வரால், உயிர் தம்மால், ஊனமிகு பகைத்திறத்தால் வருகின்ற அச்சங்களைப் போக்கி ஆட்சி புரிகிறான்.
திருக்கோவிலில் நடைபெறுகிற திருவிழாக்களுக்கு முன்னதாக நிகழும் கொடியேற்றம், இறைவன் திருவருள் ஆணை வழி உயிர்களை எல்லாம் இடர்க் கடலினின்றும் ஏற வாங்கிப் பேரின்ப வழியிலே செலுத்துவான் என்பதற்கு உரிய குறியீடாகும். சிவபெருமானின் திருக்கோயில்களிலே உயர்த்தப்படும் கொடி. சேஉயரும் திண்கொடி என்று திருஞான சம்பந்தரால் சிறப்பித்து அருளப்படும் விடைக் கொடி.
ஒளி எனப்பட்டது இங்கு பதிஞானத்தைக் குறித்து நின்றது, இருள் என்றது இரு பொருளையும் காட்டாத தன்மையுடைய ஆணட மலத்தினை. இவ்விரண்டும் தங்குவதற்குரிய இடம் உயிர் ஆகிய ஆன்மா ஒன்றே. இரு இயல்புகள் ஓரிடத்திலே கூடி நிற்குமா எனின். இருளில் இருளாகி எல் இடத்தில் எல்லாம், பொருள்கள் இலதோ புவி என்று திருவருட்பயன் உயிரவை நிலையை உணர்த்திற்று.
உயிரைப் பற்றும் இருள் பேரறிவுப் பிழம்பாகிய இறைவனைப் பற்றாது என்பதையும், இறைவனின் திருவருள் பதிந்த உயிரையும் பற்றாது என்பதனையும் ஒன்று மேலிடில் ஒன்று ஒளிக்கும் எனினும் இருள் அடராது என்ற சொற்களால் விளக்கினார்.
உயிர்க்கு உயிராக நிற்கும் இறைவன் உயிரை விட்டு நீங்கா திருந்தும் உயிர் எவ்வாறு இருளில் அழுந்திற்று என்ற வினாவிற்கு உள்ளத்துள் நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும் கள்ளத்துள் நிற்றியம்மா யாங்ஙனம் காணுமாறே என்ற அப்பர் பெருமான் திருவாக்கே விடையாயிற்று, தோன்றாத் துணையாக இறைவன் உயிரோடு இருந்தும் உயிர் ஆணவத்தால் மறைக்கப்பட்டு மும்மலங்களிலும் மூழ்கிக் கிடக்கிறது.
அதனைப் படிமுறையே முன்னேற்றிச், சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நெறிகளில் செலுத்தி தீக்கை வகைகளையும் அருளி உயிர் அருளோடு கூடும்படி இக்கொடியை ஏற்றினேன்.
பொருளாம் பொருள் ஏது போது ஏது கண் ஏது
இருளாம் வெளிஏது இரவு ஏது அருளாளா!
நீபுரவா வையம் எலாம் நீ அறியக் கட்டினேன்
கோபுர வாசல் கொடி
மெய்ப் பொருளாகிய பொருள் எது? அப்பொருளில் நின்றும் வெளிப்படுகின்ற ஒளிக்கற்றையாகிய அருள் எது? அந்த ஒளியிலே காணும் கண் எது? அந்தக் கண்ணை மறைத்து நிற்கும் இருளாகிய வெளி எது? இரவு தான் எது? அருள் நிறைந்த பரம் பொருளே நீ காக்கின்ற இந்த உலகம் முழுவதும் இவற்றை எல்லாம் அறியுமாறு உன்னையே சான்றாகக் கொண்டு உன் திருக்கோபுர வாயிலில் இக்கொடியை ஏற்றினேன்.
மெய்ப் பொருளாக விளங்குவதும் என்றும் நிலைத்து இருப்பதும் உயிருக்கு உயிராகவும் பேரின்ப வடிவமாகவும் உள்ளது தனக்கு வேறு ஒரு முதல் இல்லாததாகிய சிவ பரம் பொருள் ஆகும்.
போது என்பது இங்கு கிரணம் என்று பொருள் கொள்ளப்படும். சிவ பரம் பொருளாகிய அறிவுப் பிழம்பு கதிரவன் எனக் கொண்டால் அக் கதிரவனை விட்டு எப்போதும் நீங்காமல் நிற்கும் ஒளியாக முதல்வனது சிற்சத்தி கொள்ளப்படும்.
ஒளியினால் பயன் கொள்ளுவது கண். இவ்விடத்தில் கண் உயிரைக் குறித்தது. ஏனெனில் உயிராகிய ஆன்மாவே இறைவன் திருவருளால் பயன் கொள்ளத் தக்கது இருளாம் வெளி என்ற சொல்லாட்சி அருளாம் வெளி என்ற ஒன்று உண்டு என்பதைக் குறிப்பால் உணர்த்திற்று. இருளாம் வெளி என்ற சொற்கள் சகல நிலையையும், இரவு என்பது கேவல நிலையையும் குறித்தன. கேவல நிலையில் உயிரின் அறிவு முற்றிலும் மறைக்கப்பட்டு உள்ளது சகல நிலையில் அது சற்றே விளங்கிச் சிற்றிவு பெறுகிறது.
இருள், வெளி என்ற சொல்லாட்சி இருபா இருபஃதில் இருள் வெளி ஆகும். மருளினை அறுத்து என்று அருளப்படுவது காண்க. இவ்வைந்து நிலைகளையும், உலகம் எல்லாம் அறியும்படி உம்மைச் சான்றாக வைத்துக் கொடி உயர்த்தினேன் என்றார்.
மல மாயை கன்மங்கள் இறைவனைப் பொருந்தா. ஆகையினால் அவற்றை நீ புரவா வையமெல்லாம் என்று குறித்தார் எனக் கொள்ளுவர் சில ஆசிரியர்கள். மற்றும் சிலர் நீ புரவு ஆம் வையமெல்லாம் என்று பிரித்து. உன்னால் புரக்கப்படும் வையமெல்லாம் என்று பொருள் கொள்ளுவர். இறைவன் அருளால் அல்லாமல் உயிர்கள் எதனையும் அறிய மாட்டா. ஆகையினால் அவனையே சான்றாகக் கொண்டு மேற் கூறப்பட்ட ஐவகைப் பொருள்களின் தன்மையையும் உணர்த்துவதற்காக இக் கொடியை உயர்த்தினேன் என்று கூறினார்.
வாக்காலும் மிக்க மனத்தாலும் எக்காலும்
தாக்காது உணர்வுஅரிய தன்மையனை நோக்கிப்
பிறித்து அறிவுதம்மில் பிரியாமை தானே
குறிக்கும் அருள் நல்கக் கொடி
சொல்லாலும், சொல்லினும் விரையப் பாயும் மனத்தாலும், ஒரு காலத்திலும் எட்டுவதற்கும் உணர்வதற்கும் அரிய தன்மை உடையவனை அறிவுக்கு அறிவாக விளங்கும் இறைவனை அறிவதற்கான அருளை அவனே வழங்குமாறு வேண்டிக் கொடி கட்டினேன்.
இறைவன் சொல்லால் உணர்த்தப்படுவதற்கும் மனத்தால் உணரப்படுவதற்கும் அரியவன். சிவஞான சித்தியாரில் மறையினால் அயனால் மாலால். மனத்தினால் வாக்கால் மற்றும் குறைவிலா அளவினானும் கூறொணாதாகி நின்ற இறைவனார் கமல பாதம் என்று அருள் நந்தி சிவம் அருளிச் செய்ததும், சிவப்பிரகாசத்தில் பாசமா ஞானத்தாலும் படர் பசு ஞானத்தாலும் ஈசனை உணர ஒண்ணாது என்பதும் இக் கருத்தை வலியுறுத்தும்.
இவ்வாறு எட்டாத தன்மை உடைய இறைவன் எங்கோ தொலைவில் இல்லாமல் உயிருக்கு உயிராக அவற்றோடு நிற்கிறான். உயிர்களின் தன் முனைப்பினால் அறியப்படாதவன்.அவனுடைய திருவருள் வழியிலே அடங்கி நிற்பாருக்குத் தானே இரங்கி ஆசிரியத் திருமேனி கொண்டு வந்து பாலிக்கிறான் என்பதனைக் குறிக்கத் தம்மிற் பிரியாமை தானே குறிக்கும் அருள் நல்க என்று குறித்தார். திருவருட்பயனில் தாமே தருபவரைத் தம் வலியினால் கருத, ஆமே இவன் யார் அதற்கு என்று கூறியதும் இங்கு நினையத் தக்கது.
அஞ்சு எழுத்தும் எட்டு எழுத்தும் ஆறு எழுத்தும் நால் எழுந்தும்
பிஞ்சு எழுத்தும் மேலைப் பெரு எழுத்தும் நெஞ்சு அழுத்திப்
பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும்
கூசாமல் காட்டக் கொடி
சிவாய நம என்னும் திருவைந்தெழுத்தையும் ஓம் ஆம் ஒளம் சிவாய நம என்னும் எட்டு எழுத்துக்களையும், ஓம் நமசிவாய என்னும் ஆறு எழுத்துக்களையும், ஓம் சிவாய என்னும் நான்கு எழுத்துக்களையும் முறைப்படி எண்ணி அதன் பின்னர் மென்மையான எழுத்தாகிய திருவருட் சத்தியைக் குறிக்கும் வகரத்தையும், உயர்ந்த பெரு எழுத்தாகிய சிவபெருமானைக் குறிக்கும் சிகரத்தையும் நெஞ்சத்திலே பதியுமாறு நினைந்து இடையறாது ஓதுவதால் பேசும் எழுத்தாகிய அருட் சக்தியைக் குறிக்கும் வகரம், பேசா எழுத்தாகிய சிவத்தைக் குறிக்கும் சிகரத்தை மிக எளிதாக உயிரோடு கூட்டுவிக்கும். அவ்வாறு கூட்டுவிப்பதற்காகக் கொடி கட்டினேன்.
திருவைந்தெழுத்து வெறும் எழுத்துக்களாகக் கொள்ளப்படாமல் ஒவ்வொன்றும் ஒரு பொருளைக் குறித்து நின்றது. சிகரம் சிவத்தையும், வகரம் திருவருளாகிய சத்தியையும், யகரம் உயிரையும், நகரம் மறைப்பாற்றலையும், மகரம் மலத்தையும் குறித்தன. அதனால் சுந்தரமூர்த்தி நாயனார் அந்தியும் நண்பகலும் அஞ்சு பதம் சொல்லி என்று அருளினார். இவற்றை ஓதும் முறையையும் நிற்கும் முறையையும் நல்லாசிரியர் வழிக் கேட்டுணர்வதே சிறப்பாகும்.
நமசிவாய என்பது தூல பஞ்சாக்கரம், சிவாய நம என்பது சூக்கும பஞ்சாக்கரம், சிவயசிவ என்றோ சிவயவசி என்றோ ஆசிரிய மரபின்படி ஓதப்படுவது அதி சூக்கும பஞ்சாக்கரம், இவ்வாறே எட்டு எழுத்தும் ஆறு எழுத்தும் நாலு எழுத்துமாக ஓதும் முறைமையும் உண்டு. இம்மைப் பயன் பெறுவதற்காக நமசிவாய என்று ஓதுவதும், பேரின்ப வீட்டை அடைவதற்காக சிவாய நம என்று ஓதுவதும் திருவட்பயன், உண்மை விளக்கம் போன்ற ஞான நூல்களில் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன.
மேலான சிவ பரம் பொருளை உயிர் திருவருளின் வழியே, அதன் துணை கொண்டே அறிதல் வேண்டும். ஆதலினால் சத்தியைக் குறிக்கும் வகரத்தை இளமையும் மென்மையும் உடையதாகிய பிஞ்சு எழுத்து என்று குறிப்பிட்டார். தனக்கு ஒப்பும் இணையும் அற்ற சிவ பரம் பொருளைக் குறிக்கும் சிகரத்தை மேலைப் பெரு எழுத்து என்று குறிப்பிட்டார்.
யகரமாகிய உயிர் வகரமாகிய அருளோடு கூடும் நிலை துரிய நிலை எனப்பெறும். இந்நிலையில் சொல் உண்டு. அருளாளர்களின் பாடல்கள் எல்லாம் துரிய நிலையில் நின்று பாடப் பெற்றவைகளேயாம் இதுபற்றியே வகரத்தைப் பேசும் எழுத்து என்றார். உயிர் சிகரமாகிய சிவத்தோடு ஒன்றித் தான் என்பது இன்றிச் சிவமாயே நிற்கும் நிலை துரியாதீதம் எனப்படும். இந்நிலையில் நினைவும் இல்லை. சொல்லும் இல்லை. பேசா அநுபூதி என்பது இதுவே. இது பற்றியே சிகரம் பேசா எழுத்து எனப்பட்டது.
நன்றி: சி.சு.மணி