பதிவு செய்த நாள்
09
நவ
2013
03:11
பயன்
தானால் (முத்தி நிலை)
இனி, தானால் ஆகிய முத்தி நிலையை விளக்கப் புகுகின்றார் ஆசிரியர்.
பாசச் சார்பும் சிவச் சார்பும்
உயிருக்குத் தனித்த இருப்பு என்பது எக்காலத்திலும் இல்லை. உயிர் எந்நிலையிலும் ஏதேனும் ஒன்றைச் சார்ந்தே நிற்கும். திருவைந்தெழுத்தில் அமைந்துள்ளவாறு, பிறப்பு நிலையில் அது பாசப் பொருள்களைச் சார்ந்து நிற்கிறது. பாசமாகிய சார்பு நீங்குமானால் அது சிவமாகிய சார்பைப் பெற்றுவிடும். ஊசலில் ஆடுகின்றவன் கயிறு அறுந்த அக்கணமே தரையில் விழுகிறான். தரை அவனைத் தாய் போலத் தாங்கிக் கொள்கிறது. அதுபோலப் பாசப்பற்று அறுமாயின் உயிருக்கு இறைவனையன்றி வேறு சார்பு இல்லை; புகல் இல்லை.
பாசத்தோடு கூடியிருந்தபோது உலகப் பொருள்களையே அறிந்து உலகப் பொருள்களையே இச்சித்து உலகப் பொருள்களையே அனுபவித்து வந்த உயிர், பாசச் சார்பு நீங்கி இறைவனைச் சார்ந்த இந்நிலையில் இறைவனைத் தவிர வேறொரு பொருளை அறிதலும் இல்லை. விரும்புதலும் இல்லை, அனுபவித்தலும் இல்லை, அது இறைவனையே அறிந்து இச்சித்து அனுபவித்து நிற்கும்.
முத்தி நிலையில் உயிர் தனித்த பொருளாய்க் காணப்படாமை
இறைவனை அனுபவிக்கும் நிலையில் உயிர் தான் என வேறு நில்லாது தனித்த ஒரு முதலாய்க் காணப்படாது இறைவனது நிறைவினுள் அடங்கிச் சிறிதும் புலப்படாது நிற்கும்; தன்னையே தான் மறந்து இறையனுபவத்தில் அழுந்தி நிற்கும்.
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே
எனத் தலைவியொருத்தியின் தன்மையைக் கூறி இறையனுபத்தின் நிலையை விளங்க வைத்தார் நாவுக்கரசர். பாசச் சார்பு நீங்கி இறைவனைச் சார்ந்து இறையின்பத்தை அனுபவிக்கின்ற முத்திக் காலத்தில் உயிர் தன்னையிழந்து தான் சிறிதும் தோன்றாதிருக்க, சிவம் ஒன்றுமே விளங்கி நிற்கும். இதனை ஓர் எடுத்துக்காட்டினால் விளக்கலாம். உப்பானது நீரில் கலந்தபோது அந்நீரோடு ஒன்றாய் நிற்கும். உப்புக் கண்ணுக்குப் புலனாகாது. நீராகிய ஒரு பொருளே உள்ளதுபோலத் தோன்றும். அதுபோல உயிர் சிவத்தில் அழுந்தி வேறு காணப்படாது நிற்கச் சிவம் ஒன்றுமே உள்ளதுபோலத் தோன்றும்.
சிவத்தோடு ஒன்றி நின்று அனுபவித்தல்
முத்தி நிலையில் உயிரும் சிவமும் உள்ளன ஆயின் பிரித்தறியவாராது ஒன்றாய் உள்ளன. உயிர் சிவனது திருவருள் வியாபகத்துள் அடங்கித் தனித்த ஒரு முதலாய்க் காணப்படாது நிற்றலே உயிர் சிவத்தோடு ஒன்றாதல் அல்லது இரண்டறக் கலத்தல் ஆகும். உயிரானது சிவத்தோடு ஒன்றாகி இல்லாமற் போய்விடவில்லை. உயிர் சிவத்தோடு ஒன்றி நின்று அதனையே இடையறாது உணர்ந்து அனுபவிக்கின்றது. அவ்வாறு ஒன்றி நிற்பது எது போலும் என்று காட்டுதற்குப் பல உவமைகளை எடுத்துக்கூறுகிறார் ஆசிரியர். அவற்றை இனிக் காண்போம்.
சிவத்தில் அத்துவிதமாய் இயைந்து நிற்றற்கு உவமைகள்
45. முத்தி தனைஅடைந்தோர் முந்துபழம் போதுஅங்கி
வித்தகமாம் வீணை இவையிற்றின் ஒத்த
இரதம்மணம் வெம்மை எழில்நாதம் போல
விரவுவர்என்று ஓதும் விதி
பதவுரை
முத்திதனை அடைந்தோர் தன்னிடத்துப் பாசம் இல்லை யாக, தானும் சிவனுமேயாய் வேறற நிற்கின்ற பரமுத்தி நிலையை அடைந்தோர்
முந்து பழம் முதிர்ந்த பழம்
போது மலர்
அங்கி நெருப்பு
வித்தகமாம் வீணை சிறந்த வீணை
இவையிற்றின் ஆகிய இவற்றில்
ஒத்த முறையே அடங்கிப் பிரிப்பின்றி இயைந்திருக்கும்
இரதம் சுவையும்
மணம் மணமும்
வெம்மை சூடும்
எழில் நாதம் இன்னிசையும்
போல போல
விரவுவர் சிவத்தில் இயைந்து அறிவடங்கிப் பிரிப்பின்றி நிற்பர்.
என்று என
விதி முதல்வன் விதித்த நூல்கள்
ஓதும் கூறும்.
பொழிப்புரை
பேரின்ப முத்தியை அடைந்த பெருமக்கள் பழத்திற் சுவைபோலவும், பூவில் மணம் போலவும், நெருப்பில் வெம்மை போலவும், வீணையில் இன்னிசை போலவும் சிவ முதற் பொருளோடு ஒன்றிப் பிரியாது இயைந்து நிற்பர். இவ்வாறு சிவாகமங்கள் கூறும்.
விளக்கம்
இரு பொருள்கள் பிரிப்பின்றி ஒற்றுமைப்பட்டு எவ்விடத்தும் உடனாய் நிற்பதாகிய இயைபு அத்துவிதம் (அத்வைதம்) எனப்படும். ஆன்மாவும் சிவமும் நிற்கின்ற முறைமை இதுவேயாகும்.
பாசத்தோடு கூடிய கட்டு நிலையிலும் ஆன்மா சிவத்தோடு இவ்வாறுதான் இயைந்து நிற்கிறது. ஆனால் இவ்வுண்மையை உணரவொட்டாதபடி ஆணவ மலம் ஆன்ம அறிவை மறைத்திருந்தது. ஆணவமே ஆன்மாவுக்கு நான் என்னும் உணர்வை உண்டாக்கி நான் ஒரு தனி முதல் என்று கருதும்படி செய்தது. அதனால் ஆன்மா தன்னை வேறான ஒரு பொருள் என்றே எண்ணி வந்தது. அவ்வாறு நம்பும்படி செய்தது ஆணவம். ஆணவம் செய்கிற வேலை இது! பாசம் நீங்கிய முத்தி நிலையில்தான் ஆன்மா தனக்கும் இறைவனுக்கும் உள்ள அத்துவித உறவை உள்ளவாறு உணரும். நான் என்ற தற்போதத்தை விட்டு, எச்செயலையும் இறைவன் செயலாகக் கொண்டு அவனிடத்தில் அடங்கி நிற்கும். இவ்வாறு ஆன்மா அவனோடு ஒன்றிப் பிரியாதிருக்கும் முறைமையை உணர்த்துதற்கு வந்தனவே பழத்திற் சுவை முதலாகிய இவ்வுவமைகள். இவ்வுவமைகளை நோக்குகிற போது பின்வருமாறு ஓர் ஐயம் எழலாம். பழம் முதலியவை குணியாகிய பொருள்கள். சுவை முதலியவை அவற்றின் குணங்கள். இவ்வாறு குணியும் குணமுமாக உவமைகள் அமைந்திருப்பதனால், சிவம் குணியும் ஆன்மா அதன் குணமும் போலும் என்ற ஐயம் ஏற்படலாம். அவ்வாறு எண்ணி விடுதல் கூடாது. சிவமும் ஆன்மாவும் குணியும் குணமும் அல்ல. அவை தனித்தனிப் பொருள்கள்; வெவ்வேறு குணிகள். அவ்விரண்டும் தம்முட் பிரிப்பின்றி இயைந்து நிற்பன என்னும் அளவுக்கே இவ்வுவமைகளைக் கொள்ளுதல் வேண்டும்.
மேலும் ஓர் உவமை
46. தத்துவங்கள் எல்லாம் சகசமாய் ஆன்மாவில்
பெத்தத்தில் நிற்கின்ற பெற்றிபோல் முத்திதனில்
சித்தமலம் அற்றார் செறிந்திடுவர் என்றுமறை
சத்தியமா ஓதியிடும் தான்
பதவுரை
பெத்தத்தில் கட்டு நிலையில்
தத்துவங்கள் எல்லாம் ஆன்மாவுக்குக் கருவிகரணங்களாய் அமைந்த எல்லாத் தத்துவங்களும்
ஆன்மாவில் அவ்வான்மாவிடத்தில் (தாம் வேறு, ஆன்மா வேறு என்று பிரித்தறிய வாராமல், அவ்வான்மாவே என்னும்படி அதனோடு ஒற்றுமைப்பட்டு)
சகசமாய் இயல்பாய் இயைந்து
நிற்கின்ற பெற்றி போல் நிற்கின்ற தன்மை போல,
முத்தி தனில் பரமுத்தியில்
சித்த மலம் தமது அறிவைப் பற்றியிருந்த மும்மலங்களும்
அற்றார் அடியோடு நீங்கப்பெற்ற முத்தர் (தாம் வேறு, சிவம் வேறு என்று பிரித்தறிய வாராமல், சிவமே என்னும் படியாக)
செறிந்திடுவர் சிவத்திற் பொருந்தித் தாம் சிறிதும் தனித்துக் காணப்படுதல் இன்றி அதனிற் செறிந்து நிற்பர்
என்று என இவ்வாறு
மறை வேதாகமங்கள்
சத்தியமா உண்மையாக
ஓதியிடும் சொல்லும்
பொழிப்புரை
கட்டு நிலையில் உயிருக்கு உதவும் கருவிகளாக வந்த தத்துவங்கள் எல்லாம் உயிருக்கு வேறாய் நில்லாமல், உயிரே என்னும்படி இயைந்து ஒற்றுமைப்பட்டு நிற்கின்றன. அதுபோல, முத்தி நிலையில் மலம் நீங்கிய ஆன்மாக்கள் சிவத்திற் பொருந்தித் தாம் வேறாய் நில்லாமல் சிவமே எனும்படி அதனோடு ஒன்றி இயைந்திருப்பர். இவ்வாறு ஆகமங்கள் உறுதிபடக் கூறும்.
விளக்கம்
சிவமாதல்
உயிர் சிவமாதல் என்பதனை இங்கே விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். உயிர் படிகம் போன்றது. எதை எதைச் சார்கிறதோ அதன் அதன் தன்மையைப் பெற்று அதுவாகவே நிற்றல் இரண்டுக்கும் உண்டு. சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடைய படிகம் நீலமணியைச் சார்ந்தபோது அதன் நிறம் முழுவதையும் கவர்ந்து நீலமணியாகவே இருக்கும். பின் அந்நிலையினின்றும் நீங்கி மாணிக்க மணியைச் சார்ந்தால் அப்படிகம் மாணிக்க மணியாகவே நிற்கும். அதுபோல, சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடைய ஆன்மா பாசத்தோடு சேர்ந்து பாசமாய் நிற்கும். நமக்கு வேறாகிய உடம்போடு கூடி உடம்பாகவே நிற்கிறோம் அல்லவா? நமக்கு வேறாகிய கண். செவி முதலிய கருவிகளோடு கூடி அவையாகவே நிற்கிறோம் அல்லவா? கண் கண்டதை நான் கண்டேன் என்று தானே கூறுகிறோம். செவி கேட்டதை நான் கேட்டேன் என்று தானே கூறுகிறோம். நமக்கு வேறாகிய சொத்து சுகங்களோடு கூடி அவையே நாமாக நிற்கிறோம் அல்லவா? இதுதான் பாசமாய் நிற்றல். இவ்வாறு நின்ற நிலையினின்று நீங்கி உயிர் சிவத்தைச் சார்ந்த போது சிவத்தின் தன்மையைப் பெற்றுச் சிவமாகி நிற்கும். உயிர் சிவமாதல் என்றால் ஒரு பொருள் மற்றொரு பொருள்ஆதல் அன்று. நீலமணியைச் சார்ந்து நீலமணியாய் நின்ற படிகம் மாணிக்க மணியைச் சார்ந்து மாணிக்க மணியாய் நிற்பது போன்றதேயாகும்.
முத்திக்கு உவமை
மெய்கண்ட தேவர் சிவஞானபோத நூலில் முத்தி நிலைக்குச் சகல நிலையை உவமை காட்டினார். சகல நிலையில் இறைவன் உயிரோடு ஒற்றுமைப்பட்டு உயிராகவே நின்றாற் போல, முத்தி நிலையில் உயிர் இறைவனோடு ஒற்றுமைப்பட்டு நிற்கும் என்றார். இவ்வாறு மெய்கண்டார் சகலநிலை பற்றி முத்திநிலையை விளக்க, அவரது மாணவராகிய மனவாசகங்கடந்தாரும் அவரை அடியொற்றிச் சகல நிலையை வைத்தே முத்தி நிலையை இங்கு விளக்குவாராயினர்.
மெய்கண்டார் விடை கூறும் முறையில் இந்நூலை மனவாசகங்கடந்தார் அமைத்துக் கொண்டார் என்பதை நாம் அறிவோம். ஆனால் மெய்கண்டார் கூறிய அதே உவமையை இங்கே அமைத்துக் கொள்ளவில்லை. சகல நிலையில் இறைவன் நிற்குமாறு பற்றிய அவ்வுவமை எளிதில் உணர வாராத ஒன்று. தெரிந்ததைக் கொண்டு தெரியாததை விளக்குதல் என்பது தானே இவ்வாசிரியர் மேற்கொண்ட முறை. ஆதலால் சகல நிலையிலேயே தெரிந்த வேறொன்றை உவமை காட்டி, அதனையும் மெய்கண்டார் வாக்காகவே அமைத்து, முத்தி நிலையை விளங்க வைக்கிறார். சகல நிலையில் தத்துவங்கள் நமக்கு ஐம்பொறிகள் முதலிய கருவிகளாக அமைந்துள்ளன. கருவிகள் நமக்குத் தெரிந்தவை. அவையும் நாமும் வேறு வேறு பொருள்கள். அவை நம்மோடு இயைந்து நிற்கின்றன. நாமாகவே நிற்கின்றன. அப்படியே முத்தி நிலையில் ஆன்மாவும் சிவத்தோடு இயைந்து சிவமாகவே நிற்கும். ஆயினும் பொருளால் சிவம் வேறு; ஆன்மா வேறுதான்.
பின்னும் ஓர் உவமை
47. ஆதவன்தன் சன்னிதியில் அம்புலியின் ஆர்சோதி
பேதம்அற நிற்கின்ற பெற்றிபோல் நாதாந்தத்து
அண்ணல் திருவடியில் ஆன்மா அணைந்துஇன்பக்
கண்ணில் அழுந்தியிடும் காண்
பதவுரை
ஆதவன் தன் சன்னிதியில் சூரிய வொளியின் முன்
அம்புலியின் ஆர் சோதி நிலவின் ஒளி
பேதம் அற வேறுபட்டுத் தனித்துக் காணப்படுதல் இன்றி
நிற்கின்ற பெற்றி போல் அச்சூரிய வொளியில் அடங்கி நிற்கின்ற தன்மை போல,
நாத அந்தத்து தத்துவங்களைக் கடந்த
அண்ணல் முதல்வனது திருவடி என்று
திருவடியில் சொல்லப்படும் திருவருள் ஞானத்தில்
ஆன்மா அணைந்து முத்தான்மா சேர்ந்து அடங்கி நின்று
இன்பக் கண்ணில் அவன் கொடுக்கும் இன்ப நுகர்ச்சியில் (மூழ்கி)
அழுந்தியிடும் தன் அறிவு முனைந்து தோன்றாது கிடக்கும்
காண் இதனை அறிவாயாக.
பொழிப்புரை
பொழுது விடிந்து சூரியன் புறப்பட்டவுடன் அதன் பேரொளி முன், வானத்திலுள்ள தேய்பிறையாகிய நிலவின் ஒளி அடங்கிப் போய் விடுகிறது. நிலவின் ஒளி இருந்தும் இல்லையாய் நிற்கிறது. அதுபோல முதல்வன் திருவடியை அணைந்த உயிர் வெள்ளமெனப் பெருகும் இறையின்பத்தில் மூழ்கித் தான் என வேறு நில்லாது, தான் சிறிதும் தோன்றாது, அடங்கி நின்று இன்புறும்.
முத்தி நிலை உயிருக்கு இயற்கை
48. சென்றிவன்தான் ஒன்றில் சிவபூரணம் சிதையும்
அன்று அவன்தான் ஒன்றுமெனில் அன்னியமாம் இன்று இரண்டும்
அற்றநிலை ஏதுஎன்னில் ஆதித்தன் அந்தன்விழிக்
குற்றம் அற நின்றதுபோல் கொள்.
பதவுரை
இவன்தான் ஆன்மாதான்
சென்று சிவத்தைச் சென்று சேர்ந்து
ஒன்றின் அவனோடு ஒன்றும் எனக் கொண்டால்
சிவ பூரணம் (ஆன்மா சிவனுக்கு வெளியில் இருந்தது என்று ஆகி) சிவம் எங்கும் நிறைந்துள்ள பொருள் என்ற அடிப்படைக் கொள்கை
சிதையும் அடிபட்டுப் போகும்.
அன்று முத்தி நிலையில்
அவன் தான் சிவமே
ஒன்றும் எனில் ஆன்மாவிடம் வந்து பொருந்தும் எனக் கொண்டால்
அன்னியமாம் சிவம் ஆன்மாவிற்கு வேறாய் இருந்தது என்று ஆகும். (இவ்வாறு கொள்வது, சிவம் எந்நிலையிலும் உயிர்களோடு பிரிப்பின்றியே நிற்கும் என்னும் அடிப்படைக் கொள்கைக்கு முரணாகும்)
இன்று இரண்டும் அற்ற நிலை ஆன்மா சென்று பொருந்துதலும், சிவம் வந்து பொருந்துதலும் ஆகிய இவ்விரண்டும் அன்றி, ஆன்மா முத்தியை எய்தும் நிலை
ஏது என்னில் எது போன்றது என்றால்
ஆதித்தன் சூரிய வொளி
அந்தன் விழி குருடனது கண்ணில் உள்ள
குற்றம் படலம் ஆகிய குற்றம்
அற நீங்கியதும்
நின்றது போல் அக் கண்ணொளியோடு இயைந்து நின்றது போலும் என
கொள் கொள்வாயாக.
பொழிப்புரை
உயிர் சென்று சிவனோடு ஒன்றும் எனில் எங்கும் நிறைந்துள்ள பூரணத்தன்மை சிவனுக்கு இல்லை என்று கொள்ள நேரும். அது கூடாது. இனிச் சிவனே சென்று உயிரோடு பொருந்துவான் எனில், சிவன் உயிருக்கு வேறாய் இருந்தான் என்று கொள்ள நேரும். அதுவும் கூடாது. இவனும் சென்று அவனை அடைதல் இல்லை. அவனும் வந்து இவனை அடைதல் இல்லை. மற்று இருவரும் இயைந்து நிற்கும் முறைமைதான் யாது எனில், குருடனது கண்ணின் குற்றமாகிய படலம் நீங்க, அக்கண்ணொளியும், சூரியவொளியும் தம்முள் இயைந்து நிற்றல் போன்றதே அவனும் இவனும் பிரிப்பின்றி நிற்கும் முறைமை.
விளக்கம்
ஆன்மா சிவனிடம் போய்ச் சேர்ந்தான் என்றல் பொருந்தாமை
ஆன்மாவும் சிவனும் பிரிப்பின்றிச் சேர்ந்திருக்கும் இந்நிலை ஒரு காலத்தில் ஏற்பட்ட உறவா? ஒரு காலத்தில் ஏற்பட்டது என்றால் ஆன்மா, சிவன் என்ற இருவரில் யார் யாரைப் போய்ச் சேர்ந்தனர்? ஆன்மா சிவனிடம் போய்ச் சேர்ந்தான் என்றால், அதிலே ஒரு குற்றம் உள்ளது. என்ன குற்றம் என்றால், ஆன்மா சென்று சிவனை அடைந்தான் என்றால் சிவனது நிறைவுக்குள் அவன் இல்லை என்றும், நிறைவுக்கு வெளியே இருந்தான் என்றும், அதனாலேயே சென்று அடைய வேண்டியதாயிற்று என்றும் ஆகும். இவ்வாறு கொள்வது எல்லாவற்றையும் தன்னுள் அடங்கக் கொண்டுள்ள சிவனது முழு நிறைவுத் துன்மைக்கு இழுக்காகும்.
சிவன் ஆன்மாவிடம் வந்து சேர்ந்தான் என்றல் பொருந்தாமை
இனி, சிவன் ஆன்மாவிடம் வந்து பொருந்தினான் எனக் கொள்ளலாமோ? எனில், அதிலும் ஒரு குற்றம் உள்ளது. சிவன் அவ்வாறு வந்து பொருந்துவதற்கு முன்னே ஆன்மாவை விட்டு விலகி வேறாக இருந்தான் என்றும், ஆன்மாவுக்குச் சிவனது உதவி தேவைப்படாதிருந்தது என்றும் ஆகும். இவ்வாறு கொள்வது சிவன் எக்காலத்தும் எல்லாவற்றோடும் ஒன்றாயும் உடனாயும் இருந்து இயக்கி வருகிறான் என்னும் அடிப்படைக் கொள்கைக்கு இழுக்காகும். இவ்வாறு ஆன்மா சென்று பொருந்துதலும், சிவன் வந்து பொருந்துதலும் ஆகிய இவ்விரண்டும் ஏற்புடையன ஆகாவெனில், வேறு எப்படித்தான் கொள்வது என்ற வினா எழும். ஆசிரியர் இதற்குப் பின்வருமாறு விடையிறுக்கிறார்.
முத்திநிலை புதிதாய் அடையப்படுவது அன்று
ஆன்மாவும் சிவனும் இயைந்திருக்கின்ற இந்நிலை ஒருகாலத்தில் புதிதாய் ஏற்பட்டதன்று. இவ்வுறவு காலங் கடந்த உறவு. முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழமையாய் இருக்கிற உறவு. என்றென்றும் உள்ளதாகிய உறவு. ஆதலால் ஆன்மா சிவனைச் சென்றடைகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை ஆனால் இறைவனை அடைந்தார் என்று சொல்லுகிற வழக்கு இருக்கிறதே. அடைதலாவது முன்பு இல்லாத ஒன்றைப் புதிதாகப் பெறுவதுதானே என்று ஐயுறலாம். இதனை ஓர் எடுத்துக்காட்டுக் கூறித் தெளிவிக்கலாம். பிறவிக்குருடன் ஒருவன், அவன் சூரியவொளியையே பார்த்தறியான். ஆனால் அவன் நாள்தோறும் சூரியவொளியிலேயேதான் இருக்கிறான். அவனது கண்ணிலும் சூரியவொளி பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. அவனது கண்ணில் உள்ள படலமாகிய குற்றம் அவ்வொளியை அவன் உணராதபடி தடுத்து நிற்கிறது. ஒருநாள் அவனது கண்ணுக்கு அறுவை சிகிச்சை நடக்கிறது. படலம் நீக்கப்படுகிறது. அவன் காணும் ஆற்றலைப் பெறுகிறான். அவனுக்குச் சூரியவொளி புதியதாகத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அவ்வொளி அவனுக்கு முன்னர் எப்போதும் இருந்தது தானே. அதுபோலச் சிவமும் உயிரோடு என்றுமே இருக்கிறது. பாசத்தின் மறைப்பினால் உயிர் அதனை உணராதிருக்கிறது. பாசம்நீங்கித் தன் உணர்வில் சிவத்தைக் காணும் போது அவ்வனுபவம் அதற்குப் புதியதாகத் தோன்றுகிறது. சிவமாகிய முதற்பொருளைத் தான் அடைந்ததாக உணர்கிறது. இதுபற்றியே இறைவனை அடைதல் என்ற வழக்கு உண்டாயிற்று. இச்செய்யுளில், முத்திநிலை என்பது புதிதாய் வருவது அன்று; அஃது உயிருக்க இயற்கை என்ற அரிய உண்மையினை உணர்த்தியுள்ளார் ஆசிரியர்.
முத்தியில் முப்பொருள் எவ்வாறு இருக்கும்?
49. வாக்கு மனம்இறந்த வான்கருணை யாளன் உருத்
தாக்கறவே நிற்கும் தனிமுதல்வா நீக்காப்
பதியினைப்போல் நித்தம் பசுபாசம் என்றாய்
கதியிடத்து மூன்றினையும் காட்டு.
பதவுரை
வாக்கு மனம் இறந்த சொல்லுக்கும் மனத்திற்கும் எட்டாத நிலையினை யுடைய
வான் கருணையாளன் உரு சிவபெருமானின் வடிவமாக,
தாக்கு அறவே நிற்கும் உலகியலால் சிறிதும் தாக்கப்படாமல் நிற்கின்ற
தனி முதல்வா ஒப்பற்ற குரு முதல்வரே,
நீக்கா விட்டு நீங்காத
பதியினைப் போல் பதிப்பொருளாகிய இறைவனைப் போல
பசுபாசம் பசுக்களாகிய உயிர்களும், அவற்றைத் தடுத்து நிற்கும் பாசமாகிய தளையும்
நித்தம் என்றாய் என்றும் அழியாத நித்தப் பொருள்கள் என்று கூறினீர்.
(அவ்வாறாயின்)
கதியிடத்து முத்தி நிலையில்
மூன்றினையும் அம்முப்பொருள்களும் எவ்வாறு இருக்கும் என்பதை
காட்டு அடியேனுக்கு விளக்கியருள்க.
பொழிப்புரை
உரை உணர்வுக்கு எட்டாத நிலையினை உடைய முதல்வனது வடிவமாக நிலவுலகில் எழுந்தருளியிருந்து உலகியலால் சிறிதும் தாக்கப்படாமல் நிற்கும் ஒப்பற்ற ஞானாசிரியப் பெருந்தகையே, விட்டு நீங்காத பதியினைப் போலப் பசுவும் பாசமும் என்றும் அழியாத நித்தப் பொருள்கள் என்று கூறினீர். அங்ஙனமானால், முத்தியிடத்து அம் மூன்று பொருள்களும் எவ்வாறு இருக்கும் என்பதை அடியேனுக்கு விளக்கியருள வேண்டும் என்று மாணவர் வேண்டுகிறார்.
விளக்கம்
தனது ஆசிரியரைச் சிவமாகவே காணுதல்
சிவஞானமாகிய ஒளியைப் பெறாமல், அஞ்ஞானமாகிய இருளில் துன்பப்படுகின்றன. அவ்வுயிர்களுக்குச் சிவஞானம் ஆகிய விளக்கம் எவ்வாறு கிடைக்கும்? உயிர் தானே எதனையும் அறியமாட்டாது; வேறொரு துணை அறிவிக்கவே எதனையும் அறிவதாகும்; இத்தன்மைக் கல்வி கற்கும் முறையில் சிறப்பாகக் காணலாம். குருவில்லாமல் எக்கல்வியையும் தானே திருத்தமாகப் பெற இயலாது. சிலம்பம், வாட் பயிற்சி, வில் வித்தை போன்றவற்றைத் தக்க ஆசிரியரிடமிருந்தே பெற வேண்டியுள்ளது. இத்தகைய உலகியற் கல்வியையே குருவில்லாமல் அறிய முடியாத போது, உணர்தற்கரிய சிவஞானத்தை ஆசாரியரின் துணையில்லாமல் எங்ஙனம் பெற இயலும்? எனவே சிவஞானம் ஆசாரியர் மூலமாகவே கிடைப்பதாகும். இனி, ஏனைய கலைகளைத் தருதற்கு உரிய ஆசிரியராக யாரும் அமையலாம். ஆனால் சிவஞானத்தைத் தரும் ஆசிரியராக அமைபவன் இறைவன் ஒருவனே யாவன். ஞானத்தைத் தரும் ஆசிரியராக இறைவனே ஏன் வரவேண்டும்? அதனை உபதேசிப்பதற்கு ஏனையோரால் முடியாதா? என்ற ஓர் ஐயம் எழலாம்.
உடம்பில் ஒரு நோய் வந்தால் உரிய காலத்தில் மருந்து கொடுத்து அதைக் குணப்படுத்துகிறோம். அதுபோல, உயிரில் உள்ள நோய் அஞ்ஞானம். ஞானந்தான் அதனைப் போக்கும் மருந்து. அஞ்ஞானமாகிய நோயின் நிலையை அறிந்து உரிய காலத்தில் ஞானமாகிய மருந்தைக் கொடுத்தல் வேண்டும். ஞானம் ஆகிய மருந்தைக் கொடுப்பதற்கு உரிய காலம் என்பது எது? உயிரைப் பற்றியுள்ள ஆணவ மலத்தின் சத்தி மெலிவுற்ற நிலை மலபரிபாகம் எனப்படும். அவ்வாறு மூல மலம் பரிபாகம் உற்ற காலமே ஞானத்தை உணர்த்துதற்கு உரிய காலமாகும். மல பரிபாகம் வாராத போது ஞானத்தை உணர்த்தினால் ஒரு பயனும் விளையாது. ஆகவே உயிரில் மல பரிபாகம் எப்பொழுது வரும் என்று பார்த்துக் கொண்டேயிருந்து வந்தவுடனே ஞானத்தைத் தருதல் வேண்டும். உயிரில் நிகழும் மல பரிபாகத்தை யார் அறியமுடியும்? உயிர்க்குயிராய் உள்ளிருக்கும் இறைவன் ஒருவனே அதனை அறிய முடியுமே தவிர ஏனையோர்க்கு அது கூடாது. அது கருதியே, இறைவனே பருவம் பார்த்துக் குருவாகி வந்து ஞானத்தை அருளுவான் என்று கூறப்படுகிறது.
இறைவன் ஒருவனே ஞானாசிரியன் ஆவான் எனின் மெய்கண்டார் முதலிய பலரையும் ஞானாசிரியர்கள் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? என வினவலாம். ஆம். அவர்களெல்லாம் உண்மையில் ஞானாசிரியர்களே. ஏனெனில், அவர்கள் சிவத்தைச் சார்ந்து சிவமேயானவர்கள். அவர்களுக்கும் சிவனுக்கும் வேறுபாடு இல்லை. சிவமாம் தன்மையை யடைந்த இத்தகைய பெரியோர்களை இறைவன் தனது திருமேனியாகக் கொண்டு அவர்கள் வாயிலாக ஞானத்தை அருளுகிறான். அவர்கள் உலகில் நம்மைப் போல வாழ்ந்தாலும் அவர்களை நாம் சிவமாகவே காணுதல் வேண்டுமேயன்றி நம்மில் ஒருவராக எண்ணுதல் சிறிதும் ஆகாது. அருணந்தி சிவாசாரியார் தமக்கு இறைவன் ஆசாரியனாய் வந்து ஞானத்தை அருளிய முறையைக் கூறும் போது, விடம் உண்ட கண்டனாகிய பெருமான் தனது நீல கண்டத்தையும் நெற்றிக் கண்ணையும் மறைத்தருளி, திருவெண்ணெய் நல்லூரில் இருக்கும் மெய்கண்டதேவ நாயனாராக வந்து, ஞானத்தை அருளிப் பிறவிக் கடலினின்றும் எடுத்துத் தனது திருவடியாகிய கரையில் சேர்த்தருளினான் என்று இருபா இருபஃது என்னும் நூலில் கூறியுள்ளார். இதே முறையிலே, மெய்கண்ட தேவரின் மற்றொரு மாணவராகிய மனவாசகங் கடந்தாரும், உரை உணர்வுக்கு எட்டாத நிலையினை உடைய இறைவனே மெய் கண்ட தேவரெனக் குரு முதல்வராய் எழுந்தருளியிருந்தார் என்ற கருத்தினை இச் செய்யுளின் முன் இரண்டடிகளில் அமைத்துப் போற்றியுள்ள பான்மையை இங்கே காண்கிறோம்.
பதியினைப் போல் நித்தம் பசு பாசம்
பதி பசு பாசம் ஆகிய மூன்றும் நித்தமானவை என்பது சைவ சித்தாந்தத்தின் அடிப்படை நிலையாகும். காலம், இடம் என்ற வரம்புக்கு உட்பட்ட பொருளுக்கெல்லாம் தோற்றம் உண்டு. அழிவும் உண்டு. ஆதலால் அந்த வரம்புகளுக்கு உட்படாத, எல்லையற்ற பொருளே நித்தப் பொருளாக இருக்க முடியும். அப்பொருள் எங்கும் நிறைந்ததாக இருக்கும். காலம் கடந்ததாக இருக்கும். கால வரம்பற்ற இட வரம்பற்ற அப்பொருளை வியாபகப் பொருள் என்பர். இதனால் வியாபகப் பொருளெல்லாம் நித்தமாக இருக்கும் என்று துணியலாம். பதியாகிய கடவுளும், பசுவாகிய உயிர்களும், பாசமாகிய தளையும் வியாபகமாயும் நித்தமாயும் உள்ளவை என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது. எல்லையுடைய சிறுபொருள்களுக்குத்தான் இடம் பெயர்ந்து செல்லுதல் இயலும். வியாபகப் பொருளுக்கு இடப்பெயர்ச்சி என்பது இருக்க முடியாது. ஆணவ மலமாகிய பாசம் வியாபகப் பொருள். அஃது ஆன்மாவிடத்தில் சம நிறைவாகக் கலந்து விரவியிருக்கிறது. வியாபகப் பொருளாகிய அதற்கு இடம் பெயர்ந்து செல்லுதல் ஆகிய நீக்கம் சொல்ல வராது. அதனால் அது என்றும் ஆன்மாவிடத்தில் நீங்காதிருக்கும் என்றால் முத்தி நிலையிலும் உண்டு என்று ஆகும். முத்தியிலும் ஆணவம் உண்டு என்றால் அந்நிலை எப்படி விடுபட்ட நிலையாகும்? ஆனால் நூல்களெல்லாம் முத்தியில் ஆணவ மலம் நீங்கும் என்று அறுதியிட்டுக் கூறுகின்றனவே இதனை எவ்வாறு விளங்கிக் கொள்வது? இன்னும், நூல்களில் உயிர் சிவமாகிறது என்று கூறப்பட்டுள்ளதே. அவ்வாறாயின். முத்தியில் உயிர் என்பது இல்லாமற் போகுமோ? உயிர் நித்தம் என்பதற்கு மாறான முடிவாக அல்லவா இது உள்ளது? இப்படியாக முத்திநிலை பற்றி எழும் பற்பல ஐயங்களையும் கருத்திற் கொண்டே மாணவர் நீங்காப் பதியினை போல் நித்தம் பசு பாசம் என்றாய், கதியிடத்து மூன்றினையும் காட்டு எனக் கேட்கிறார். இதற்கு ஆசிரியர் அருளிய விடையை அடுத்த செய்யுளில் காணவிருக்கிறோம்.
முத்தியில் முப்பொருள் உள்ள நிலைமை
50. முத்தி தனில் மூன்று முதலும் மொழியக் கேள்;
சுத்த அனு போகத்தைத் துய்த்தல் அணு; மெத்தவே
இன்பம் கொடுத்தல் இறை; இத்தை விளை வித்தல் மலம்;
அன்புடனே கண்டு கொள் அப் பா.
பதவுரை
அப்பா நன் மாணாக்கனே,
முத்திதனில் பரமுத்தி நிலையில்
மூன்று முதலும் முப்பொருளும் அழிவின்றி நிற்கும் முறைமையை
மொழியக் கேள் யாம் கூறுகின்றோம் கேட்பாயாக.
சுத்த அனுபோகத்தை தூய பேரின்பமாகிய போகத்தை
துய்த்தல் நுகர்ந்து கொண்டிருப்பது.
அணு ஆன்மா.
மெத்தவே மிகவும்
இன்பம் கொடுத்தல் அவ்வின்ப நுகர்ச்சியை இடையீட்டின்றிக் கொடுத்து வருவது.
இறை சிவமாகிய முதற் பொருள்.
இத்தை இதை (இவ்வின்பத்தை)
விளைவித்தல் முத்தான்மா நுகர்வதற்கு, தான் மறைத்தலைச் செய்யாது மடங்கி நிற்றல் மூலமாக ஏதுவாய் நிற்பது
மலம் ஆணவ மலம்.
அன்புடனே இவ்வுண்மையைத் தலையாய பிரமாண நூல்களின் கூற்றுக்களில் அன்பு வைத்து
கண்டு கொள் நீ உணர்ந்து கொள்.
பொழிப்புரை
நன்மாணாக்கனே, பரமுத்தியில் முப்பொருள்களும் உள்ள முறைமையைக் கூறுகிறோம். கேள். தூய பேரின்பத்தை நுகர்ந்து கொண்டிருப்பது உயிர். அவ்வின்பத்தை இடையீடின்றிக் கொடுத்துக் கொண்டிருப்பவன் இறைவன். அப்பேரின்பத்தை விளைவித்து நிற்பது மலம். இவ்வுண்மையை உணர்ந்து கொள்.
விளக்கம்
முத்தியிலும் உயிர் தனியொரு முதல்
உயிர் பேரின்பத்தை அனுபவிக்கிறது என்பதன் மூலம் உயிர் முத்திக் காலத்திலும் நிலையாக உள்ள பொருள் என்பது புலனாகிறது. உயிர் சிவமாகிறது என்றால், உயிர் முற்றிலும் அழிந்து சிவத்தோடு சேர்ந்து விடுகிறது என்பது கருத்தன்று. அதன் கருத்து வேறு. அதனைச் சற்று முன்னே 46ஆம் செய்யுளின் உரையில் விளக்கியிருக்கிறோம். ஆகவே முத்தியிலும் உயிர் தனியொரு முதலாக உள்ளது என்பதை அறிதல் வேண்டும்.
உயிரை அணு என்று குறிப்பிட்ட காரணம்
அணு என்பது கட்டு நிலையில் நிற்கும் உயிரைக் குறிக்க வழங்கும் பெயராகும். ஆணவ மலத்தின் மறைப்பால் உயிரினது விரிந்த அறிவு சுருங்கிய அறிவாகிச் சிறுமைப்பட்டு நிற்றலின் அச்சிறுமை கருதி உயிர் அணு எனப்பட்டது. அச்சிற்றறிவு நீங்கி விரிந்த அறிவினைப் பெற்றுவிட்ட இம்முத்திக் காலத்திலும் உயிரை அணு என்று ஆசிரியர் குறிப்பிடுவது ஏன்? என்று எண்ணலாம். ஒரு கருத்துப் பற்றியே ஆசிரியர் இவ்விடத்தில் உயிரை அணு என்றார். வெள்ளமெனப் பெருகும் இறையின்பத்தில் மூழ்கி உயிரானது சிறிதும் புலனாகாது நிற்கும் என்பதைக் குறிக்கவே உயிரை அணு என்றார். புலனாகாத தன்மை அணுவுக்கும் உண்டு. பேரின்ப நுகர்ச்சியைத் தலைப்பட்ட உயிருக்கும் உண்டு. அவ்வொற்றுமை கருதியே உயிரை அணு என்றார்.
முத்தியில் ஆணவ மலத்தின் நிலை
இனி, முத்தியில் ஆணவ மலத்தின் நிலை என்ன? இத்தை விளைவித்தல் என்பதன் மூலம் மலமும் முத்திக் காலத்தில் நித்தமாக இருக்கிறது என்பது தெரிகிறது. அது எவ்வாறு இருக்கும் என்பதை நோக்குவோம். உயிரிடத்தில் திருவருள் ஒளி மேலிடுதலால் ஆணவ இருள் அதன் கீழ்ப்பட்டு அடங்கி விடுகிறது. மந்திரத்தால் நெருப்பின் ஆற்றலைக் கட்டுப்படுத்த வல்லவர் நெருப்பின் நடுவில் நின்றாலும் அஃது அவரைச் சுடுதல் இல்லை. அப்பொழுது நெருப்பினது சுடும் சத்தி எங்கே போயிற்று? அச் சத்தி எங்கும் போய் விடவில்லை. இல்லாமற் கெட்டொழிய வில்லை. இருந்தும் இல்லாததாய் அவரிடத்தில் செல்ல மாட்டாமல் மடங்கி நிற்கிறது. அது போல முத்திக் காலத்தில் ஆணவ மலம் இருந்தும் அதன் மறைப்பு சிவமே எனும்படி ஒன்றாய் நிற்கும் உயிரிடத்துச் செல்ல மாட்டாமையால், அது தன் சத்தி மடங்கி இல்லாதது போல் நிற்கும். நடராச வடிவத்தில் முயலகனைத் திருவடிக்கீழ் அழுத்தி வைத்திருப்பதிலிருந்து முத்தியில் ஆணவ மலம் அடக்கப்பட்டுள்ளதேயன்றி இல்லாமற் போகவில்லை என்று தெளியலாம். இவ்வாறு மல சத்தி மடங்கி நிற்றலையே மலம் கெடுதல் என்றும், மலம் நீங்குதல் என்றும் நூல்கள் கூறும். பெத்தத்தில் இறையின்பம் உயிரிடத்து விளையவொட்டாது தடுத்து நின்ற ஆணவ மலம் முத்தியில் அங்ஙனம் செய்ய மாட்டாமல் இருக்கும். இங்ஙனம் மலம் தான் மடங்கி நிற்றலால் இறையின்பம் உயிரிடத்தே விளைவதற்கு இவ்வகையில் காரணமாயிற்று. இதனைக் கருதியே இத்தை விளைவித்தல் மலம் எனக் குறிப்பிட்டார் ஆசிரியர். இதுவரை கூறியவற்றால், முத்தியில் ஆணவ மலம் உண்டு; ஆயினும் அதனால் உண்டாகும் பந்தம் இல்லை என்பது புலனாகும். இந்நிலையை விடுபட்ட நிலை என்று கூறலாம் தானே.
முத்திக்கு வழி
51. அப்பாஇம் முத்திக்கு அழியாத காரணந்தான்
செப்பாய் அருளாலே; செப்பக் கேள் ஒப்பில்
குரு லிங்க வேடம் எனக் கூறில் இவை கொண்டார்
கரு வொன்றி நில்லார்கள் காண்.
பதவுரை
அப்பா ஐயனே,
இம் முத்திக்கு இப்படிப்பட்ட முத்தியை அடைவதற்கு
அழியாத காரணந்தான் நிலையான வாயில்தான் யாது என்பதை
அருளாலே தயை கூர்ந்து
செப்பாய் கூறியருள்க (என்று மாணாக்கர் வேண்ட, ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார்)
செப்பக் கேள் யாம் கூறுவதைக் கேள்
ஒப்பு இல் ஒப்பில்லாத
குரு லிங்க வேடம் குரு லிங்க சங்கம வழிபாடே வீட்டிற்கு வாயில் என்று
கூறில் ஆகமங்கள் கூறுமானால்
இவை கொண்டார் இம் மூன்று இடங்களிலும் இறைவனைத் தெளியக் கண்டு வழிபடுதலை மேற்கொண்டவர்
கரு ஒன்றி நில்லார்கள் கருவிற் பொருந்தி மீண்டும் பிறவார். (வீடு பெறுவர்)
காண் இதனை உணர்வாயாக.
பொழிப்புரை
ஐயனே, இம் முத்தியை அடைதற்கு உரிய வழியைக் கூறியருள்க என வேண்டுகிறார் மாணவர். ஆசிரியர் கூறுகிறார்: குரு, இலிங்கம், சங்கமம் என்னும் இம் மூன்றுமே இறைவன் விளங்கித் தோன்றும் இடங்கள் என்று ஆகமங்கள் கூறும். இவ்விடங்களில் முதல்வனைத் தெளியக் கண்டு வழிபடுதலை மேற்கொண்டவர் கருவிற் பொருந்தி மீளப் பிறவார்.
விளக்கம்
குரு வழிபாடும், இலிங்க வழிபாடும், அடியார் வழிபாடும் ஆகிய இவையே முத்திக்கு வழியாகும் என்பது கூறப்பட்டது.
தாபர சங்க மங்கள்
எனும் இரண்டு உருவில் நின்று
மாபரன் பூசை கொண்டு
மன்னுயிர்க்கு அருளை வைப்பன்
என்று சிவஞான சித்தியார் கூறுகிறது. தாபரம்பெயராது நிற்பன. திருக்கோயிலிலுள்ள சிவலிங்கம் முதலிய திருவுருப் படிமங்கள் தாபரம் எனப்படும். சங்கமம் உலாவுவன; அடியார்கள். மேற்கூறிய செய்யுளில் குருவையும் சங்கமம் என்பதனுள் அடக்கி இறைவனது வடிவங்களைத் தாபரம்; சங்கமம் என இரண்டாகக் கூறியுள்ளமை காணலாம்.
முத்தித் தலைவர்
இவ்வுலகில் இவ்வுடம்போடு கூடி வாழும்போதே சிவத்தை அணைந்து முத்தி நிலை வாய்க்கப் பெற்றவரைச் சீவன் முத்தர் என்பர். அவர் குரு முதலிய மூவரையும் வழிபட்டு வாழும் பத்தி நெறியில் உறைத்து நிற்பர் என்பதை உணர்த்துகிறார் ஆசிரியர்.
52. கற்றா மனம்போல் கசிந்து கசிந் தேஉருகி
உற்றாசான் லிங்கம் உயர்வேடம் பற்றாக
முத்தித் தலைவர் முழுமலத்தை மோசிக்கும்
பத்திதனில் நின்றிடுவர் பார்.
பதவுரை
முத்தித் தலைவர் சீவன் முத்தர்
ஆசான் தமக்குத் தெளிவினைத் தந்த குருவையும்
லிங்கம் திருக்கோயிலில் உள்ள திருமேனிகளையும்
உயர் வேடம் உயர்ந்த திருவேடம் பூண்ட மெய்யடியார்களையும்
பற்றாக உற்று தமக்குப் பற்றுக் கோடாகப் பொருந்தி
கன்று ஆ கன்றை ஈன்ற தாய்ப் பசு
மனம் போல் தன் கன்றை நோக்கி மனம் குழைந்து நிற்பதைப் போல
கசிந்து கசிந்தே உருகி குரு முதலிய மூவரையும் கண்ட போது மனம் மிகக் கசிந்து உருகி,
முழு மலத்தை மல வாதனையை
மோசிக்கும் போக்குகின்ற
பத்திதனில் பத்தி நெறியில்
நின்றிடுவர் ஊன்றி நிற்பர்.
பார் ஆதலால், குரு லிங்க சங்கம வழிபாடே முத்திக்கு சிறந்த சாதனம் என்பதை அறிவாயாக.
பொழிப்புரை
சீவன் முத்தராய் உள்ள தலைவர் தமக்குத் தெளிவினைத் தந்த குருவினையும், திருக்கோயிலில் உள்ள திருமேனியையும், உயர்ந்த திருவேடம் பூண்ட மெய்யடியார்களையும் கண்டபோது, அணிமையில் கன்றை ஈன்ற தாய்ப்பசு தன் கன்றை நோக்கி எவ்வாறு குழைந்து நிற்குமோ அவ்வாறு மனம் கசிந்து உருகி நிற்பர். மல வாதனையைப் போக்க வல்ல பத்தி நெறியில் ஊன்றி நிற்பர். ஆதலால், குரு லிங்க சங்கம வழிபாடே முத்திக்குச் சிறந்த சாதனம் என்பதை அறிவாயாக.
விளக்கம்
குரு வழிபாடு
முப்பொருள்களின் இயல்பைத் தெளிய உணர்த்தி, கட்டினின்றும் ஆன்மாவை விடுவித்து, மெய்ப் பொருளாகிய சிவனிடத்து அன்பை உண்டாக்கி, அவனது திருவடியைப் பற்றிக் கொள்ளுமாறு செய்பவரே குரு ஆவார். அவர் நம்மைப் போலவேதான் காணப்படுகிறார். நம்மைப் போலவே உண்ணல், உடுத்தல் முதலியவற்றைச் செய்கிறார். அதுபற்றி, அவரை நம்மில் ஒருவராகக் கருதிவிடுதல் கூடாது. அவர் சிவமேயாவார். அஃது எவ்வாறு என்பதைக் காண்போம்.
உலகில் வாழ்கின்ற, மலம் நீங்கிய தூய அறிவாகிய ஆன்மா சுத்தான்மா எனப்படுவார். அவர் நான் என்னும் சீவபோதம் அறவே நீங்கியவர்; அருள் வழியே நிற்பவர். சிவன் தன் தன்மைகளை அவர்க்கு ஆக்குவான்; தன் செயல்களை அவர்க்கு ஆக்குவான்; அவரைத் தனது வியாபகத்துள் அடக்கித் தானாக்கி நிற்பான். இஃது, உலைத்தீ தன்னைச் சார்ந்த இரும்பைத் தானாக்கி விடுதல் போன்றது எனலாம். அத் தீ தனது தன்மையை இரும்புக்கு ஆக்குகிறது. தனது செயலை இரும்புக்கு ஆக்குகிறது. அந்நிலையில் இரும்பு ஒளிவீசுகிறது என்றால், அஃது இரும்பின் தன்மையோ? நெருப்பின் தன்மையோ? அந்நிலையில் இரும்பு சுட்டெரிக்கிறது என்றால் அச்செயல் இரும்பின் செயலோ? நெருப்பின் செயலோ? நெருப்புத்தான் அவ்வாறு செய்கிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நெருப்பு இரும்பைத் தன்னுள் அடக்கி அதனைத் தானாக்குமாறு போலச் சிவனும் சுத்தான்மாவைத் தானாக்கி நிற்பான். அவ்வாறு செய்வித்து அச் சுத்தான்மாவை ஆசாரியராக உலகத்திற்கு வழங்கி, அவர் இடமாக நின்று ஞானத்தை உணர்த்துவான். மேற்கூறிய உவமையில், ஒளி வீசுவது இரும்பாகாது அதனைத் தானாக்கிய நெருப்பேயாதல் போல, இங்கு ஞானத்தை உணர்த்தும் செயலும் சுத்தான்மாவின் செயலாகாது அவரைத் தானாக்கி நின்ற சிவனது செயலேயாதல் உணரத்தக்கது. இதுபற்றியே, ஞானத்தைத் தரும் ஆசான் மூர்த்தி சிவமே என்று சொல்லப்படுகிறது. இறைவனே குருவாய் வருவான் என்பதை நமது சாத்திரங்களும் தோத்திரங்களும் பலபடியாக எடுத்துக் கூறுகின்றன. பரம்பொருள் ஒருநாமம் ஒருருவம் ஒன்றும் இல்லாதது. அதனால் அப்பொருளை யாரும் அறிதல் இயலாததாகிறது. அப்படிப்பட்ட அரிய பொருள் அனைவரும் கண்டும் உரையாடியும் மகிழும் வண்ணம் ஆசாரியனாய் எழுந்தருளி வந்தது என்ற கருத்துப்பட,
அகளமாய் யாரும் அறிவரிது அப்பொருள்
சகளமாய் வந்தது
என்று திருவுந்தியார் கூறும். அகளம் உருவம் இல்லாதது. சகளம் உருவம் உடையது. ஆராலும் காண்டற் கரியான் எமக்கெளிய பேராளன் (திருவம்மானை) என்றும் சொற்களில் மணிவாசகர் உருவமற்ற இறைவன் தம் பொருட்டு ஆசாரியனாக உருவந்தாங்கி வந்தஎளிவந்த தன்மையை வியந்து குறிப்பிட்டுள்ளார். ஐம்புல வேடர் சுழலிற் பட்டுத் தன்னையும் அறியாது, தலைவனையும் அறியாது துயருறும் தொல்லுயிரை அவ்வேடரிடத்தினின்றும் மீட்டுத் தனது பேரின்பத்தை அளித்தற் பொருட்டே இறைவன் ஆசிரியத் திருமேனி தாங்கி வருகிறான் என்று சிவஞான போதம் முதலிய சாத்திர நூல்கள் கூறும்.
பழகிய ஒரு விலங்கைக் கொண்டு பல விலங்குகளைப் பிடிப்பது போலப் பக்குவப்பட்ட ஆன்மாக்களை ஆட்கொள்ளும் பொருட்டு இறைவன் ஆசாரிய மூர்த்தியாய் வருவான். இவ்வாறு இறைவன் ஆசிரியத் திருமேனி தாங்கி வருவதை மானிடச் சட்டை சாத்தி வருதல் என்பர். அவ்வாசிரியத் திருமேனியை, பார்வையென மாக்களை முன் பற்றிப் பிடித்தற்காம் போர்வை என்று திருவருட் பயன் கூறும். இதுகாறும் கூறியவற்றால், இறைவனே குருவாய் வருவான் என்பதன் பொருளும், குருவும் இறைவனும் வேறல்லர் என்பதும் இனிது விளங்கும். சீவன்முத்தி நிலையை எய்தினோர் தமக்கு உண்மை ஞானத்தை அருளிப் பிறவிக் கடலினின்றும் தம்மைக் கரையேற்றிய ஞானகுருவைச் சிவமே எனத் தெளிந்து வழிபட்டு வருவர். மெய்யுணர்வைப் பெற்றுவிட்ட பின்னரும், இவ்வுலகில் வாழும் வரையில், பாசமானது அலைகள் போல வந்து வந்து தாக்கக் கூடும். இவ்வாறான இடர்ப்பாடு தோன்றாதபடி சீவன்முத்தராய் உள்ளோர் தம்ஞான குருவின் அடிநிழலைப் பிரியாது உறைவர்; அவரை விடாது பற்றி நின்று வழிபட்டு வாழ்வர்.
இலிங்க வழிபாடு
இலிங்கம் என்பது திருக்கோயிலினுள் இருக்கும் திருவுருவங்களைக் குறிக்கும். அத்திருமேனிகள், இறைவன் தன் அன்பர்க்கு அவ்வப்போது காட்டியருளிய திருவுருவங்களின் வடிவங்களேயாகும். பசுவின் பால் அதன் உடலிற் பரவியிருந்தாலும் அதனைக் கறந்து கொள்ளுதற்குரிய உறுப்பு அதன் மடியேயாகும். அதுபோல, எல்லாப் பொருள்களுமே இறைவன் பிரிவறக் கலந்து நிற்கும் இடங்கள் தாம் என்றாலும், திருக்கோயிலில் உள்ள திருவுருவங்களே அவன் விளங்கித் தோன்றும் இடங்கள் ஆகும். இலிங்கமாகிய திருமேனிகள் சிவ விளக்கம் உடையன என்பதை அறிந்தோம். புறத் தொழில் அளவில் வழிபட்டு வரும் சரியையாளருக்கு இறைவன் அத் திருமேனிகளில் வெளிப்படாது அங்கு மறைந்து நின்றே அருள்புரிவன். புறத் தொழில், அகத் தொழில் என்னும் இரண்டினாலும் வழிபாடு செய்வோர் கிரியையாளர். அவர்க்கு, விறகில் தீ கடைந்த பொழுதில் வெளிப்பட்டுத் தோன்றுவது போல மந்திரம் உள்ள பொழுது அத் திருவுருவில் இறைவன் விளங்கி நின்று அருளுவான்; கடையாத பொழுது விறகில் தீ வெளிப்படாதது போல மந்திரம் இல்லாத பொழுது அங்கு விளங்காது நிற்பான்.
இனி, ஞானியராகிய முத்தர் அனைத்துப் பொருளையும் சிவமாகக் காணும் தன்மை உடையவர். அவர் திருக்கோயிலில் உள்ள திருவுருவத்தையும் சிவமாகவே காண்பர். அவர்க்கு இறைவன், முதற்கன்றை ஈன்ற பசு தன் கன்றை நினைந்த அளவில் அதன் மடியில் பால் தானே விம்மி ஒழுகுவது போல, அத் திருவுருவில் தானே வெளிபட்டு அருள்புரிவன். இதற்குச் சான்றாகச் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைக் காண்போம். சுந்தரர் திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து மகிழ்ந்துறையும் காலத்தில் ஒரு நாள் திருவாரூரை மிக நினைந்து புறப்பட்டார். ஒற்றியூரின் எல்லையைக் கடந்த அப்பொழுதே அவருக்குக் கண்ணொளி மறைந்தது. சங்கிலியாருக்குத் தான் செய்து கொடுத்த வாக்குறுதி தவறிய காரணத்தால் இது நிகழ்ந்தது என்பதை உணர்ந்தார்.
உடன்வருவோர் வழிகாட்டத் தொடர்ந்து சென்று திருவெண்பாக்கம் என்ற ஊரை அடைந்தார். திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு, பெருமானே, உனக்கு நேரும் பழியை நினையாமல் நீ என் கண்ணை மறைத்து விட்டாய். இக் கோயிலுள்ளே நீ இருக்கின்றாயோ? என்று வினவினார். அதற்கு இறைவர், யாம் கோயிலினுள் இல்லாமல் இல்லை. இருக்கின்றோம். நீர் உம் வழியிற் செல்லும் என்று கூறி ஊன்றுகோல் ஒன்றைக் கொடுத்தருளினார். இவ்வாறு சுந்தரர் திருக்கோயிலில் உள்ள சிவலிங்கத் திருமேனியை வணங்கி,
குழைவிரவு வடிகாதா! கோயில் உளாயே
என்று வினவியபொழுது, இறைவர் அங்கே விளங்கி நின்று அவரைப் புறக்கணிப்பார்போல உளோம் போகீர் என விடையிறுத்த இந்நிகழ்ச்சியால், ஞானியர்க்கு இறைவன் திருவுருவங்களில் விளங்கியே நிற்பான் என்பது இனிது புலனாகும். சிவலிங்கம் முதலிய திருமேனிகளே அன்பு விளைதற்கு இடமாய் இறைவன் விளங்கித் தோன்றும் அருள்நிலைகள் ஆதலால், சீவன் முத்தராய் உள்ளோர் தம் அன்பு செல்லும் இவ்விடங்களில் அவனை வழிபடுதற்கு உரியர்.
சங்கம வழிபாடு
உயிர்களால் உணர வாராதவன் இறைவன். ஆயினும் உயிர்கள் அவனை உணர்ந்தாலன்றி உய்தி பெறுதல் இயலாது. ஆதலால் அவை தன்னை உணர்ந்து வழிபடுதற் பொருட்டு முதல்வன் தனது திருக்கோலமாகிய திருநீறு, தாழ்வடம், சடைமுடி, கல்லாடை முதலியவற்றைத் தன் அன்பர்க்குக் கொடுத்துள்ளான். அவ்வன்பர்கள் நான் என்னும் சீவபோதம் அறவே நீங்கியவர்கள். அவர் இறைவனையே மறவாது நினைத்தலால் இறைவன் அவரைத் தன்னுள் அடங்கியிருக்கச் செய்து, அவரைத் தானாக்கிக் கொள்கின்றான்; அவ்வன்பரிடத்துத் தயிரில் நெய்போல விளங்கி நிற்கின்றான். பாசத்தின் நீங்காத மற்றையோரிடத்துப் பாலில் நெய் போல அவன் விளங்காது நிற்பன். இத்தகைய மெய்யன்பரை வேற்றுமை சிறிதும் பாராட்டாது சிவமாகவே தெளிந்து வழிபடல் வேண்டும் என்பதைப் பின்வரும் திருத்தாண்டகச் செய்யுள் வலியுறுத்தும்.
எவரேனும் தாமாக இவாடத் திட்ட
திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி
உவராதே அவரவரைக் கண்ட போதே
உகந்தடிமைத் திறம் நினைந்தங் குவந்து நோக்கி
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி
இரண்டாட்டா தொழிந்து ஈசன் திறமே பேணிக்
கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே. (6 : 61 : 3)
இதில் அமைந்த பொருள் வருமாறு
நெற்றியில் திருநீறு அணிந்து உருத்திராக்கம் பூண்டு வந்தவரைக் கண்டால், அவர் எவரேயாயினும், அஃதாவது எவ்வகைக் குற்றம் உடையவராயினும், அக்குற்றங்களை நினைந்து அவரை வெறுத்தல் செய்யாது, அவரைக் கண்டபோதே அவரது திருவேடத்தின் மேல் விருப்பம் எழப்பெற்று, திருவேடம் காணக் கிடைத்ததே என்று மகிழ்ந்து அவரை விரும்பி நோக்கி, நாம் வழிபடுதற்கு உரியவர் இறைவன் அல்லவா? அத்திருவேடம் உடையாரும் நம்மால் வழிபடத்தக்கவர் தாமா? என்றெல்லாம் மனத்தை இருதலையாகச் செலுத்தாமல், இறைவனையும் அவரையும் ஒரே நிலையில் மனத்திற் கொண்டு, இறைவனை வழிபடுமிடத்துச் செய்யும் செயல்கள் அனைத்தையும் அடியவரிடத்தும் விரும்பிச் செய்து அவரைத் தொழுதல் வேண்டும். அப்படித் தொழுவார் நெஞ்சத்துள் சிவ பெருமானைக் காணலாம். மேற்காட்டிய பாடலில் உள்ள சில தொடர்களின் அமைப்பையும் பொருளையும் தெரிந்து கொண்டால் அப்பாடலை நன்கு விளங்கிக் கொண்டவராவோம். தொடக்கத்தில் உள்ள எவரேனும் தாமாக என்ற தொடரில் தாம் என்பது பொருள்தராத அசைச் சொல்.
எனவே அதை நீக்கி எவரேனுமாக எனக்கொண்டு, எவ்வகைக் குற்றம் உடையவராய் இருப்பினும் எனப் பொருள் கொள்ளப்பட்டது. இவர் தேவர் அவர் தேவர் என்ற தொடரில் தேவர் என வந்த ஈரிடத்திலும் ஓகாரம் மறைந்திருக்கிறது. எனவே இவர் தேவரோ? அவர் தேவரோ? என அமைத்துக் கொள்ள வேண்டும். இவர் என்றது திருவேடம் உடையாரையும், அவர் என்றது இறைவனையும் குறித்தன. எனவே நம்மால் வழிபடுதற்கு உரியவர் இத்திருவேடம் உடையவரோ? அல்லது அவ்விறைவனோ? என்பது இத்தொடர் குறிக்கும் பொருளாகும். இரண்டு ஆட்டாது ஒழிந்து என்பதற்குச் சிவபிரானை வணங்குவதா? திருவேடமுடையாரை வணங்குவதா? என உள்ளத்தை இருதலையாக ஆராய விடாமல் என்பது பொருள். இறைவனிடத்துச் செய்யும் செயல்களையே இத்திரு வேடமுடையாரிடத்தும் செய்து அவரை வழிபடல் வேண்டும் என்ற கருத்து ஈசன் திறமே பேணி என்பதால் உணர்த்தப்பட்டது. திருவேடம் உடையாரைச் சிவன் எனவே தெளிந்து அவரை வழிபடுதலில் ஒரு சிறிதும் பிறழாது இருத்தல் வேண்டும் என்பது இத்திருப்பாட்டில் பெரிதும் வலியுறுத்தப்பட்டுள்ளமை காணலாம். சீவன்முத்தர் முதல்வனது அருளைத் தலைப்பட்டு அதனோடு ஒன்றி, அவ்வருளால் முதல்வனை அறிந்து அவனிடத்து அழுந்தி நிற்கும் பேறு பெற்றவர். அந்நிலையை எய்திய பின்னரும் அவர்கள் திருக்கோயிலில் உள்ள திருவுருவங்களையும், திருவேடம் உடைய அடியார்களையும் வழிபட வேண்டுமோ? என்ற ஐயம் நமக்கு எழும்.
சீவன்முத்தர்க்கு உடம்பு உள்ள வரையில் உடம்பு முகந்து வந்த பிராரத்த வினையின் காரணமாக உலக நோக்கம் உண்டாகும்; நில்லாதவற்றை நிலையின என்றுணரும் மயக்கவுணர்வு வந்து கூடி மேம்படும். அம் மயக்கவுணர்வு நீங்கி மெய்யுணர்வு மேலோங்குதற்கு ஆலய வழிபாடும், மெய்யடியார்களை நாடி வழிபடுதலும் இன்றியமையாது வேண்டும்.
இது தொடர்பாக மற்றுமோர் ஐயம் எழலாம். பிராரத்தமும், அது காரணமாக வரும் மயக்கவுணர்வும் ஒழிதற்கு அஞ்செழுத்தை விதிப்படி உச்சரித்தலே போதும் ஆகலின், அதன் பொருட்டு வழிபாடு செய்தல் வேண்டும் என்பது எதற்கு? என ஐயுறலாம். அஞ்செழுத்து உச்சரிப்புச் சோர்வின்றி நிகழ்தலும் இவ்வழிபாடு உள்ள பொழுதேயாகும் என்பதைக் கருத்திற் கொண்டால் அவ்ஐயம் நீங்கிவிடும். இவ்விடத்தில், சேரமான் பெருமாள் நாயனார் பற்றிய ஒரு செய்தியைக் கூறுதல் பொருத்தமாகும். சேரமான் பெருமாள் முடி சூடிப் பட்டத்து யானை மீது முதல் உலா வரும்போது தோளில் உவர்மண் பொதியினைச் சுமந்து கொண்டு ஒரு வண்ணான் எதிரில் வந்தான். மழையினால் உவர்மண் கரைந்து அவன் உடலிற் படிந்து பெற்ற வெண்ணிறக் கோலத்தோடு முழுநீறு பூசிய முனிவர் போலத் தோன்றினான். சேரமான் பெருமாள் அவ்வுருவைச் சிவன் எனவே கண்டு யானையினின்றும் இறங்கி அவனைக் கைகூப்பித் தொழுதார். அரசர் பெருமான் தன்னைத் தொழுவதைக் கண்டு அஞ்சிய அவ்வண்ணான் தேவரீர் அடியேனை யார் எனக் கருதியது? அடியேன் அடி வண்ணன் என்றான். சேரர் பெருமான் நிலையாத அரச வாழ்க்கையைப் பெரிதாக எண்ணும் மயக்கவுணர்வு சிறிதும் இல்லாமல், திருவேடமே மெய்ப்பொருள் என்று உணர்ந்த அம்மெய்யுணர்வு நிலையில் நின்று பின்வருமாறு கூறினார். திருநீற்று வாரவேடம் நினைப்பித்தீர். அடியேன் அடிச் சேரன். வருந்தாது ஏகும் என்று கூறி அவனைப் பிரிந்தார். உலகம் எப்படிப்பட்டவரையும் தன் வழியில் இழுத்துக் கீழ்நெறியிற் செலுத்திவிடும். ஆதலால் அதற்கு இடங்கொடாமல் சீவன்முத்தர் மெய்யன்பர்களை வழிபட்டு அவர்கள் நடுவே எப்போதும் இருத்தல் வேண்டும். அம்மெய்யன்பர்களை சிவஞானத்தை நன்கு தெளியச் செய்து, மும்மலங்களாகிய படுகுழியினின்றும் கரையேற்றி, முதல்வன் திருவடியில் சேர்ந்து நிற்கச் செய்வர். அத்தகைய அன்பர் கூட்டத்தை அடைந்திருத்தலே சீவன்முத்தர் தாம் எய்த விரும்பும் பயனை எய்துதற்கு வழியாகும்.
சாதகரும் சீவன் முத்தரும்
சரியை கிரியை முதலிய சாதனங்களில் நிற்போரும் குருலிங்க சங்கம வழிபாட்டினைச் செய்கிறார்கள். சாதனத்தில் நின்று பெறக் கூடிய சாத்தியமாகிய ஞானத்தைப் பெற்றுவிட்ட சீவன்முத்தர்களும் குரு லிங்க சங்கம வழிபாட்டினைச் செய்கிறார்கள் என்றால் இவ்விருவருக்கும் வேறுபாடுதான் என்ன? என்று கேட்கலாம். ஓர் எடுத்துக்காட்டின் மூலம் இதனை விளக்குவோம். மாணாக்கர்கள் நாள்தோறும் பாடம் படிக்கிறார்கள். மெய் வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல் படிக்கிறார்கள். அவர்களைப் போலவே, பாடம் நடத்துகிற ஆசிரியரும் நாள்தோறும் படிக்கிறார். குறிப்பெடுக்கிறார். ஆனால் இவ்விருவர் படிப்புக்கும் வேறுபாடு உண்டு அல்லவா? மாணாக்கர்கள் அறிவை ஈட்டுவதற்காக முயன்று உழைத்துப் படிக்கிறார்கள். ஆசிரியரோ முன்னரே கற்று வைத்த பொருளை நினைவு படுத்திக் கொள்வதற்காகப் படிக்கிறார். இவர் உழைத்துப் படிக்கவேண்டியதில்லை. சற்றே புத்தகத்தைப் புரட்டினால் போதும். எனவே இவ்விருவர் படிப்புக்கும் பெரிதும் வேறுபாடு உள்ளது என்பது புலனாகும். இதே போலத்தான் சரியை முதலிய சாதனங்களில் நிற்போர் சிவஞானத்தைப் பெறுவதற்காகக் குரு லிங்க சங்கம வழிபாட்டை மேற்கொள்கிறார்கள். சீவன்முத்தரோ தாம் முன்னரே பெற்றுள்ள சிவஞானத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அவ்வழிபாட்டினை மேற்கொள்கிறார்கள். எனவே, சாதகரும் சீவன் முத்தரும் செய்யும் வழிபாடு தோற்றத்தில் ஒன்று போலக் காணப்படினும் பெரிதும் வேறுபட்டு நிற்கும் என்பது அறியற்பாலது.
பத்திதனில் நின்றிடுவர்
வாழ்க்கையில் அடையவேண்டிய மேலான பேறு சிவத்தைப் பெறுதலே. உயிர்களுக்கு அதனினும் சிறந்த பேறு வேறொன்றுமில்லை. சிவமோ ஆராலும் காண்டற்கரிய பொருள். அதனை எவ்வாறு அடைவது?
அன்பே அவனை அடைதற்கு வழி என்று சாத்திரங்களும் தோத்திரங்களும் ஒருமுகமாகக் கூறுகின்றன. அவனை அடைவதற்குத் தடையாய் இருப்பது நான் என்னும் தற்போதம் ஆகும். நான் என்று உயிர் தன்னைத் தனித்து நிற்கும் பொருளாக எண்ணுகின்ற வரையில் அது இறைவனோடு ஒன்ற முடியாது. உப்பானது நீரோடு கலந்து ஒன்றுபட வேண்டுமானால் உப்பினது கட்டித்தன்மை கெட வேண்டும். அதுபோல உயிர் இறைவனோடு ஒன்றுபட வேண்டுமானால் நான் என்ற தற்போதம் கெடவேண்டும். உள்ளம் உருகில் உடனாவார் என்ற ஞானசம்பந்தர் திருவாக்கு (2 :111: 3) இக்கருத்தை உட்கொண்டு எழுந்ததாகும். இதில் உள்ளம் என்பது நான் என்னும் தற்போதத்தைக் குறிக்கும். உருகுதலாவது, அத் தற்போதம் கெட நிற்றல். எனவே, உள்ளம் உருகுதல் என்பது யான் எனது என்னும் செருக்கு நீங்கிய நிலையை உணர்த்துகிறது. தற்போதம் நீங்கிய பொழுது உயிர்க்குயிராய் என்றும் உடனிருப்பவனாகிய இறைவன் அவ்வுயிரைத் தனது பெருநிறைவினுள் அடக்கிக் கொண்டு தானாகிநிற்பன். கட்டித் தன்மை நீங்கிய உப்பை நீரானது தன்னுள் அடக்கித் தானாய் நிற்றல் போன்றது இது.
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே
என்ற கந்தரனுபூதி வரிகள் இவ்வனுபவத்தையே உணர்த்தி நிற்கின்றன. மேற்கூறியவற்றால், அன்பே இறைவனை அடைவிப்பது என்பதும், அன்பினால் உள்ளம் உருகப் பெறாதவர் அவனை அடைதல் இயலாது என்பதும் விளங்கும். இதனை,
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்பன் அவர்தம்மை நாணியே
என்னும் அப்பர் பெருமான் திருவாக்கு நன்கு வலியுறுத்தி நிற்றல் காணலாம்.
யாவராயினும் அன்பரன்றி
அறியொணா மலர்ச் சோதியான் (சென்னிப்பத்து, 1)
என்று மணிவாசகரும் கூறியுள்ளார்.
ஆரேனும் அன்பு செயின் அங்கே தலைப்படுங்காண்
ஆரேனும் காணா அரன்
என்று திருக்களிற்றுப் படியார் என்னும் சாத்திர நூல் கூறும். இறைவனிடத்துச் செலுத்தும் அன்பிலே இருநிலைகள் உண்டு. இறைவனை வழிபட்டால் இது கிடைக்கும் என்று ஒரு பயன் கருதி அன்பு செலுத்துவது முதல் நிலை. இது காமிய பக்தி எனப்படும். இவ்வாறு பயன் கருதி நிகழ்ந்த அன்பு சிறிது சிறிதாக மாறிப் பின் பயன் கருதாத அன்பாய் நிகழும். இது நிட்காமிய பக்தி எனப்படும். இதுவே இறைவன் மீது கொண்ட முதிர்ந்த அன்பாகும். உண்மையன்பாகும். இம் மெய்யன்பு கைவரப் பெற்றவர் வேறொன்றையும் விரும்பாது இறைவனை, கனியினும் கட்டிபட்ட கரும்பினும் பனிமலர்க்குழற் பாவை நல்லாரினும் தனிமுடி கவித்து ஆளும் அரசினும் இனியவனாக உணர்ந்து, அவனையே மேலும் மேலும் விரும்புவர்; இறைவன் எமது துன்பத்தைக் களையாதவனாயினும் ஆகுக. எம்மீது இரக்கம் கொள்ளாதவனாயினும் ஆகுக. எக்காரணத்தாலும் அவனிடத்துக் கொண்ட எம் அன்பு நீங்குவதில்லை என இறைவனையே நினைந்திருப்பர். உலகையெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆளும் முடியரசர் செல்வத்தினும் மூன்று மடங்கு உயர்ந்தது, சிவனுக்குத் தொண்டு செய்து ஓடேந்தி இரந்து உண்பது என மதித்து அவனுக்குத் தொண்டு செய்வர். அவன் தமக்குச் செய்த செய்து கொண்டிருக்கின்ற உபகாரத்தை நினைந்து நினைந்து மனங்கசிந்து உருகிக் கண்ணீர் பெருகி நிற்பர். இத்தகைய அன்பு நெறியில் நின்று, சீவன் முத்தராய் உள்ளோர் திருக்கோயில் வழிபாட்டிலும், சிவனடியார் வழிபாட்டிலும், ஆசாரிய பக்தியிலும் உறைத்து நிற்பர் ஆதலால், மாணவனே, நீயும் அவ்வழிபாட்டினைச் செய்து உய்தியடைவாயாக என்று ஆசிரியர் இப்பாடல் வழியாக அறிவுறுத்துகிறார்.
மாணவரின் நன்றியுரை
53. வாழ்ந்தேன் அருட்கடலே வற்றாப் பவக்கடலில்
வீழ்ந்தே அலையாமல் மேதினியில் சூழ்ந்துவிடா
வெண்ணைச் சுவேதவன மெய்கண்ட நாதனே
உண்மைத் தவப்பயனே உற்று.
பதவுரை
சூழ்ந்து மெய்யன்பர்கள் எப்பொழுதும் சூழ்ந்து கொண்டு
விடா நீங்காமல் உள்ள,
வெண்ணைச் சுவேதவன திருவெண்ணெய் நல்லூரை வாழிடமாகக் கொண்ட, சுவேதவனப் பெருமாள் என்னும் பிள்ளைத் திருநாமம் உடைய,
மெய்கண்ட நாதனே மெய்கண்டநாதரே,
அருட்கடலே கருணைக் கடலாக உள்ளவரே,
உண்மைத் தவப்பயன் அடியேன் முன்முன் பிறவிகளிற் செய்த உண்மையான தவத்தின் பயன்
உற்று இப்பொழுது வந்து கைகூடியதனால்
(உம்மைப் புகலாக அடைந்து சிவஞான உபதேசம் பெற்றேன். அதனால்)
மேதினியில் உலகில்
வற்றா சிறிதும் குறையாமல் இடையீன்றித் தொடர்ந்து வருகின்ற
பவக் கடலில் பிறவியாகிய கடலில்
வீழ்ந்து அலையாமல் வீழ்ந்து வருந்தாமல்
வாழ்ந்தேன் நிலைத்த சிவானந்த வாழ்வைப் பெற்றேன்.
பொழிப்புரை
சைவ சித்தாந்த ஞானத்தை நல்கித் தன்னை ஆட்கொண்ட அருட் குரவராகிய மெய்கண்ட தேவரின் திருவடித் தாமரைகளைத் தொழுதிறைஞ்சித் தனது நன்றியறி தலைப் பின்வருமாறு புலப்படுத்துகிறார் மாணவர். கண்ணுதலையும் கறைமிடற்றையும் மறைத்தருளி மண்ணிடையே வந்து திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளியிருக்கும் மெய்கண்ட நாதரே! சுவேதவனப் பெருமாள் என்னும் பிள்ளைத் திருப்பெயரை உடையவரே! அருட்கடலே! அடியேன் முற் பிறவிகளிற் செய்த உண்மைத் தவத்தின் பயனால் உமக்கு ஆட்பட்டேன்; வற்றாத பிறவிக் கடலில் வீழ்ந்து தடுமாறாமல் உண்மை வாழ்வைத் தலைப்பட்டேன். (இதற்கு எளியேன் செய்யும் கைம்மாறும் உண்டோ? அடியேன் நின் அடைக்கலம். வாழிய நின் மலரடிகள்!)
திருச்சிற்றம்பலம்