புதுச்சேரி: ஆக்ராவில் இருந்து வரவழைக்கப்பட்டு, புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அகல் விளக்குகள், மக்களை கவர்ந்துள்ளன.கார்த்திகை தீபத் திருவிழா, வரும் 17ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. தீபத் திருவிழாவை முன்னிட்டு, வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுவது வழக்கம்.இதற்காக, ஆக்ராவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள அகல் விளக்குகள், காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில், நடைபாதைகளில் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.ஆக்ராவில் இருந்து 2,000 கி.மீட்டர் பயணம் செய்து, புதுச்சேரிக்கு வந்துள்ள அழகான வேலைப்பாடுகளை கொண்ட அகல் விளக்குகள், சிறியது- 2 ரூபாய்க்கும், பெரியது-15 ரூபாய்க்கு இரண்டும் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, "புதுச்சேரியில் அகல் விளக்குகள் களிமண்ணால் செய்யப்படுகிறது. ஆக்ராவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள விளக்குகள், வேறு வகையான மண்ணால் செய்யப்பட்டது. இந்த விளக்குகள் எண்ணெய் உறிஞ்சாது என்றனர். ஆக்ரா விளக்குகளை, மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.