திருச்செந்தூர்: உலக அளவில் புகழ்பெற்றதும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடுமான திருச்செந்தூர் கோயில் வளாகம் மற்றும் டவுன் பகுதியில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உலகத்தரத்திற்கு உயர்த்தவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மீனாட்சி அம்மன், மற்றும் திருப்பதியில் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் செங்கல்கள் பதித்து அழகு படுத்தியிருப்பதுபோல் திருச்செந்தூரையும் அழகு படுத்தவேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பு. தமிழ் கடவுளாம் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் உலக அளவில் புகழ்பெற்றது. பல்வேறு நாடுகளில் குடியிருந்து வரும் முருகனின் மேல் பற்றுக்கொண்ட தமிழர்கள் கந்த சஷ்டி திருவிழாவின் திருச்செந்தூர் வந்து செல்கின்றனர். இதைப்போல் ஆறுபடை வீடுகளில் அதிகளவு வருமானத்தை பெற்றுதரும் படைவீடுகளில் திருச் செந்தூர் முதலாவது இடத்தில் இருக்கிறது. இங்கு ஒவ்வொரு மாத மும் ஏதாவது ஒரு திரு விழா நடந்துகொண்டே இருப்பதால் திருச்செந்தூ ரில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டே இருக் கும்.
சூரபத்மன் என்ற ஆணவம் அழிந்த இடம்மட்டுமல்ல..சிறந்தொரு குருபரிகார ஸ்தலமாகவும் திருச் செந்தூர் இருப்பதால் பக்தர்கள் கூட்டத்திற்கு குறைவில்லை. ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பக்தர்களின் கூட்டத்திற்கேற்ப திருச்செந்தூரில் அடிப்படை வசதிகள் போதுமான அளவு இல்லை என்பது இங்குவரும் பக்தர்களின் மனக்குறை.
திரும்பிய பக்கமெல்லாம் குண்டும் குழியும்: தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய கோயிலாக இருந்தாலும் கோயிலுக்கு செல்லும் முன்பு பக்தர்கள் ரோட்டில் சாக்கடைகளை மிதித்து கால்கள் எல்லாம் கழிவுநீரால் அபிஷேகம் செய்துவிட்டு அதன்பின்னரே கோயில் வாசலை அடைகின்றனர். தற்போது பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்றுவருவதால் ரோடுகள் குண்டும் குழியுமாக இருக்கிறது என்று டவுன்பஞ் விளக்கம் கொடுத்தாலும், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதற்கு முன்பே அப்படித்தான் இருந்தது. நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் ஒரு புகழ்பெற்ற இடத்தில் ஆமைவேகத்தில் நடந்துவரும் பாதாளசாக்கடை பணிகள் முடிய இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுபோன்ற ஆமைவேக பணிகளால் திருச்செந்தூர் மேல் பக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்கும் என்பதில் மாற்றுகருத்துகள் இல்லை.
தரமான ரோடுகள் அமையுமா..!: திருச்செந்தூர் பகத்சிங் பஸ் ஸ்டாண்டில் இருந்து கோயிலுக்கு செல்லும் தூரம் ரொம்ப குறைவுதான். நடந்துகூட சென்றுவிடலாம். ஆனால் இந்த ரோடுகள் போடுவதில் பல ஊழல்கள் செய்து தரமில்லாத ரோடுகள் போட்டு....போட்ட ஒரு மாதத்திலே குண்டும் குழியுமாகி செந்தூர் வரும் பக்தர்களை மட்டுமல்ல..அங்குவாழும் மக்களையும் பாடாய்படுத்திவந்தது. தரமில்லாதரோடுகளால் அதிகம் பாதிக்கப்பட்டது வாகன ஓட்டிகள் மட்டுமல்ல..பள்ளி மாணவ,மாணவிகளும், வயதான பெரியவர்களும்தான். இனிமேலாவது அமையுமா..! ஆனால் இப்படி தரமில்லாத ரோடுகளை மாறிமாறி போட்டு பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாகிவந்த நிர்வாகத்திற்கு மேலும் அதிருப்திவராமல் இருக்க அந்த செந்தூர் முருகனே ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார். ஆம் தற்போது.. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்றுவருதால் பணிகள் முடிந்தவுடன் உடனடியாக அனைத்து ரோடுகளிலும் தார்மூலம் புதிய ரோடு அமைக்காமல் மதுரை, திருப்பதியில் அமைக்கப்பட்டுள்ளது போல் தெருக்கள், ரோடுகள் அனைத்தும் செங்கல்கள் மூலம் அமைக்கவேண்டும். தரமான ரோடுகள் போடுவதில் எந்த ஒரு சமரசத்திற்கும் இடம் கொடுக்க கூடாது. ஒரு முறை போட்ட ரோடுகளை 10 வருடத்தற்கு ஒரு முறைதான் மாற்றவேண்டும்
கடலில் கலக்கும் கழிவுநீர்: திருச்செந்தூரை பொறுத்தவரை கடல் தண்ணீர் ஒரு தீர்த்தம். முன்னோர்கள் செய்த பாவத்தில் இருந்து விடுபட பலவிதமான சடங்குகளை செய்து கடலில் தேங்காய் உள்ளிட்ட பல பொருட்களை தானமாக போட்டால் பாவம் தீரும் என்பது ஐதீகம். இதனால் திருச்செந்தூர் வரும் பக்தர்கள் கடலில் குளித்துவிட்டு நாழிகிணற்றில் குளித்து தங்களின் பாவங்களை தொலைத்துவருகின்றனர். ஆனால் கடலில் குளிக்கும் பக்தர்கள் பாவங்களை தொலைத்து விட்டு படை, சொறிசிரங்கு போன்ற தீராத தோல்வியாதிகளை பெற்றுச்செல்லுகின்றனர்.
உண்மைதான் ஏற்கனவே வங்க கடல் பல்வேறு தொழிற்சாலை கழிவுகளில் மாசுபட்டிருக்கும் நிலையில்..திருச்செந்தூரில் வீடுகளை விட அதிக எண்ணிக்கையில் இருக்கும் லாட்ஜ்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் கடலில் கலப்பது..முருகனை நம்பிவரும் பக்தர்களை சோதிக்கும் செயலாகும். உள்ளூர் மக்களுக்கு இந்த உண்மை தெரியும்...பாவம் போகாவிட்டாலும் பராவாயில்லை..தீராத தோல் வியாதியுடன் அவஸ்தைபடமுடியாது என்று கடலில் குளிக்க மாட்டார்கள். ஆனால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு இது தெரியாதே..தெரிந்தால்..திருச்செந்தூர் மேல் இருக்கும் நம்பகத்தன்மை குறைந்துவிடுமே.. நம்பகதன்மை குறைந்தாலே வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.அப்படி இருக்கையில் அவர்களை நம்பி தொழில் செய்யும் தங்கும் விடுதிகளின் வருமானமும் பாதிக்கும். அதை உணர்ந்தாவது கழிவு நீர் கடலில் கலக்காமல் இருக்க மாற்றுதிட்டத்தை செயல்படுத்தவேண்டும். தரமில்லாத தங்கும் விடுதிகள்: கோயில் வளாகத்தில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் ஏராளமான தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் இரண்டு அல்லது மூன்று மாடிகளை கொண்ட விடுதிகள். ஆனால் முதல் மாடியை தவிர மற்ற இரண்டு மாடிகளில் உள்ள ரூம்களுக்கு தண்ணீர் வராது. அப்படியே தண்ணீர் வந்தாலும் புழுவாகத்தான் வரும். இதுகுறித்து விளக்கம்கேட்டால் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் மேல்மாடிக்கெல்லாம் தண்ணீர் வராது என்கிறார்கள். ஆனால் கோயில் சார்பில் தண்ணீர் பிரச்னை தீர்க்க கோயில் வளாகத்தில் போடப்பட்ட போர்வெல் கிணறுகள் போட்ட மாதிரியே இருப்பதாகவும், அதிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்க எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பெயரளவில் செயல்படும் கோயில் வாசல் பஸ்ஸ்டாண்ட்: மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படும் அனைத்து பஸ்களும் கோயில்வாசல் பஸ்ஸ்டாண்ட் வரை இயக்கப்படுகிறது. ஆனால் பஸ்ஸ்டாண்டில் பயணிகள் இருக்கவும்,நிற்கவும் நிழற்குடைகள் போதுமான அளவு இல்லை. இங்கு குடிதண்ணீர் வசதியும் இல்லை.
ஒரே ஒரு ஆறுதல்: கோயில் தெற்கு பிரகாரம் கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க கற்கள் போடப்பட்டு..நீண்டதொரு தளம் அமைக்கப்பட்டு கடல் அழகை பார்த்து ரசிக்க பெஞ்சுகளும், கைப்பிடி கம்பிகளும் போட்டுள்ளனர். இதுஒன்று பாராட்டப்படவேண்டிய விஷயம் என்றாலும், அங்கும் ஒரு சிலர் அசுத்தம் செய்துவிடுகின்றனர். இதனால் அப்படி ஒரு இடம் அமைக்கபட்டதற்கான நோக்கம் நிறைவேறாமல் போய்விடுகிறது.மனது வைத்தால் மார்க்கம் உண்டு:மாதம் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் வருமானத்தை பெற்றுதரும் திருச்செந்தூர் முருகனின் கோயிலில் பக்தர்கள் எதிர்பார்க்கும் வசதிகள் ஏராளம். உலகதரத்திற்கு கோயிலை மாற்றி அமைக்காவிட்டாலும், ஓரளவு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் போல் மாற்றிஅமைத்தால் பக்தர்களுக்கு மட்டுமல்ல..ஆணவத்தை அழித்துவிட்டு அமைதியாய் வீற்றிருக்கும் அந்த முருகனுக்கும் கூட மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். மொத்தத்தில் மனது வைத்தால் மார்க்கம் உண்டு..அந்த மார்க்கத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும்.. நிர்வாகத்திற்கும், ஏற்படுத்திதரவேண்டியது..சாட்சாத் அந்த முருகப்பெருமான்தான்.