பதிவு செய்த நாள்
11
நவ
2013
10:11
திருவண்ணாமலை: தீப திருவிழாவில், 1,008 சங்கு அபிஷேக சிறப்பு பூஜை செய்து, புனித நீரால் அண்ணாமலையாருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.தீப திருவிழாவையொட்டி, மூன்றாம் நாள் திருவிழாவில் அண்ணாமலையார் கோவிலில், அண்ணாமலையார் கருவறை எதிரில், 1,008 சங்கு வைத்து, புனித நீர் ஊற்றி பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, புனித நீரை கொண்டு அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தீபத்திருவிழாவின் போது, கோவில் நிர்வாகத்தின் சார்பில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த சங்காபிஷேகம் நடத்தப்படும். மற்ற நாட்களில், நேர்த்திக்கடன் செலுத்துவோர் செலவில் மட்டுமே சங்காபிஷேகம் நடத்தப்படும். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளி உண்டியல் வைப்பு: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பாரம்பரிய மரபு மாறாமல் இருக்க, வெள்ளி உண்டியல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.திருவண்ணாலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழாவின் மூன்றாம் திருவிழா நாளில் ஸ்வாமி சன்னதி முன்பு உள்ள கோயில் கொடிமரம் முன்பு வெள்ளி உண்டியல் வைக்கப்படுவது வழக்கம். இதனை முன்னிட்டு இந்த ஆண்டு வெள்ளி உண்டியல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணாமலையார் கோவிலின் வருமானம் குறைந்திருந்த கால கட்டங்களில் வெள்ளி உண்டியல் காணிக்கை வசூலாகும் தொகையை வைத்து தீப திருவிழாவிற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் நகரில் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்து வெள்ளி உண்டியல் வசூல் நடத்தப்படுவது வழக்கம். அழைப்பு விடுத்த முக்கிய பிரமுகர்கள் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்துவர் தற்போது கோவில் வருமானம் பெருகி இருந்தாலும் பாரம்பரியம் மாறாமல் இருக்க இன்றும் கோவிலில் வெள்ளி உண்டியல் வைக்கப்பட்டு பழைய முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நகராட்சி தலைவர் தலைவர் பாலசந்தர், முன்னாள் நகராட்சி தலைவர் பவன்குமார், திருமகன் உட்பட பலர் கலந்து கொண்டு காணிக்கை செலுத்தினர்.