பதிவு செய்த நாள்
12
நவ
2013
10:11
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்காவிலுள்ள இடையர் எம்பேத்தி பஞ்., பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். இவர், தனக்குச் சொந்தமான வயலில் நடவு செய்வதற்காக டிராக்டரில் நேற்றுக்காலை வயலை உழுது கொண்டிருந்தார். அப்போது, இரும்பு கலப்பையில் உலோகப்பொருள் ஒன்று தட்டுப்பட்டதில், ஏதோ சத்தம் கேட்டது. இந்த சத்தம் கேட்டதும், உழவு பணியை பாதியில் நிறுத்திவிட்டு விவசாயி ராஜேந்திரன், டிராக்டரை விட்டு கீழே இறங்கி மண்ணில் குழிதோண்டி பரிசோதித்தார். அப்போது, பூமிக்கு அடியில் ஒரு அடி உயரமுள்ள வித்தியாசமான சிலை ஒன்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, இடையர் எம்பேத்தி பஞ்., தலைவர் தனலெட்சுமிக்கு, விவசாயி ராஜேந்திரன் உடனடியாக தகவல் கொடுத்தார். தொடர்ந்து, வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்.ஐ., வெங்கடேசன், வி.ஏ.ஓ., நாகராஜ் ஆகியோர் மூலம் தாசில்தார் ரங்கசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தாசில்தார் ரங்கசாமி மற்றம் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, சிலையை மீட்டு கொண்டு சென்று, மன்னார்குடி தாலுக்கா அலுவலகத்தில் பத்திரமாக வைத்துள்ளனர். மன்னார்குடி வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: மன்னார்குடி தாலுக்காவில், விவசாயி ராஜேந்திரன் என்பவர் வயலில் உழும்போது, பூமிக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சிலை, ஐம்பொன் சிலையாக இருக்கலாம். ஒரு அடி உயரத்தில் உள்ளது. சிலையின் கைகள் மற்றும் ஒரு கால் ஒடிந்த நிலையில் காணப்படுகிறது. இந்த சிலை எந்த காலகட்டத்தை சேர்ந்தது? என்ன வகை உலோகத்தில் செய்யப்பட்டது? ஆண் போன்று தெரியும் சிலை உருவம் எதை குறிக்கிறது? என்பது குறித்து, தொல்லியல்துறையினர் முறைப்படி ஆய்வு மேற்கொண்டால் மட்டுமே முழுமையான விபரம் தெரியவரும். தற்போதைக்கு, மீட்கப்பட்ட சிலை, தாலுக்கா அலுவலகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.