போர்ப்பந்தரில் காந்திஜி பள்ளியில் படித்த நாட்களில் பாடம் தவிர, கதை ஏதும் படிப்பதில் ஆர்வம் காட்டியதில்லை. ஒருநாள் தந்தையார் கரம்சந்த்காந்தி வாங்கிய சிரவணனின் பிதுர்பக்தி நாடகம் என்ற புத்தகம் கண்ணில் பட்டது. சும்மா புரட்டுவோமே என்று தான் எடுத்தார். ஆனால், வாசிக்க வாசிக்க பரவசம்... புத்தகத்தை கீழே வைக்கவில்லை. சிரவணன் என்ற சிறுவன் பார்வையில்லாத பெற்றோர் மீது காட்டிய அன்பை சொல்லும் கதை அது. ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், படம் (பயாஸ்கோப்) காட்டும் ஒரு குழுவினர் போர்ப்பந்தர் வந்தனர். அந்தக் குழுவினரிடம், பார்வையில்லாத பெற்றோரை, காவடியில் வைத்து தோளில் சுமக்கும் சிரவணனின் படம் இருந்தது. அந்தப் படத்தை காந்திஜி பார்த்தார். அது அழியாத முத்திரையாக, அவரது மனதில் பதிந்து விட்டது. நீ பின்பற்றுவதற்கு இவனே சரியான உதாரணம் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார். இதையடுத்து ஒரு நாடக குழுவினர் வந்தனர். அவர்கள் நடித்த ராஜா அரிச்சந்திரா நாடகத்தைப் பார்க்க தந்தையின் அனுமதியுடன் சென்றார். (இந்தக் காலத்தில் பிள்ளைகள் பெற்றோருக்கும் தெரியாமல், வகுப்பையும் புறக்கணித்து விட்டு சினிமாவுக்கு செல்வது வருத்தம் தானே! இவர்களுக்கெல்லாம் காந்திஜியின் சரிதையை பாடமாக வைத்தால் என்ன!) எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தோன்றாத விதத்தில் நாடகம் இருந்தது. மனதிற்குள் தன்னையே அரிச்சந்திரனாக கற்பனை செய்து கொண்டார். அரிச்சந்திரன் போல எல்லோரும் ஏன் சத்தியசீலர்களாக ஆகக் கூடாது? என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். அவனது சத்திய வாழ்வு அவருக்குள் எழுச்சியை ஏற்படுத்தியது. உண்மை பேசுவதை தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டார்.