பதிவு செய்த நாள்
22
மார்
2011
02:03
பெருமாளின் அவதாரங்களில் இது 2வது அவதாரமாகும்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாகச் சொல்வர். பாற்கடலைக் கடைய மந்திர மலை மத்தாக வேண்டி இருந்தது. அது சமயம் மந்திரமலையைப் பெருமாள் தாங்க வேண்டியதாயிற்று. அடிக்கடி அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. தங்கள் தீவிர பக்தியின் காரணமாக அசுரர்களில் செத்தவர்கள் எழுந்தனர். மேலும் அசுரகுரு சுக்ராச்சாரியார் அமுதபானம் கொடுத்து இறந்த தம் சீடர்களை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தார். தேவர்களுக்கு அந்த சலுகை கிடைக்கவில்லை. இதனால் நிறைய தேவகணம் நஷ்டமாயிற்று. ஆகவே தேவர்களுக்கும் அமிர்தம் கிடைக்க வேண்டுமென ஸ்ரீஹரி விரும்பினார். போரில் தோல்வி பெற்றதோடன்றி இந்திரன் துர்வாச முனிவர் சாபத்திற்கும் ஆளாகி இருந்தான். ஒரு நாள் துர்வாச முனிவர் வைகுண்டத்திலிருந்து திரும்பி தேவலோகத்திற்கு வந்துகொண்டு இருந்தார். தேவலோகத்தில் அப்போது இந்திரனாக இருந்தவன் மந்தரத்துருமன் என்பவன். ஆப்பியாள் எனப்படுபவர்கள் தேவர்களாக இருந்தார்கள். அவிஷமானு, அரசுனி என்பவர் ரிஷிகள். வைராஜன் என்பவருடைய பத்தினி சம்பூதினியிடம் பகவான் அவதரித்தார். அப்போது அவருக்குப் பெயர் சுசிதர் என வழங்கலாயிற்று. அவர்தான் பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமிர்தம் அளித்தார். துர்வாசர் தேவலோகம் நோக்கி வரும்போது, அவர் கழுத்தில் பரமன் அளித்த மலர்மாலையை அணிந்திருந்தார். தேவேந்திரன் ஐராவதத்தின் மீது ஏறி எதிரே வருவதைத் துர்வாசர் பார்த்தார். முனிவர் தன் கழுத்தில் கிடந்த மாலையை இந்திரனுக்கு கொடுத்தார். செருக்கேறிக் கிடந்த இந்திரன் அந்த மாலையைத் தன் யானையாகிய ஐராவதத்தின் தலைமீது விட்டு எறிந்தான். யானையோ அதைத் துதிக்கையால் எடுத்து பூமியில் போட்டுக் காலால் மிதித்தது. துர்வாசருக்கு கோபம் வந்தது.
இந்த இந்திரனால் மூன்று உலகங்களும் அவனும் பாழாகப் போகட்டும் என்று சபித்தார். அது முதல் மூன்று உலகங்களும் களையிழந்து இருண்டு கிடந்தன. இந்திரனும் தேவாதியரும் பிரம்மனை அணுகி பிரார்த்தித்து அந்த இடரிலிருந்து காப்பாற்றும்படி வேண்டினர். இந்த கஷ்டத்தை ஸ்ரீமந்நாராயணன் ஒருவராலே தான் தீர்க்கமுடியும் என அனைவரும் வைகுண்டம் சென்று மஹாவிஷ்ணுவை வணங்கினர். உடனே விஷ்ணு தேவர்களே! உங்கள் நன்மைக்காக நான் கூறுகிறேன். நீங்கள் உங்களுக்கு நல்ல காலம் வரும் வரை காத்திருங்கள். இப்போது அசுரர்களுடன் சமாதானம் செய்து கொள்ளுங்கள். நாம் நாடும் பொருளை அடையும் பொருட்டு எதிரியையும் அணுக வேண்டியதாகிறது. இப்போது சாவை நீக்கும் அதர்மத்தை தேட வேண்டும். பாற்கடலில் பற்பல மூலிகைகளையும், பச்சிலைகளையும் கொண்டு போடுங்கள். மந்திரமலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் வைத்து பாற்கடலைக் கடையுங்கள். நீங்கள் மட்டுமின்றி அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைய வேண்டும். நானும் உங்களுக்கு உதவுகிறேன். இதிலிருந்து வரும் அமிர்தத்தை உங்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி வழி செய்கிறேன். அதர்மமே குறிக்கோளாக இருக்கும் அசுரர்கள் அமிர்தபானம் உண்டால் இறப்பு ஒழிந்து உலகத்திற்கு மேன்மேலும் கஷ்டத்தைத் தந்து விடுவார்கள். அமிர்தம் பருகினால் அதிக பலம் பெற்று நீங்கள் மரணமில்லா நல்வாழ்வு பெறுவதுடன் தேவலோகமும் சுபிட்சமடைய நேரிடும், என்றார். இந்த யோசனைப்படி நான்முகனாகிய பிரம்மா தேவேந்திரனிடம், இந்திரனே நீ உடனே அசுரர்களை நெருங்கி அமிர்தம் கடையும் காரியத்தில் அவர்கள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டு அவர்களிடம் இணக்கம் பெற்று வா என்று சொல்லிவிட்டு அவர் அவருடைய சத்யலோகத்திற்குப் போனார். தேவேந்திரன் சில தேவர்களை அழைத்துக் கொண்டு மகேந்திரபுரி நோக்கி நடந்து போனான். எந்தவித ஆடம்பரமுமின்றி அரசருக்குரிய முறையில் டாம்பீகமான ஆடை அணிகலங்களின்றி மிகவும் எளிய தோற்றத்தில் வந்து நின்ற இந்திரனைப் பார்த்து அரக்கர் குலத்தினர் ஏளனம் செய்தனர். எனினும் அவன் வந்த காரியம் தம் குலத்திற்கு மிகவும் உயர்வழி காட்டும், சாவைப் போக்கும் அமிர்தம் கடையும் விஷயம் என்பது தெரிந்து அவனிடம் மகிழ்ச்சியுடன் நடந்து கொண்டனர். விரோசன குமாரனும், அசுர அரசனுமாகிய பலியும் இந்திரன் வந்த காரியத்திற்கு உதவ சம்மதித்தான்.
நாராயணன் இட்ட கட்டளைப்படி தேவர்களும், அசுரர்களும் மந்திரமலையைத் தூக்கிக் கொண்டு பாற்கடலை நோக்கி வந்தார்கள். வரும் வழியில் மலையின் பாரம் தாங்க முடியாமல் களைப்புற்ற இந்திரன், பலி முதலியோர் மந்திரமலையை பூமியில் வைத்து விட்டார்கள். கீழே விழுந்த மலை பலரைத் தாக்கிக் கொன்று விட்டது. இதை அறிந்த ஸ்ரீஹரி கருடன் மீது ஏறி அங்கு வந்தார். வந்து தன் கருணைக் கடாட்சத்தால் காயம் அடைந்தவர்களைக் குணப்படுத்தினார். மலையைக் கருடன் மீது விளையாட்டாக தூக்கி வைத்துக் கொண்டு பாற்கடல் நடுவே பறந்து சென்று மந்திர மலையைக் கீழே இறக்கினார். வாசுகி என்ற பாம்பிற்கு அமிர்தத்தில் பங்கு தருவதாக ஆசை காட்டினார்கள். தேவர், அசுரர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாம்பு மந்திரகிரியைக் கடையும் கயிறாக மந்திர மலையை சுற்றி வளைத்துக் கொண்டது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் கடையத் தொடங்கும் போது நாராயணன் பாம்பின் தலைப்பகுதியை பிடித்துக் கொண்டார். தேவர்களும் அவருடன் சேர்ந்து தலைப்புறமாக நின்றார்கள். இதைக் கண்ட அசுரத் தலைவர்கள் வாலைப் பிடிப்பது என்பது நம் நிலைக்கு இழுக்கு. அதனால் தாங்கள் தான் தலைப்பக்கம் நிற்போம் என்றனர். உடனே ஸ்ரீஹரியும் தேவர்களும் பாம்பின் வால்பக்கமும், அசுரர்கள் தலைப்பக்கமும் நின்று பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள். மலையோ அதனுடைய பெரும் பாரத்தால் கடலுக்குள் மூழ்கியது. உடனே பகவான் ஆமையாக அவதாரம் எடுத்தார். மந்திரமலையைத் தன் முதுகால் தாங்கிக் கொண்டார். மறுபடியும் இருசாரர்களும் தங்களது பணியை செய்யத் தொடங்கினார்கள். இந்நிலையில் வாசுகி என்ற பாம்பின் முகம் மற்றும் கண்களிலிருந்து உஷ்ண ஜ்வாலைகள் வெளிவந்தன. ஆலகாலம் என்ற விஷத்தை கக்கியது. அந்த விஷத்தின் தன்மை எல்லாப் பக்கமும் பரவ ஆரம்பித்தது. அசுரர்கள் பாம்பை விட்டுவிட்டு தலைதெறிக்க நாலாபுறமும் ஓடிவிட்டார்கள். தேவர்கள் மீது மட்டும் மழை பொழிந்து கடல்காற்று வீசியது. எனினும் அமிர்தத்திற்கு பதில் கொடிய விஷமே பரவியது. இதனால் தேவர்களும், அசுரர்களும் மிகவும் சிரமப்பட்டனர். தேவர்களுடன் தேவேந்திரன் கைலாயத்திற்கு சென்று சிவபெருமானை பிரார்த்தித்தான். அம்பலத்தரசே! நாங்கள் பாற்கடல் கடைந்த சமயம் வாசுகியின் தாங்க முடியாத ஆலகால விஷம் நாலாப்புறமும் பொங்கித் ததும்பக் காண்கிறோமே ஒழிய அமிர்தம் வந்தபாடில்லை. ஆலகாலத்தின் விஷத்தைப் பொறுத்துக் கொண்டு எங்களால் அமிர்தம் கடைய முடியாது. எனவே தாங்கள் தான் எங்களைக் காத்தருளவேண்டும் என வேண்டினர். சிவபெருமான் தம் பிராட்டி உமாதேவியை அழைத்தார்.
அம்பிகையே! பாற்கடலைக் கடைய ஆலகால விஷம் தடையாக உள்ளது. தேவேந்திரனும் நம்மிடம் சரணடைந்து விட்டான். ஆகவே நான் இப்பொழுதே சென்று அதை உட்கொள்ளப் போகிறேன். அதனால் அனைவரும் நன்மை பெறட்டும் என்றார். அம்பிகையும் அதற்கு ஆமோதித்தாள். அக்கணமே பாற்கடலை அடைந்து விஷத்தைப் பருகினார் சிவபெருமான். உடனே உமாதேவி, ஆலகாலமே! பெருமானுடைய கண்டத்தளவிலேயே நில் என்று கூறியபடி பெருமானுடைய கழுத்தை அழுத்திப் பிடிக்க விஷம் அவர் கழுத்திலேயே நின்றது. பின்னர் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை நீலகண்டன் எனப் போற்றி துதித்தனர்.தேவர்களும், அசுரர்களும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்து காமதேனு, வெள்ளைக் குதிரை, சிவப்பு மணி, ஐராவதம், பாரிஜாத மரம் போன்ற எண்ணற்ற பொருள்கள் வெளிவந்து தேவலோகத்தை அடைந்தன. மேலும் அதிலிருந்து வெளிவந்த திருமகளாகிய லட்சுமி தேவி, ஸ்ரீஹரியை அடைந்தாள். அதற்கு அடுத்தாற்போல் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீஹரியின் அம்சமான தன்வந்திரி பகவான் அமிர்தம் ததும்பும் தங்க கலசத்துடன் வெளிவந்தார். இதைக் கண்ட அசுரர்கள் அந்த அமிர்த கலசத்தைப் பறித்துக் கொண்டு மின்னலென ஓடி மறைந்தனர். தேவர்கள் அனைவரும் தாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் வீணாகி விட்டதே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் சற்றே தூரத்தில் அசுரர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்டனர். அச்சமயம் ஸ்ரீஹரி ஆடவரின் சிந்தையை இழக்கச் செய்யும் சீரிய அழகுடைய பெண் வடிவில் ஜெகன் மோகினியாக அவர்கள் முன் தோன்றினார். அதுவரை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த அசுரர்கள் வாயடைத்து நின்றனர். இவ்வளவு அழகுடைய பெண்ணை தாங்கள் கண்டதே இல்லை, பிரம்மன் தங்களுக்காகவே இவளை படைத்திருக்கிறான் என்று வியந்தனர். அழகியே! அனைவருக்கும் சொந்தமான ஒரு பொருளுக்கு நாங்கள் சுயநலத்தால் சண்டைப் போட்டுக் கொள்கிறோம். கஸ்யபர் மைந்தர்களான எங்களுக்கு பாரபட்சமின்றி சமஅளவில் பங்கிட்டுத் தா என்றனர். கஸ்யபர் புத்திரர்களே! நீங்களோ பக்திமான்கள். ஓயாத ஆசையுடன் திரியும் ஓநாய் கூடப் பெண் அன்பிற்கு ஆளாகாது என்கிற உலகத்தில் புதிதாக வந்த என்னை எவ்வாறு நம்பினீர்கள், என வினவினாள். இவ்வாறு அவள் வினவியது மேலும் அவள் மேல் நம்பிக்கையை உண்டாக்கியது.
அமுதகலசத்தை மோகினியிடம் அசுரர்கள் ஒப்படைத்தனர். நான் தான் பங்கிடுவேன். நான் எது செய்தாலும் எப்படி செய்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்ன சொல்கிறீர்கள்? என்று மோகினி கேட்க, அத்தனை அசுரர்களும் ஒப்புக் கொண்டனர். அன்று உண்ணா நோன்பு நோற்று புனித நீராடினர். ஹோமங்கள் நடத்தி தானங்கள் செய்தனர். ஸ்ரீஹரியாகிய மோகினி தேவர்களை ஒரு பந்தியாகவும், அசுரர்களை ஒரு பந்தியாகவும் அமர்த்தினாள். அனைவரும் தர்ப்பாசனத்தில் அமர்ந்திருந்தனர். அசுரர்கள் கிழக்கு முகமாகவும், தேவர்கள் மேற்கு முகமாகவும் அமர்ந்து அமுதத்தை அருந்த தயாரானார்கள். அசுரர்கள் அனைவரும் மோகினியின் அழகில் மயங்கி இருந்தனர். அசுரர்களுக்கு அமிர்தம் தருவது, பாம்பிற்கு பால் வார்ப்பது போல் என்றெண்ணிய மோகினி தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கிடைக்கும்படி செய்து கொண்டிருந்தாள். அசுரர்கள் அனைவரும் மயக்கத்தில் இருந்ததால் அவர்களுக்கு இந்த சூழ்ச்சி தெரியவில்லை. ஆனால் அசுரர்களில் ராகு என்பவன் மட்டும் இந்த சூழ்ச்சியை தெரிந்து கொண்டான். தேவர்கள் போல் உருமாறி சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் அமர்ந்து கொண்டு அமிர்தத்தை அருந்தி விட்டான். இந்த விஷயத்தை அறிந்த மகாவிஷ்ணு தனது சுதர்சனத்தால் ராகுவின் தலையை வெட்டி எறிந்தார். அமுது உண்டதால் தலையும் அழியவில்லை, உடலும் அழியவில்லை. இதைப் பார்த்த பிரம்மன் துண்டிக்கப்பட்ட தலையோடு ஒரு சர்ப்ப உடலை பொருத்தினார். துண்டிக்கப்பட்ட உடலோடு ஒரு பாம்பின் தலையைப் பொருத்தி இணைத்தார். அவை இரண்டும் ராகு, கேது என்ற பெயருடன் கிரக பதவி பெற்றனர். பின்பு தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடுமையான போர் நடந்தது. அமுத பானம் உண்ட தேவர்களை அசுரர்களால் அழிக்கமுடியவில்லை. தேவர்கள் அசுரர்களை பாதாள லோகத்திற்குத் துரத்தினார்கள்.
இந்த கூர்மஅவதார மூர்த்தியைப் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், அவர் சரித்திரத்தைப் பயபக்தியோடு சிந்தித்து அவரைத் தியானம் செய்பவர்களுக்கும் சகல சம்பத்தும், தீர்க்க ஆயுளும் உண்டாகும்.