ஆந்திர மாநிலம் ஹைதராபாத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் யாதவகிரி குட்டா உள்ளது. இங்குதான் பஞ்சமுக நரசிம்மர் அருள்பாலிக்கிறார். பக்தன் பிரகலாதனுக்காக அவதரித்த நரசிம்மர், பூவுலகிலும் பல பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்திருக்கிறார். அந்த வகையில் யாதவர் என்ற முனிவருக்கு பெருமாள் காட்சிதந்த இடம், யாதவகிரி. முனிவரின் பெயராலேயே இந்த மலைக்கு யாதவகிரி என்று பெயர். கோயிலின் வாசலை வைகுந்த துவாரவாசல் என்று சொல்கிறார்கள் முந்நூறடி உயரமான மலைக் குகையில்தான் பஞ்சமுக நரசிம்மர் வீற்றிருக்கிறார். குகையில் நுழைந்தவுடன் இரண்டு பாறைகளுக்கு இடையில் ஜ்வாலா நரசிம்மர் காட்சி தருகிறார். ஒருசமயம், இவர் மேல் சாத்தப்பட்டுள்ள கவசத்தை நீக்க முயற்சித்தபோது ஆதிசேஷனின் வால் சுவாமியின் மீது தெரித்ததாம் அப்போதிருந்து கவசத்தை எடுப்பதில்லையாம்!
குகையின் மற்றொரு பக்கம் யோகங்களுக்கு புகலிடமாய் உலக உயிர்களுக்கு அருள்புரிபவராய் யோக நரசிம்மர் உள்ளார். அடுத்து, மகாலக்ஷ்மியை மடியில் தரித்தவராக லக்ஷ்மி நரசிம்மர் காட்சி அளிக்கிறார். இவரிடம் வேண்டிக் கொண்டால் நம் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குகையின் கீழே உக்ரமான தோற்றத்துடன் கம்பீரமாக உக்ர நரசிம்மர் அருள்புரிகிறார். இவரை வழிபட்டால், நோய்கள் தீருமாம் நாற்பத்தொரு நாட்கள் இங்கு தங்கியிருந்து பக்தியுடன் தியானித்தால் நரசிம்மர் அவர்கள் கனவில் தோன்றி அருள்புரியத் தவறுவதில்லையாம். நரசிம்ம மூர்த்தியின் முகத்தை தீர்க்கமாகப் பார்த்தால் அவரது உதடுகள் மந்திர உச்சாடனம் செய்வது போலத் தோன்றும் அவரது பிரசாதம் நோய் தீர்க்கும் மருந்து. ஒருமுறை யாதவகிரி குட்டா சென்று பஞ்சமுக நரசிம்மரை சேவித்தால் போதும்...நம் பாவங்களும், பிணிகளும் போய்விடும்.