சரண கோஷம் முழங்க ஐயப்பனை தரிசிக்க மாலை அணிவித்த பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2013 10:11
கார்த்திகை மாதம் நேற்று துவங்கியதால் சரணகோஷம் முழங்கிட அச்சன்கோவில் மற்றும் குற்றாலம் கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் சபரி மலை செல்வதற்காக மாலை அணிவித்துக் கொண்டனர். கார்த்திகை மாதத்தில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து சபரிமலைக்கு சென்றுவருவதுண்டு. நேற்று காலை கார்த்திகை மாதம் பிறந்ததையடுத்து குற்றால அருவிகளில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து குற்றாலநாதர் கோயிலில் குருசாமிகள் முன்னிலையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சரணகோஷம் முழங்கிட மாலை அணிவித்த வண்ணம் இருந்தனர். குற்றாலத்தில் மாலை அணிவிக்க கூடிய ஐயப்ப பக்தர்களின் கூட்டம் பெருமளவில் காணப்பட்டது.
அச்சன்கோவில்:அச்சன்புதூர் மேக்கரையை அடுத்த அச்சன்கோவிலில் நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சபரிமலை செல்வதற்காக மாலை அணிவித்த வண்ணம் இருந்தனர். இதனை முன்னிட்டு அச்சன்கோவில் ஐய்யப்பனுக்கு விசேஷ பூஜைகள், சிறப்பு ஹோமங்கள், தீபாராதனை நடந்தது.
ஆரியங்காவு : ஆரியங்காவு கோயிலிலும் நேற்று திரளான பக்தர்கள் மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். சாம்பவர்வடகரை ஐயப்பன் கோயிலிலும் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு நேற்று காலை 4.30 மணிக்கு துவார பாலகர்கள் நிலைநிறுத்தப்படும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அபிஷேக தீபாராதனையும் நடந்தது. நிகழ்சிக்கு தென்காசி குமார் தலைமை வகித்தார். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு ஐய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் நடந்தது. கும்பகோணம் சுவாமி மலை இளங்கோவன் நெய் அபிஷேம் நடத்தினார். தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீப திருவிழா வழிபாடும், தீபாராதனையும் நடந்தது.