பதிவு செய்த நாள்
19
நவ
2013
10:11
ஷீரடி: ஷீரடி சாய்பாபா கோவிலில், வி.ஐ.பி., ஆரத்தி டிக்கெட்டுகளின் விலை நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், நாசிக் அருகில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவில், உலக பிரசித்தி பெற்றது; இந்தியாவில் உள்ள, மூன்று பணக்கார கோவில்களில், ஷீரடி கோவிலும் ஒன்று.
60,000 பேர்: கடந்த, 1918ம் ஆண்டு, அக்டோபர், 15ம் தேதி, ஷீரடியில், சாய்பாபா சமாதி அடைந்தார். அவர் நினைவாக, அங்கு அவருக்கு, கோவில் கட்டப்பட்டு உள்ளது. தினமும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், இக்கோவிலுக்கு வருகின்றனர்; வார இறுதி நாட்களில், இரு மடங்கிலும், விசேஷ தினங்களில் ஐந்து மடங்கிலும், பக்தர்கள் வந்து செல்கின்றனர். பிரசாத விற்பனை மற்றும் நன்கொடையாக, தினசரி, 50 லட்சம் ரூபாய் வசூலாகிறது.
நேற்று முதல்: தினமும் அதிகாலை, 4:30 மணிக்கு, காகட் ஆரத்தி, மதியம், 12:00 மணிக்கு, ஒரு ஆரத்தி, மாலை, அந்தி சாயும் நேரத்தில், தூப ஆரத்தி, நள்ளிரவு, 1:30 மணிக்கு, சேஜ் ஆரத்தி என, நான்கு முறை, ஆரத்திகள் நடைபெறுகின்றன. தர்ம தரிசன வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், இந்த ஆரத்தி நிகழ்ச்சிகளில், இலவசமாக கலந்து கொள்ளலாம். அவசரமாகச் செல்ல விரும்புவோருக்கென, வி.ஐ.பி., தரிசனம் மற்றும் வி.ஐ.பி., ஆரத்தி என, இரண்டு பிரிவுகளில், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், ஆரத்திக்கான கட்டணம், நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
கூட்டத்தை குறைக்க இதுகுறித்து, ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை அதிகாரி, அஜய் மோரே கூறியிருப்பதாவது: கடந்த, 2010ம் ஆண்டு, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் வழங்கப்படும், வி.ஐ.பி., டிக்கெட்டுகளின் கட்டணம், உயர்த்தப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களான, சனி, ஞாயிறு கிழமைகளில், 100 ரூபாய், வி.ஐ.பி., தரிசன டிக்கெட்டின் விலை உயர்த்தப்படவில்லை. வாரத்தின் ஏழு நாட்களிலும், வி.ஐ.பி., ஆரத்திக்கான கட்டணம், நேற்று முதல், 300 ரூபாயில் இருந்து, 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோவிலின் பாதுகாப்பு கருதியும், பக்தர்களின் கூட்டத்தை குறைப்பதற்கும், புதிய வி.ஐ.பி., பாஸ்கள், சோதனை அடிப்படையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு அஜய் மோரே கூறியுள்ளார்.