கும்பகோணம்: உலக நலன் வேண்டி ஏராளமான பக்தர்கள் சுவாமிமலை முருகன் கோவிலுக்கு காவடிகளுடன் நேற்று பாதயாத்திரையாக சென்று அபிஷேக, ஆராதனை நடத்தினர். கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் கடந்த 100 ஆண்டுக்கு மேலாக உலக நன்மை வேண்டி கார்த்திகை மாத சோமவார தினத்தன்று சுவாமிமலை முருகன் கோவிலுக்கு பால்குடம், காவடி எடுத்துச் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி, கார்த்திகை சோமவார தினமான நேற்று திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம், பால்காவடி உள்ளிட்ட காவடிகளை சுமந்தவாறு பாதயாத்திரையாக சுவாமிமலை சுவாமிநாத கோவிலுக்கு சென்றனர். அங்கு சுவாமிநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து ஆயிரக்கணக்கானோர் வழிபட்டனர். இவர்கள் வழிநெடுகிலும் அரோகரோ கோஷம் எழுப்பியபடி சென்றனர்.