பதிவு செய்த நாள்
21
நவ
2013 
10:11
 
 தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில், ராஜராஜன் நுழைவு வாயில் கோபுரத்தில் விழுந்த விரிசலை, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, இந்திய தொல்லியல்துறை உயர்மட்டக்குழுவினர், நேற்று நேரில் ஆய்வு செய்த பின், அறிவித்தனர். தஞ்சையில், ராஜராஜன் கட்டிய பெரியகோவில், 1,000 ஆண்டுகளை கடந்தும் அழியாமல் நிலைத்து நிற்கிறது. இந்த கோவில், தொன்மையான நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, மத்திய தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ளது. ராஜராஜன் கோபுரத்தில், இரண்டு ஆண்டுக்கு முன், இடி விழுந்ததில், விரிசல் ஏற்பட்டது. இந்திய தொல்லியல்துறை உயர்மட்டக் குழுவினர், தென் மண்டல இயக்குனர் நரசிம்மன், டில்லி தொல்லியல்துறை பொறியாளர் சாம்வேல், உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, ராமமூர்த்தி, பூனாட்சா, கண்காணிப்பாளர் மகேஸ்வரி, முதுநிலை பராமரிப்பு உதவியாளர் சரவணன் உள்ளிட்டோர் பெரியகோவிலில், ராஜராஜன் கோபுரத்தை, நேற்று மாலை, 6:30 மணிக்கு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, சென்னை உபவட்ட கண்காணிப்பாளர் மகேஸ்வரி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தஞ்சை பெரியகோவிலில் ராஜராஜன் நுழைவாயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தூணிலும் விரிசல் உள்ளது. மேல்தளத்தில் இருந்து மழை நீர், கோபுரத்தின் விரிசல் வழியாக கொட்டி, கோபுரம் பாதிக்கப்படலாம். அதனால், முன்னெச்சரிக்கையாக, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கோபுரத்தின் விரிசல் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய விரிசலால் ஆபத்து ஏதுமில்லை. நவீன தொழில்நுட்ப முறையில் மேல்தளத்திலுள்ள காரைகளை எடுத்து விட்டு, மழை நீர் புகாதவாறு சீரமைக்கப்படும். தூண்களையும் அகற்றாமல், அதே இடத்தில் வைத்து, பராமரிப்பு செய்வதற்கான நவீன தொழில்நுட்ப வசதி பயன்படுத்தப்படும். இதற்காக அறிவியல் தொழில்நுட்ப வல்லுனர்களை அணுகியுள்ளோம். பெரியகோவில், உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்று என்பதால், பணிகள் கவனமாக மேற்கொள்ளப்படும். கோவிலைச் சுற்றியுள்ள மரங்களை அகற்ற, நகராட்சி நிர்வாகத்திடம் கோரப்பட்டுள்ளது. தொடர்ந்து, கண்காணிப்பு கோபுரம் அமைத்து, 36 இடங்களில் கேமரா பொருத்தப்படும். இத்திட்டம் முதன்முதலாக பெரியகோவிலில் அமல்படுத்தப்படும். பின், பிற கோவில்களில் நிறுவப்படும். ராஜராஜன் ஒளி-ஒலி காட்சியகம் அமைப்பதில் சிக்கல் உள்ளது. இதனால், சுற்றிலும் எழும் ஒலி, ஒளிகளால் புராதன சின்னம் பாதிக்கப்படும். எனவே, இதுகுறித்து பரிசீலித்து, அருகிலுள்ள அரண்மனையில் காட்சியகம் அமைக்க, ஆலோசனை கூறப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோவில் கருவறையிலுள்ள, சோழர் கால ஓவியங்கள், நன்முறையில் பராமரிக்கப்படுகின்றன. ராஜராஜன் சமாதி குறித்த சர்ச்சைக்குள், செல்ல விரும்பவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.