திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா நவம்பர் 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவம்பர் 14-ம் தேதி காலை முதல் நள்ளிரவு வரை விநாயகர், முருகர், உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளின் தேரோட்டமும் நடைபெற்றது. நவம்பர் 17-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது. இவ் விழாவில் சுமார் 10 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, வியாழக்கிழமை (நவம்பர் 21) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெற்றது. இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு உண்ணாமுலையம்மன், அருணாசலேஸ்வரருக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.