சாத்தான்குளம்: வெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீசுந்தராச்சி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராம பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர். இரவு 9 மணிக்கு மாக்காப்பு பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தீர்த்தம் கொண்டு வருதலும், 9 மணிக்கு கணபதி ஹோமமும், 10 மணிக்கு நேர்ச்சை கொண்டு வருதலும், 11 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், பிற்பகல் 12 மணிக்கு அலங்கார பூஜையும், மாலை 3 மணிக்கு பொங்கலிடுதலும் நடைபெற்றன. கொடைவிழாவில் சிறப்பு அம்சமாக மழை வேண்டி மது பொங்கலிடுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து சப்பரப் பவனியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.