பதிவு செய்த நாள்
23
நவ
2013
10:11
திருச்செங்கோடு: அண்ணமார் ஸ்வாமி கோவிலில் நடந்த முப்பூஜை விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். திருச்செங்கோடு அடுத்துள்ள பருத்திபள்ளியில், பிரசித்தி பெற்ற அண்ணமார் ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் முப்பூஜைத் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் செல்வர். கொங்கு எழுகரை நாடுகளில் ஒன்றான, பருத்திப்பள்ளியில் எழுந்தருளி உள்ள அண்ணமார் ஸ்வாமி கோவிலில், இந்த ஆண்டு முப்பூஜை விழா, கடந்த, 4ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர்கள், தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். அண்ணமார் ஸ்வாமிகளின் நினைவை போற்றும் வகையில், ஆண்டு தோறும் தேர் திருவிழா, பெரும் பொங்கல் விழா, முப்பூஜை என, 18 நாட்களுக்கு இத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். நவ 22, முப்பூஜை விழா. வேளாண் நிலங்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகளை வேட்டையாட அண்ணமார் ஸ்வாமிகள் படையுடன் வரும் நிகழ்வை நினைவு கூறும் வகையில், பன்றி குத்தும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேற்ற பன்றிகளை வளர்த்து கோவிலுக்கு கொண்டு வந்தனர். அவற்றை ஒன்பது பேர் கொண்ட படை வேல் கம்புகளுடன் வந்து வரிசையாக பன்றிகளை குத்தினர். மேலும், பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகள் பலியிட்டும், பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.