மேட்டுப்பாளையம் டூ காரமடை ரோட்டில், புதிதாக கருவறை விமானத்துடன் கூடிய சித்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா திருவிளக்கு வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து யாக கால வேள்வி பூஜையும், எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகளும் நடந்தன. புனித தீர்த்தக் கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, விமானம் மற்றும் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில், மூலத்துறை குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் கோபுர கலசத்துக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.