பதிவு செய்த நாள்
25
நவ
2013
11:11
நாமக்கல்: கிறிஸ்து அரசர் கோவிலில், தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, புனிதரின் ஆசீர் பெற்றனர். நாமக்கல் ஆர்.சி., சர்ச்சில், கிறிஸ்து அரசர் தேர்த்திருவிழா, ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 17ம் தேதி, நியூயார்க்கை சேர்ந்த பாதிரியார் சார்லஸ் ஹெல்டன் தலைமையில், கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் மாலை, 6.30 மணிக்கு நவநாள் திருப்பலியும், மறையுரையும் நடந்தது. நேற்று காலை, 8.30 மணிக்கு, மறை மாவட்ட முதன்மை குரு, பிலவேந்திரம் தலைமையில், திருவிழா திருப்பலி நடந்தது. மாலை, 6.30 மணிக்கு, ராசிபுரம் பங்குத்தந்தை தியோடர் செல்வராஜ் தலைமையில், கூட்டுத்திருப்பலி கோலாகலமாக நடந்தது. இரவு, 7.30 மணிக்கு, கிறிஸ்து அரசர் ஆடம்பரத் தேர்பவனி மற்றும் நற்கருணை ஆசீர் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் எழுந்தருளிய கிறிஸ்து அரசர், நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மெழுகு வர்த்தி ஏற்றியும், மாலை அணிவித்தும் புனிதரை வணங்கினர். விழாவை முன்னிட்டு, மறைக்கல்வி கண்காட்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, பங்குத்தந்தை பிரான்சிஸ், பங்கு மக்கள் செய்திருந்தனர்.