திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.2 கோடியில் புதிய தங்கசப்பரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2013 10:11
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவிலுக்கு ஆவணி, மாசித் திருவிழா விற்கு புதிய தங்கச் சப்பரம் செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. வரும் மாசித்திருவிழா ஏழாம் நாளில் புதிய தங்க சப்பரம் வீதி உலா வர உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மற்றும் மாசித்திருவிழாக்களில்7-ம் திருநாளன்று சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். சுவாமி எழுந்தருளும் தற்போது உள்ள தங்கச் சப்பரம் சுமார் 90 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இப்போது உபயதாரர் நிதியில் இருந்து சுமார் 2 கோடி செலவில் புதிய தங்கச்சப்பரம் செய்யும் பணி கடந்த சில் மாதங்களாக நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் சிவன் கோவிலில் வைத்து நடைபெறும் சப்பரம் செய்யும் பணியில் மயிலாடுதுறையைச் சேர்ந்த ஏஆர்சி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.பழைய சப்பரத்தின் பாரம்பரியம் மாறாத வகையில் 8.75 அடி உயரமும், 8.25 அடி அகலத்துடன் சப்பரம் உருவாகி வருகிறது. 6 கிலோ தங்கம், 200 கிலோ செம்பு, 50 கிலோ பித்தளை ஆகிய உலோகங்கள் மற்றும் 2500 கிலோ பர்மா தேக்கு மரங்களால் சப்பரம் செய்யப்பட்டு வருகிறது. இப்பணியை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன் நேற்று பார்வை யிட்டார். சப்பரத்தின் பணிகள் நிறைவு பெற்று, வரும் மாசித்திருவிழா ஏழாம் நாளில் புதிய சப்பரம் வீதி உலா வர உள்ளதாக அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியின் போது மணியம் தமிழரசன், சப்பர மேற்பார்வையாளர்கள் மணி, கவிராயர் பாலா, நகர கூட்டுறவு வங்கிச்செயலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.