தாழமண் தந்திரிகள் தான் சபரிமலையில் அனைத்து பூஜைகளுக்கும் தலைமை வகிப்பவர்கள். கேரளாவில் தர்ம சாஸ்தா கோயில்களில் எல்லா கர்மங்களுக்கும் இவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. இந்த தாழமண் குடும்பத்தினர் கேரளாவில் கோயில்களை நிர்வகிக்க பரசுராமனால் அழைத்து வரப்பட்டவர்கள். சத்திரிய வதத்தால் ஏற்பட்ட பாவத்தை களைய பரசுராமன் கேரளாவை படைத்தார். அதை பிராமணர்களுக்கு தானம் செய்தார். பரசுராமர் கேரள நாட்டை பாதுகாக்க 108 துர்க்கா கோயில்களையும், 108 சிவாலயங்களையும், ஐந்து சாஸ்தா கோயில்களையும் கட்டினார். இதற்காக ஆந்திராவில் கிருஷ்ணா நதிக்கரையில் இருந்து இரண்டு பிராமண சகோதரர்களை அழைத்து வந்தார். வரும் வழியில் இவர்களை பரீட்சித்து பார்க்க முடிவு செய்த பரசுராமர் தனது சக்தியால் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தினார். பின்னர் அந்த சகோதரர்களிடம் நதியை கடக்க சொன்னார். இருவரும் பிரார்த்தனையில் மூழ்கினர்.
மூத்தவர் தனது சக்தியால் தண்ணீரின் மேல்பகுதி வழியாக நடந்து சென்றார். இளையவர் தனது சக்தியால் தண்ணீரை தடுத்து நிறுத்தி மண்ணின் மீது நடந்து சென்றார். இதனால் மூத்தவர் தரணநல்லுரம் என்றும், இளையவர் தாழமண் என்றும் அழைக்கப்பட்டனர். தாழமண் குடும்பத்துக்கு சாஸ்தா கோயில் பூஜைக்காக தந்திரி உரிமை வழங்கப்பட்டது. தற்போது தாழமண் குடும்பத்தில் நான்குபேர் உள்ளனர். கண்டரரு நீலகண்டரரு, கண்டரரு மகேஸ்வரரு, கண்டரரு மோகனரரு, கண்டரரு மகேஸ்வரரு ஆகியோர் தாந்திரிக பூஜைகளை கவனித்து வருகின்றனர். இந்த குடும்பத்தின் ஆண் வாரிசுகள் அனைவரும் சபரிமலை மற்றும் சாஸ்தா கோயில் பூஜை பணியில் ஈடுபடுகின்றனர். தாழமண் குடும்பம் பிரதிஷ்டை செய்த கோயில்கள் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ளது. தாழமண் குடும்பத்தினர் செங்கன்னூர் அருகே பம்பா நதிக்கரையில் உள்ள முண்டக்காவு கிராமத்தில் வசித்து வருகின்றனர்.