பதிவு செய்த நாள்
03
டிச
2013
10:12
உடுமலை: மேற்கு தொடர்ச்சி மலையில், பெய்த திடீர் மழை காரணமாக, உடுமலை அருகே, பஞ்சலிங்க அருவியில், பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், திருமூர்த்திமலையில், பஞ்சலிங்க அருவி உள்ளது. நேற்று அமாவாசை என்பதால், மலை அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, அதிகாலையில் இருந்தே பக்தர்கள் திரண்டனர். காலை, 9:00 மணிக்கு மேல், மேற்கு தொடர்ச்சி மலையில், பெய்த திடீர் மழை காரணமாக, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அருவியில் குளித்துக் கொண்டிருந்த, 20க்கும் மேற்பட்ட பக்தர்களை வெளியேற்றிய கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், அங்கு செல்ல தடை விதித்தனர். கடந்த, 2009ல், இந்த அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி, 11 பக்தர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.