பதிவு செய்த நாள்
03
டிச
2013
11:12
விழுப்புரம்: திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் திருத்தேர் செய்யும் பணிக்கு, விழுப்புரத்தை சேர்ந்த பக்தர் 25 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார். விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் தேர், கடந்த 350 ஆண்டுகளுக்கு முன் தயார் செய்யப்பட்டது. இதனால் சேதமடைந்த, இந்த தேர் கடந்த இரண்டாண்டுகளாக பங்குனி உத்திரத்தின் போது இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. புதிய தேர் செய்யும் பணிக்கு, இந்து அறநிலையத் துறை மூலம் 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு, மொத்தம் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் செய்யும் பணி நடக்கிறது. தேக்கு, இலுப்பை, வேங்கை, வாகை மற்றும் மஞ்சள் படப்பை ஆகிய ஐந்து வகையான மரங்களைப் பயன்படுத்தி, கடந்த இரண்டு மாதமாக தேர் செய்து வருகின்றனர். திருச்சி பெல் நிறுவனம் மூலம், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் சக்கரம் மற்றும் அச்சு தயார் செய்யப்படுகிறது. இந்நிலையில் தேர் செய்யும் பணிக்கு விழுப்புரம், விராட்டிக்குப்பம் பாதையைச் சேர்ந்த வெங்கடேச ஆசாரி என்பவர் நேற்று, 25 ஆயிரம் ரூபாயை, தேர்ப்பணி பொறுப்பாளர் குபேரனிடம் வழங்கினார். கள்ளக்குறிச்சி ஸ்தபதியார் கோவிந்தசாமி தலைமையில், மதுரை, ஆத்தூர், சின்னசேலம் பகுதிகளைச் சேர்ந்த பத்து சிற்பிகள், 32 அடி உயரமுள்ள தேரை விரைவாக செய்து வருகின்றனர். பணிகள் விரைவில் முடிந்து, வரும் பங்குனி உத்திரத்தின் போது தேர் பவனி நடக்கவுள்ளது.