ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமியின் அஜாமிளன் சரித்திர சொற்பொழிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2013 10:12
தூத்துக்குடி: தூத்துக்குடி நாமத்வார் பிரார்த்தனை மையம் சார்பில் சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடக்கும் 7- நாள் சொற்பொழிவின் 3-ம் நாளான நேற்று ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமி, அஜாமிளன் சரித்திரம் குறித்து சொற்பொழிவு ஆற்றினார். அதில், சுவாமி கூறியதாவது,"" அஜாமிளன் சரித்திரம் முழுவதும் நாராயண நாமத்தின் பெருமையை குறிக்கிறது. நாராயணா, ராமா, கிருஷ்ணா, கோவிந்தா என்று பகவானின் நாமங்களை நாவில் விடாப்பிடியாக இருத்தி வைத்திருக்கும் ஒருவன் எத்தகைய பாவங்கள் செய்தாலும், வேளை வரும் போது அவனை திருத்தி பகவான் ஆட்கொள்வார். முதலையின் பிடியில் மாட்டிக் கொண்ட கஜேந்திரன் என்ற யானை பகவானின் நாமத்தை கூறியதால் அது மோட்சம் அடைந்தது. அது போல தினமும் நாமசங்கீர்த்தனம் செய்யும் பக்தர்களுக்கு பாவம் செய்யும் எண்ணம் படிப்படியாக குறைந்து நல்ல எண்ணங்கள் தோன்றுவதை யாராலும் தடுக்க முடியாது. உதாரணமாக களவு தொழில் மூலம் வந்த பொருட்களை கொண்டு நாராயண சேவை செய்த திருமங்கை ஆழ்வாரை திருத்தும் பொருட்டு அவருடைய காதில், நாராயணா என்ற நாமத்தை எம்பெருமாள் உறைத்தார். நாராயண நாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் திருமங்கை ஆழ்வாரிடம் இருந்து களவு எண்ணம் நீங்கியது. தினமும் நாம சங்கீர்த்தனம் செய்து வாழும் ஒருவனின் அரிபக்தி ஒன்றே பாவத்தைப் போக்கும். கோவிலுக்கு சென்று மூர்த்தி வடிவாக இருக்கும், எம்பெருமாளை வணங்குவதற்கு ஈடானது அவரின் நாமத்தை நாவில் இருத்தி அனுதினமும் உச்சரிப்பது. எனவே அனைவரும் தினமும் நாமசங்கீர்த்தனம் செய்யுங்கள். இவ்வாறு கூறினார். இன்று பிரகளாத சரித்திரம் குறித்த சொற்பொழிவை முரளிதர சுவாமி நிகழ்த்துகிறார்.