பதிவு செய்த நாள்
05
டிச
2013
10:12
தஞ்சாவூர்: திருப்பூந்துருத்தி ஸ்ரீ நாராயண தீர்த்தர் ஆராதனை விழா கமிட்டி சார்பில் மாநில அளவில் இளம் இசை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், தரங்க இசைப்போட்டி தஞ்சையில் வரும், 25ம் தேதி நடக்கிறது. இதில், ஆர்வம் உள்ள இளம் கலைஞர்கள் பங்கேற்கலாம், என, கமிட்டி பொருளாளர் அனந்தராமன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, திருப்பூந்துருத்தி ஸ்ரீ நாராயண தீர்த்தர் ஆராதனை விழா கமிட்டி பொருளாளர் அனந்தராமன் மேலும் கூறியதாவது: ஸ்ரீ நாராயணதீர்த்தர் அருளிய கிருஷ்ண லீலா தரங்கிணி கீர்த்தனைகளை இளம் சந்ததியினரிடம் பரப்பும் நோக்கத்தில் திருப்பூந்துருத்தி ஸ்ரீ நாராயண தீர்த்தர் ஆராதனை விழா கமிட்டி ஒவ்வொரு ஆண்டும், மாநில அளவில் மாணவ, மாணவியருக்கு இடையே தரங்க இசைப்போட்டி நடத்துகிறது. அதன்படி, நடப்பாண்டும் இசைப்போட்டிகள் வரும், 25ம் தேதியன்று, தஞ்சை மேலவீதியிலுள்ள ராஜராஜ சமய சங்க திருமண மண்டபத்தில் நடக்கிறது. டிசம்பர், 25ம் தேதி, காலை 9 மணி முதல் போட்டிகள் துவங்கி நடக்கிறது. எட்டு வயது முதல், 12 வயது வரை உள்ள மாணவ, மாணவியர் இளையோர் பிரிவிலும், 13 வயது முதல், 16 வயது வரை உள்ளோர் மேலோர் பிரிவிலும் போட்டிகளில் பங்கேற்கலாம். இளையோர் பிரிவில் பங்கேற்போர், குறைந்தது 3 தரங்கங்கள் பயின்றிருக்க வேண்டும். மேலோர் பிரிவில் பங்கேற்க, 5 தரங்கங்கள் பயின்றிருக்க வேண்டும்.ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ, மாணவியருக்கு, 2014 மார்ச் மாதம் திருப்பூந்துருத்தியில் நடக்கும் ஆராதனை விழாவில் பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்க விரும்பும் இளம் இசை கலைஞர்கள் வரும் 15ம் தேதிக்குள், தங்களது வயது சான்றிதழுடன், அனந்தராமன், பொருளாளர், ஸ்ரீ நாராயண தீர்த்தர் ஆராதனை கமிட்டி, 1090, பாப்பண்ணா சந்து, தஞ்சாவூர் என்னும் முகவரியிலோ, போன் நம்பர் - 04362 234448 மற்றும் 99440 82946 மொபைல் ஃபோனில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.