பதிவு செய்த நாள்
06
டிச
2013
11:12
பழநி: பழநி கிரிவீதி பாதையை மறைத்துக்கொண்டு, இருசக்கர வாகனங்கள், தட்டுகளில் பொருட்கள் விற்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் சென்றுவருவதில் சிரமம் ஏற்படுதுடன் வியாபாரிகள் தொந்தரவு செய்வதும் அதிகரித்துள்ளது. ஐயப்ப சீசன், எதிரொலியாக பழநிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பொம்மை, பேன்சி பொருட்கள், சுவாமிசிலைகள், அல்வா போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்காக ஏராளமான தற்காலிக வியாபாரிகள் பழநியில் குவிந்துள்ளனர். இவர்கள், கிரிவீதியில் ரோட்டின் நடுவே, கொய்யப்பழம், ஐஸ் போன்றவற்றை இருசக்கரவாகனங்களில் வைத்து, விற்பனை செய்கின்றனர். இவர்கள், போலீசார், கோயில் பாதுகாவலர்கள் வரும்போது, இடத்தை விட்டு நகர்ந்துவிடுகின்றனர். தட்டு வியாபாரிகள், துணிப்பைகள், பாசிமணிகள், கருப்புகயிறு, சுவாமி படங்கள் போன்றவற்றை மலைக்கோயிலிருந்து பக்தர்கள் கீழே இறங்கிவரும் போது வலுக்கட்டாயமாக வாங்க வலியுறுத்தி தொந்தரவு செய்கின்றனர். இவர்கள், வெள்ளி என, முலாம் பூசப்பட்ட போலிபொருட்களை விற்பனை செய்கின்றனர். கிரிவீதிகளில் நிரந்தர ஆக்கிரமிப்புக்களை அகற்றி பக்தர்கள் இடையூறின்றி சென்றுவர நகராட்சி மற்றும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.