சபரிமலை: சன்னிதானம் அருகே யானைகள் நடமாட்டம் இருப்பதை தொடர்ந்து மதியத்துக்கு பின்னர் புல்மேடு வழியாக பக்தர்கள் வந்து செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. சபரிமலை சன்னிதானம் அருகே உரக்குழி என்ற இடத்தில் நேற்று பகல் 12 மணி வாக்கில் ஐந்து யானைகள் வந்தது. இந்த தகவல் தெரிந்ததும் வனத்துறை அதிகாரி மணிலால் தலைமையில் ஊழியர்கள் அங்கு சென்றனர். யானைகள் காட்டின் சற்று உட்பகுதியில் நிற்பதை பார்த்த அதிகாரிகள் வெடிகளை வெடித்து காட்டின் உட்பகுதிக்கு விரட்டினர். நடப்பு சீசனில் சன்னிதானம் அருகே யானைகள் வருவது இதுவே முதல்முறையாகும். அரவணை மற்றும் அப்பம் தயாரிக்க வாங்கப்படும் சர்க்கரை சாக்குகளை பாண்டித்தாவளம் அருகே குப்பைகளை எரிக்கும் இடத்தில் போட்டு வைத்துள்ளனர். இதன் மணம் தெரிந்து யானைகள் வந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். யானைகள் நடமாட்டம் தொடங்கியுள்ளதை தொடர்ந்து புல்மேடு வழியாக வந்து செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மதியத்துக்கு பின்னர் பக்தர்கள் புல்மேடு வழியாக வந்து செல்ல வேண்டாம் என்று வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. காலையில் வரும் பக்தர்கள் கூட்டமாக வரவேண்டும். இதுபோல பத்தணந்திட்டை- பம்பை ரோட்டில் ளாகா பகுதியை கடக்கும் போது பல இடங்களிலும் யானைகள் பற்றிய முன்னறிவிப்பு போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் யானைகள் ரோட்டை கடக்கும் என்பதால் வேகம் குறைவாக செல்ல வேண்டும் என்று போர்டு வைக்கப்பட்டுள்ளது.