சபரிமலை: டிச.ஆறு பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சபரிமலையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. சபரிமலையின் ஒவ்வொரு மூலையும் நவீன கருவிகளால் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீகோயில், 18-ம் படி, கொடிமரம், சோபானம் ஆகிய இடங்கள் கேரள போலீஸ் மற்றும் மத்திய அதிவிரைவு படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் கோயிலை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர். மத்திய ரிசர்வ் போலீசாரின் அதிரடிப்படை பிரிவினருக்கு எவ்வித நெருக்கடியையும் எதிர் கொள்வதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோயிலின் எல்லா வாசல்களிலம் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. நடைப்பந்தலில் எக்ஸ்ரே ஸ்கேனர்களில் பக்தர்களின் பைகள் ஸ்கேன் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வந்துள்ள போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சன்னிதானத்தின் சுற்றப்புறங்களில் உள்ள குப்பை தொட்டிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மெட்டர் டிடெக்டர் மற்றும் நவீன கருவிகளால் சோதனை செய்யப்பட்டு வருகிறது. குப்பை கூட்டப்பட்டிருக்கும் இடங்களையும் போலீசார் விட்டுவைக்கவில்லை. கடைகளில் அடையாள அட்டை இல்லாமல் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வெளியேறி விட்டனர்.பம்பையில் கணபதி கோயில் அருகில் அனைத்து பக்தர்களும் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு பின்னரே மலையேற அனுமதிக்கப் பட்டனர். சன்னிதானத்தில் அறைகளில் தங்கியிருப்பவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டு அவையும் போலீசாரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.