பதிவு செய்த நாள்
05
டிச
2013
10:12
சபரிமலை: சபரிமலைக்கு பொருட்கள் கொண்டு செல்ல ரோப் கார் அமைக்கும் திட்டம், குறித்து டிச., 19 ல் நடக்கும் தேவசம் போர்டுஉயர்மட்ட கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. பம்பையிலிருந்து, சன்னிதானத்துக்கு தேவையான பொருட்கள், கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. அவை சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தியதால், மனிதர்கள் மூலம் தலைச்சுமையாக கொண்டு வந்தனர். இதில் செலவு அதிகமானது; பொருட்கள் வந்து சேருவதிலும் சிக்கல் இருந்தது. நடை அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் மட்டுமே இயக்கப்பட்ட டிராக்டர்கள், "மண்டலம், "மகர விளக்கு காலங்களிலும் இயக்கப்படுகின்றன. ஆனால், பக்தர்கள் கூட்டத்தில் டிராக்டர் செல்வதால், விபத்து வாய்ப்பு உள்ளது. "பொருட்களை சபரிமலை கொண்டு செல்ல, "ரோப் கார் அமைப்பது தான் சிறந்த வழி என்ற முடிவுக்கு தேவசம்போர்டு வந்துள்ளது. பம்பையில் துவங்கும் இந்த "ரோப் வே, சன்னிதானத்தின் பிரசாத மண்டபத்தின் பின்புறம் வந்து சேரும் வகையில், திட்டம் தயாரிக்கப்பட்டு, ஆய்வு பணிகள் முடிந்துள்ளன. திட்டத்தை செயல்படுத்த, 2 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. "சபரிமலை மாஸ்டர் பிளான் திட்டத்தை செயல்படுத்த நியமிக்கப்பட்டுள்ள, உயர்மட்டக்குழு தலைவர் ஜெயக்குமார் தலைமையில், டிச., 19 ல், சன்னிதானத்தில் கூட்டம் நடக்கிறது இதில், "ரோப் கார் திட்டத்துக்கு அனுமதி கிடைத்தால், அடுத்த "மண்டல காலத்திற்குள் செயல்படுத்த தேவசம்போர்டு திட்டமிட்டுள்ளது.