கெடுபிடிகள் அதிகரிப்பு: 24 மணி நேர கண்காணிப்பில் சன்னிதானம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2013 12:12
சபரிமலை: டிச.ஆறு பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சபரிமலையில் பாதுகாப்பு கெடுபடி அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலை சன்னிதானம் புதிய விளக்குகள் பொருத்தப்பட்டு 24 மணி நேர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் ஸ்ரீகோயில், 18-ம் படி, கொடிமரம், சோபானம் ஆகிய இடங்கள் கேரள போலீஸ் மற்றும் மத்திய அதிவிரைவு படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் கோயிலை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர். கோயிலின் எல்லா வாசல்களிலம் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. நடைப்பந்தலில் எக்ஸ்ரே ஸ்கேனர்கள் நிறுவப்பட்டுள்ளது. கேரள போலீசின் சிறப்பு புலனாய்வு போலீசார் 150 பேர் வந்துள்ளனர். இவர்கள் பக்தர்கள் வேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவர்களுடன் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வந்துள்ள போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சன்னிதானத்தில் அடையாள அட்டை இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேவைப்பட்டால் பக்தர்களின் இருமுடி கட்டு மற்றும் பொருட்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். சந்தேகப்படும் வகையில் யாரை கண்டாலும் அவர்களை உடனடியாக போலீசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரிக்கப் படுவார்கள். இதுபோல பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பம்பையில் கணபதி கோயில் அருகில் அனைத்து பக்தர்களும் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு பின்னரே மலையேற அனுமதிக்கப் படுவார்கள். சபரிமலையை சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இங்கு கேரள போலீசும், மத்திய போலீசும் இணைந்து ரெய்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட கேரள போலீஸ் ஏடிஜிபி ஹேமச்சந்திரன் இன்று முதல் இரண்டு நாட்கள் சபரிமலையில் முகாமிடுகிறார்.