பதிவு செய்த நாள்
09
டிச
2013
10:12
சபரிமலை: சபரிமலை பக்தர்களுக்கான, காப்பீடு (இன்சூரன்ஸ்) தொகை, ஒரு லட்சத்திலிருந்து, இரண்டு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது, என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆணையர், வேணுகோபால் கூறினார். அவர் கூறியதாவது: சபரிமலையில், நடப்பு மண்டல காலத்தில், தொடக்கம் முதலே, பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், அப்பம் இருப்பு குறைந்து விட்டது. தற்போது, 25 ஆயிரம், "பாக்கெட் அப்பம் மட்டுமே உள்ளது. அதனால், அப்பம் வினியோகத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்தருக்கு, அதிக பட்சமாக, 30 பாக்கெட் அப்பம் மட்டுமே வழங்கப்படும். அப்பம் உற்பத்தியை அதிகரிக்க, கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படுவர். எருமேலி - பம்பை இடையேயான, கரிமலையில், தேவசம்போர்டு சார்பில், அன்னதானம் வழங்கப்படும். சபரிமலையில் செய்ய வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக, பக்தர்களிடம் இருந்து ஆலோசனைகள் பெற, சன்னிதான சுற்றுப் புறங்களில், ஐந்து இடங்களில் கருத்துக்கேட்பு பெட்டிகள் அமைக்கப்படும். சபரிமலை வரும் பக்தர்கள், விபத்தில் மரணம் அடைந்தால், வழங்கப்பட்டு வந்த காப்பீடு தொகை, இரண்டு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.