சபரிமலை: சபரிமலையில் மண்டல மகரவிளக்கு காலத்தில் தேவசம்போர்டு ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் என 4 ஆயிரத்து 600 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தேவசம்போர்டுதான் உணவு வழங்குகிறது. போலீசாருக்கு மட்டும் தனியாக மெஸ் செயல்படுகிறது. 18 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்குள்ள ஊழியர்களுக்கு காலையிலும், மாலையிலும் கஞ்சி, மதியம் சாப்பாடு வழங்கப்பட்டது. பின்னர் அது காலையில் இட்லியாக மாற்றப்பட்டது. இதற்காக தினமும் 400 கிலோ அரிசி, 200 கிலோ உளுந்து அரைக்கப்பட்டு 30 ஆயிரம் இட்லி தயாராகிறது. இரவு 11 மணிக்கு நீராவி அடுப்பில் இட்லி வேக வைக்க பணி தொடங்கி, மறுநாள் அதிகாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இது முடிந்த உடன், மதியத்துக்கான சாப்பாடு தயாராகும். 3 வகை கூட்டுகளுடன் சாப்பாடு வழங்கப்படும். இரவு கஞ்சியும், பயறும் வழங்கப்படும். நீராவி அடுப்புகளுடன், விறகு அடுப்புகளும் பயன்படுத்தப்படுகிறது. கேரள மாநிலம் ஹரிப்பாடு இடத்தை சேர்ந்த கோபி என்பவர் தலைமை சமையலர். இவரது கீழ் 105 பேர் இரவு பகலாக சமையல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.